நாடகமும் உணர்ச்சிகளும் எந்த நாடகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் எல்லாவிதமான உணர்ச்சிகளும் கலந்து கலந்து வரும் ஒரே உணர்ச்சி நாடகம் முழுவதும் இருந�

நாடகமும் உணர்ச்சிகளும்

எந்த நாடகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் எல்லாவிதமான உணர்ச்சிகளும் கலந்து கலந்து வரும். ஒரே உணர்ச்சி நாடகம் முழுவதும் இருந்தால் சலிப்புத் தட்டிவிடும். எல்லா உணர்ச்சிகளும் சமமாக வந்தாலும் அதனால் மனஸில் நிலையான ரஸாநுபவம் ஏற்படாமல் ஒன்றையொன்று அடித்துக் கொண்டு போய்விடும். எல்லாமே கடைசியில் பிசுபிசுத்துப் போய்விடும். அதனால் ஒவ்வொரு நாடகத்தில் ஒவ்வொரு உணர்ச்சி பிரதானமாக இருக்கும். பாட்டுக்காரனுக்குப் பக்கவாத்தியங்கள் மாதிரி மற்ற உணர்ச்சிகளும் இதற்கு அநுகூலமாகக் கவிந்து கவிந்து வரும். ‘வேணி ஸம்ஹாரம்’ என்ற பட்ட நாராயணருடைய நாடகத்தை எடுத்துக் கொண்டால் அதில் வீரம்தான் பிரதானமாக இருக்கும். இருந்தாலும் அதிலும் கொஞ்சம் சோகம், ஹாஸ்யம் முதலான எல்லாமும் வரத்தான் செய்யும். பவபூதி, ஸ்ரீராமன் விஷயமாக ‘மஹாவீர சரிதம்’, ‘உத்தர ராம சரிதம்’ என்று இரண்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார். ‘மஹாவீர சரிதம்’ அதன் பேருக்கு ஏற்ற மாதிரி வீர ரஸப் பிரதானமானது. இதிலே ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் வீரப் பிரதாபத்தை முக்கியமாகக் காட்டுகிறார். நாம் ‘மஹாவீர்’ என்றால் ஜைன மத ஸ்தாபகரை நினைத்துக் கொள்வோம். வடக்கத்திக்காரர்கள் ‘மஹாவீர்’ என்றால் ஹநுமானை நினைப்பார்கள். பவபூதி சொல்கிற மஹாவீரரோ ஸாக்ஷாத் ராமரே தான். தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காகவே ஏற்பட்ட ராமருடைய வீரப் பிரதாபத்தை ஒரு நாடகத்தினால் சித்திரித்துக் காட்டினார் பவபூதி. இவரே ‘உத்தர ராம சரித’ நாடகத்தில், ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்குப் பின் ஸீதா தேவியை வனத்துக்கு அனுப்பியது முதலான சம்பவங்களைச் சொல்லும்போது நம்மை ஒரேயடியாகச் சோகத்தில் உருகிப் போகும்படி பண்ணுகிறார். ‘உவமைக்குக் காளிதாஸன்’ (உபமா காளிதாஸஸ்ய) என்பது போல், ‘கருணைக்கு பவபூதி’ (காருண்யம் பவபூதிரேவ) என்று சொல்லும்படியாக, அப்படி நெஞ்சைத் தொடும்படி சோகத்தை வர்ணிப்பார். காவியங்களில் ‘நவரஸம்’ என்பதில் ‘கருண’ என்றால் ‘சோகம்’ என்றே அர்த்தம். இப்போது நாம் இரக்கம், தயை என்கிற அர்த்தத்தில் கருணை என்பதைப் பிரயோகிக்கிறோம். இந்த ரஸத்துக்கு பவபூதியிலிருந்து ஓர் உதாரணம் சொல்கிறேன்.

புலம்பி அழாமல், மனஸ் வெதும்பித் தன்னைத் தானே குத்திக் காட்டிக் கொண்டு, கொஞ்சம் ஹாஸ்யம் கலந்த மாதிரி பேசுகிற போது அதனுடைய சோகம் நேராக அழுவதைவிட ஆழமாக நம் நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.
ராமனை இப்படிப் பேச வைக்கிறார் பவபூதி, ‘உத்தர ராம சரித்ர’த்தில்:
ஹே ஹஸ்த… ராமஸ்ய காத்ரமஸி நிர்பர கர்ப்ப கின்ன –
ஸீதா விவாஸன படோ: கருணா குதஸ்தே?
சம்பூகன் என்பவனைக் கொல்வதற்காக ராமர் வாளை உருவிய கட்டத்தில் அவரை இப்படிப் பேச வைக்கிறார் பவபூதி. சம்பூகனை ஏன் கொல்லப்போனார் என்றால் அவன் தன்னுடைய சமூக ஸ்தானத்துக்கு தகாத உக்ர தபஸை மேற்கொண்டிருந்தான். அதனால் லோக தர்மமே பாதிக்கப்பட்டதால்தான், தர்மராஜ்யமே ராமராஜ்யம் என்று நடத்திய ராமர் அவனைக் கொல்லப் போனார். அவன் யோக்கியதை மீறிப் பண்ணினான் என்றாலும் அவன் பண்ணினதோ ரொம்பவும் உத்தம விஷயமான தபஸ்! ஆகையால் தபஸ் செய்து கொண்டிருக்கும் சம்பூகன் மேல் வாளைப் பிரயோகிக்க ராமருடைய கை தயங்குகிறது. அப்போது ராமர் அந்தக் கையைப் பார்த்துச் சொல்வதாகக் கவி சொல்கிறார்: ‘ஹே ஹஸ்தமே, கையே! உனக்கு இரக்கம் ஒரு கேடா? நீ ராமனுடைய சரீரத்தின் அங்கமாக்கும்! அந்த ராமன் எப்படிப்பட்டவன்? நிறைகர்ப்பமான ஸீதையை நிர்தாக்ஷிண்யமாகக் காட்டுக்கு விரட்டியவன். அப்படிப்பட்டவனுக்கு அங்கமாக இருக்கிற கையே, உனக்குத் தயை எதற்கு? தாக்ஷிண்யம் எதற்கு?”

இம்மாதிரி ராமனை ஆத்ம நிந்தை பண்ணிக் கொள்ள வைக்கும்போதே, சோக ரஸத்தை மட்டுமில்லாமல், உள்ளூர ராமனுக்கு ஸீதையிடம் அன்பு இருந்த போதிலும் ராஜதர்மத்துக்காகவே அவர் அவளைத் திரஸ்காரம் செய்தார் என்பதையும் நாம் உணரும்படியாகப் பண்ணிவிடுகிறார். நிந்தை மூலமே கதாபாத்திரத்தின் குணத்தை (character) காட்டுகிறார். நமக்குத் தர்மத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்.