கதாநாயகன் விதூஷகன், காமாதுரன் இப்படிப்பட்ட பல தினுசான பாத்திரங்கள் ஒரு நாடகத்தில் இருந்தாலும் முக்கியமான பாத்திரத்தை குணத்தில் உயர்த்திக் காட்டு

கதாநாயகன்

விதூஷகன், காமாதுரன் இப்படிப்பட்ட பல தினுசான பாத்திரங்கள் ஒரு நாடகத்தில் இருந்தாலும் முக்கியமான பாத்திரத்தை குணத்தில் உயர்த்திக் காட்டுவதும், அதன் மூலம் அந்தக் குணத்தில் நமக்குப் பிடிப்பு உண்டாகச் செய்வதும், தர்மங்களைச் சொல்வதும் தான் நல்ல நாடகத்துக்கு லக்ஷ்யமாக இருந்தது. நாடக இலக்கியம் என்பது ஸம்ஸ்க்ருதத்தில் மஹா பெரிசாகப் பரந்து விரிந்து இருந்ததில் பல தினுஸான கதா நாயகர்களும் இருக்கத்தான் செய்தார்கள் என்றாலும், அவர்களில் ‘தீரோதாத்தன்’ என்பதாக தீரம், நல்ல குணம் இரண்டிலும் ச்ரேஷ்டமானவனையும் ‘தீரப்ரசாந்தன்’ என்பதாக தீரம், சாந்தம் இரண்டும் ஒன்று கூடியிருப்பவனையுந்தான் ‘ஐடியல் ஹீரோ’க்களாகக் கொண்டாடினார்கள். உத்தமமான நாடகாசிரியர்கள் உத்தமமான இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் மூலம் ஜனங்களுக்கு தர்ம வழிகளை கண்ணுக்கு முன்னாடி ரஸித்துப் பார்க்கும்படியாகக் காட்டினார்கள்.