நெய்த்தீபம் யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோய

நெய்த்தீபம்

யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோயில் பூஜை, மடாலயங்களில் பூஜை என்ற ரூபத்தில் நடந்துவருவதால் நெய்த்தீபம் ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாமே பால் தோய்த்து வெண்ணெய் எடுத்து சுத்தமான பசு நெய் தயாரித்துக் கோயில்களுக்கும், மடாலயங்களுக்கும் கொடுப்பது பரம புண்யம். நெய் விளக்கின் ஜ்யோதிஸ் வெளுப்பாக வெளியே வீசுகிற மாதிரியே உள்ளுக்குள்ளேயும் பவித்ரத்வத்தை ஊட்டும். தெய்வ ஸந்நிதானத்தில் அது இருப்பது ரொம்பவும் விசேஷம். கோயில்களில் சுக்ரவாரங்களிலாவது நெய்த் தீபம் எரியுமாறு ஏற்பாடு செய்யவேண்டியது பக்தலோகத்தின் கடமை. கோமாதா நமக்குப் பல விதங்களிலும் பரம கருணையோடு செய்ய முன் வரும் உபகாரங்களில் எதையும் நாம் தவறவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அவளிடமிருந்து பெறவேண்டியதையும் தவறவிட்டு, அல்லது தப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்கு நாம் தர வேண்டிய ரக்ஷணையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்படியில்லாமல், பரஸ்பரம் பாவயந்த: என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி* பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும்.

இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு எப்படித் துடித்துக் கொண்டு போகிறதோ அந்தத் துடிப்புடன் நாம் கோஸம்ரக்ஷணையில் முனைய வேண்டும்.