நவரஸம்; சாந்தம் ஒரு காவியம் அல்லது நாடகம் என்றால் அதில் ஒரு கதை, Plot இருக்கிறது அநேக ஸம்பவங்கள் வருகின்றன இயற்கை வர்ணனைகள் இருக்கின்றன உவமை போன்ற அணி

நவரஸம்; சாந்தம்

ஒரு காவியம் அல்லது நாடகம் என்றால் அதில் ஒரு கதை, Plot இருக்கிறது. அநேக ஸம்பவங்கள் வருகின்றன. இயற்கை வர்ணனைகள் இருக்கின்றன. உவமை போன்ற அணிகள், எதுகை மோனை போன்ற சொல் ஜாலம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் அதற்கு உயிர் இல்லை. ‘ரஸம்’ என்ற உணர்ச்சி அநுபவம்தான் உயிர் என்று வைத்தார்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனை சொல்லழகு இருந்தாலும் அது கவிதையாகிவிடாது, ‘ரஸம்’ இருந்தால்தான் அது கவித்தன்மை பெறும் – ‘வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்” என்று ஒரு பெரிய ‘கிரிடிக்’ சொல்லியிருக்கிறார்*. இந்த ரஸங்களின் கணக்கில் இரண்டு தினுசான அபிப்பிராயங்கள் உண்டு. ஒரு சாரார் எட்டு ரஸம் என்பார்கள். இன்னொரு சாரார் ஒன்பது ரஸம் (நவரஸம்) என்பார்கள். சிருங்காரம், ஹாஸ்யம், கருண (சோகம்), ரௌத்திரம் (கோபம்), வீரம், பயானகம் (அச்சம்), பீபத்ஸம் (அருவறுப்பு), அத்புதம் (அற்புதம்) என்ற எட்டும் ரஸங்கள் என்பது ஒரு கட்சி. இவற்றோடு ‘சாந்தம்’ என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நவரஸக்காரர்களின் வாதம்.

சாந்தத்தை ரஸமாகச் சேர்க்காத ஆலங்காரிகர்கள் அதை மட்டமாக நினைத்தார்கள் என்று அர்த்தமில்லை. பார்க்கப் போனால் அவர்கள்தான் நவரஸக்காரர்களை விட அதை உயர்த்தியாக மதித்தார்கள். நம் பண்பாடே சாந்தத்தில் நிறைந்து போவதுதான். “சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று மூன்று முறை சொல்லியே எந்த வைதிக காரியத்தையும் நாம் பூர்த்தி செய்கிறோம். அந்த சாந்த நிலையில், உணருகிறவன் – உணரப்படுவது என்ற பேதமில்லாமல் எல்லாம் அடங்கிப் போகிறது. ‘உணர்ச்சி என்பது ஒரு மனோபாவம், ஒருத்தனைப் பிடித்து ஆட்டுகிற நிலை. இதுவோ ஆட்டமெல்லாம் அடங்கிய நிலை. எனவே உணர்ச்சிமயமான மற்ற எட்டு ரஸங்களோடு இதை எப்படிச் சேர்ப்பது? ரஸம் என்றால் அதை ருசிக்கிற ரசிகனுக்கு அது வேறானது. இங்கே ரஸமும் ரஸிகனும் ஒன்றாக இருப்பதால், மற்ற எட்டோடு இதை வைப்பதற்கில்லை. இது மனஸின் ஸம நிலை; மற்றதெல்லாமோ – வீரமாகட்டும், சிருங்காரமாகட்டும், சிரிப்பாகட்டும், கோபமாகட்டும் – அவை எல்லாமோ மனஸின் கொந்தளிப்பு நிலை, அவை சித்தத்தைக் கலக்குகிறவை. நிலைத்து நீடித்து ஸ்திரமாக நிற்கிற ஆனந்தத்தை அவை உண்டாக்குவதில்லை. அவை தாற்காலிகமானவைதாம். மாறாத ஆனந்தம் சாந்தம்தான். இதை மற்றவற்றோடு சேர்க்கக்கூடாது. மற்ற ரஸங்கள் எல்லாம் பூர்த்தியாகிற இடமே அது’ என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

ரஸங்களில் ஒன்றாக இருக்கிற ஹாஸ்யம் வேறு, ஆனந்தம் வேறு. ஆனந்த ரஸம் என்று ஒன்று கிடையாது. அப்போதைக்கு ஒரு ஸந்தோஷத்தை உண்டாக்கிச் சிரிக்கப்பண்ணுவது ஹாஸ்யம். ஆனந்தம் என்பதுதான் நம் ஆதமாவின் ஸ்திரமான, சாசுவதமான ஸ்வபாவம். எதிலும் பட்டுக் கொள்ளாமல், துக்க லேசமேயில்லாமல், தன்னில் தானாக இருக்கிற சாந்த நிலையில் இருப்பதுதான் ஆனந்தம்.
அந்த ஆனந்தம் சூரிய வெளிச்சம்போல சர்வ வியாபகமாகப் பரந்து இருப்பது. ஆனால் நமக்கு அது தெரியவில்லை. மரத்தடியில் சூரிய வெளிச்சம் தெரியாத மாதிரி, மாயையின் நிழலில் இருக்கிற நமக்கு இந்த ஆனந்தம் தெரியவில்லை. மரக்கிளை ஆடும்போது இடுக்கு வழியே துளித்துளி வெளிச்சம் வருகிற மாதிரி கோபம், கர்மம், வீரம், பயம், சோகம் இத்யாதி உணர்ச்சிகள் ஆட்டம் போடுகிறபோது, ஆனந்தத்தின் ஒளி துளித்துளி நம் மேல் படுகிறது. நல்ல உணர்ச்சி, கெட்ட உணர்ச்சி எதுவானாலும் நாம் ஒன்றை உணருகிறோம் என்றால் அதற்கு ஆத்மாதானே அடிப்படை? அதனால் எந்த ரஸத்தை அநுபவித்தாலும், ஆத்மாவின் ஸ்வபாவமான ஆனந்தம் அதற்குள் கொஞ்சம் ‘டால்’ அடித்துக் கொண்டு தான் இருக்கும். இப்படியில்லாமல் மரத்தை விட்டு வெளியிலே வந்துவிட்டால், முழு ஸுர்ய வெளிச்சம். கிளைகள் பலவிதமாக ஆடுகிறபோது, பல தினுசாக விழுந்த துளித்துளி வெளிச்சமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த முழு வெளிச்சம் அதுதான்.

சூரிய வெளிச்சத்தில் கலர் இல்லை. அந்த மாதிரி சாந்தத்தில் தனியாக ஒரு உணர்ச்சி, ஒரு ரஸம் இல்லை என்பது ஒரு அபிப்பிராயம். ஆனாலும் ஸுர்ய வெளிச்சத்திலிருந்துதான் இத்தனை கலர்களும் வந்திருக்கின்றன. ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் ஸுர்ய வெளிச்சத்தைப் பிரித்து (split) பண்ணிப் பார்த்தால் அதிலிருந்தே ஏழு கலர்களும் வருவதைப் பார்க்கலாம். ஸயன்ஸ் நிபுணர்கள் ஸுர்ய வெளிச்சத்தில் இன்னின்ன கலர்கள் இன்னின்ன விகிதத்தில் இருக்கின்றன என்று அளவிட்டிருக்கிறார்கள். அதே விகிதத்தில், இந்த ஏழு கலர்களைக் கலக்கிற போதெல்லாம், அத்தனை கலர்களும் சேர்ந்து வெள்ளையாகி விடுகின்றன!

ஒவ்வொரு மூலப்பொருளை எலிமெண்டை எரிக்கிற போது அது ஒவ்வொரு விதமான கலரில் ஜொலிக்கிறது. இதே மாதிரி கெமிகல்களை எரிக்கிற போதும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலர் இருக்கிறது. சாதாரண நெருப்புக் குச்சியின் நெருப்பு மஞ்சளாயிருக்கிறது; ஆனால் பச்சை, சிவப்பு மத்தாப்புக் குச்சிகள் பச்சையாகவும் சிவப்பாகவும் எரிகின்றன. பெட்ரோல் காஸை எரித்தால் நீலமாக ஜ்வாலை வீசுகிறது. மயில் துத்தத்தை எரித்தால் பச்சைப் பசேல் என்றிருக்கிறது. எந்தெந்த எலிமென்டை எரித்தால் ஏழு வர்ணங்களில் ஒவ்வொன்றாக ஜ்வாலை வீசுமோ அந்த எலிமெண்ட்கள் எல்லாம் ஸுர்ய மண்டலத்தில் இருக்கின்றன; அவை எல்லாம் சேர்ந்து எரிவதால்தான் மொத்தத்தில் அது கலரே இல்லாத சுத்த வெளிச்சமாயிருக்கிறது என்று ஸயன்ஸ் நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த எலிமெண்ட் மட்டுமின்றிப் பூலோகத்தில் அதிகம் காண முடியாத ஹீலியம் (Helium) என்ற மூலப்பொருளும் ஸுர்யனில் இருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். லாடின் பாஷையில் ஹேலியோஸ் என்றாலே சூரியன் என்று அர்த்தம். சூரியனை மையமாகக் கொண்டுள்ள நம்முடைய பிரபஞ்சத்தையே இதனால்தான் ‘ஹீலியோ-ஸெண்ட்ரிக்’ என்று சொல்கிறோம். கடைசியில் இந்த ‘ஹீலியம்’ என்ற வார்த்தை எங்கேயிருந்து வந்தது என்று பார்த்தால் சம்ஸ்கிருதத்திலிருந்துதான். சம்ஸ்கிருதத்தில் ‘ஹேலி:’ என்றால் சூரியன். இதிலே வேடிக்கை, இந்த ஹீலியம் எரியவே எரியாது – Non-inflammable என்பார்கள். அது ரொம்ப இலேசான வாயு.

நவரஸத்தில் ஆரம்பித்து இந்த ஸுர்யன் கதை எல்லாம் எதற்கு என்றால், விஷயத்துக்கு வருகிறேன். எப்படி ஒரு கலரும் இல்லாத ஸுர்ய வெளிச்சத்தில்தான் அத்தனை கலர்களும் பிறக்கின்றனவோ, அத்தனை கலர்களையும் வெளிவிடுகிற மூலப் பொருள்கள் எல்லாம் இருக்கின்றனவோ, அப்படியே ஒரு உணர்ச்சியும் இல்லாத சாந்தத்தில்தான் அத்தனை உணர்ச்சிகளும் பிறந்திருக்கின்றன; அந்த உணர்ச்சிகளுக்கு ஆஸ்பதமான ஸகல ஜீவர்களும் காரியங்களும் அதற்குள்ளேயே அடக்கம்; சாந்த ஆத்மாதான் இத்தனையும். ஆனால் இத்தனையாக இருப்பது மட்டுமின்றி, இவற்றுக்கெல்லாம் பிடிபடாமல் தனியாகவும் இருக்கிறது. மற்றதெல்லாம் எரியும்போது ஹீலியம் எரியாததுபோல், அது மட்டும் எந்த உணர்ச்சியாலும் பாதிக்கப்படாமல் பரம லேசாக இருக்கிறது.

சாந்தமாக இருக்கிறபோது எங்கு பார்த்தாலும் பரவியுள்ள ஒரே ஆனந்த ஸாகரம்தான். அந்த ஒன்றுதான் மற்ற ரஸங்களாக இருக்கிறபோது துளித்துளி ஆனந்தத்தைத் தாற்காலிகமாகக் கொடுக்கிறது. ஒவ்வொரு மூலப் பொருள் ஒவ்வொரு கலரில் எரிகிற மாதிரி, நாம் ஒவ்வொரு மனோபாவத்தில் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டுகிறோம். எல்லா உணர்ச்சிகளுக்கும் மூலமான ‘உணர்விறந்த’ நிலையை அடைந்துவிட்டால் அப்படியே ஸுர்யன் மாதிரி ஸ்வயம்பிரகாசமாக இருந்துவிடுவோம்.