சாந்த நிலையை அடையவே கலைகள் உதவ வேண்டும் காவிய ரஸங்களைச் சொன்னேன் இப்படியே ருசியிலும் ஆறு ரஸங்கள் இருக்கின்றன ‘அறுசுவை’ என்பார்கள் நாக்குக்கு ருச

சாந்த நிலையை அடையவே கலைகள் உதவ வேண்டும்

காவிய ரஸங்களைச் சொன்னேன். இப்படியே ருசியிலும் ஆறு ரஸங்கள் இருக்கின்றன. ‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ’ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கிறோம் போலிருக்கிறது! இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அதுகூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால் சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது. ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம், வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

சரி, எல்லாக் கலரும் சேர்ந்த வெள்ளை மாதிரி, எல்லாச் சுவைகளும் சேர்ந்த சுவை ஏதாவது இருக்கிறதா? உணர்ச்சியில் சாந்தம், கலர்களில் சூரிய ஒளி போல் சுவைகளில் ஏதேனும் உண்டா? ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுதான் வெண்ணெய். இதுவும் பார்த்தால் வெளுப்பாக இருக்கிறது. ரொம்ப நைஸாக இருக்கிறது. அதன் ருசியிலேயே ஒரு ஸாத்விகம், சாந்தம். மற்ற ருசியெல்லாம் ராஜஸம்தான்., உணர்ச்சியைத் தூண்டுபவைதான். வெண்ணெய் மட்டும் உணர்ச்சியை உண்டுபண்ணுவதில்லை. வெண்ணெயைக் கொஞ்சம் ஜாஸ்தி சாப்பிட்டு விட்டாலோ உணர்ச்சி செத்து, மந்தமாக, உறக்கமாகவே ஆகிவிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அதன் சாந்தம், ஸாத்விகம் இவற்றுக்காகத்தான் நவநீத சோரனாக இருக்கிறார். வெண்ணெயின் ருசியைத் தித்திப்பு என்று சொல்ல முடியாது. அதுவே உண்மையான மதுர ரஸம் என்று சொல்லலாம். இதிலே இன்னொரு விசேஷம் என்ன என்றால் வெண்ணெய் காய்ச்சின நெய்யைவிட்டுத் தீபம் ஏற்றினால் அதுவும் ஸுர்ய வெளிச்சம் போல் வெள்ளை ஒளியாக இருக்கிறது. ஒவ்வொரு தைலத்தில் ஏற்றுகிற தீபத்துக்கு ஒவ்வொரு நிற ஜ்வாலை உண்டாகிறது. நல்லெண்ணெய் விளக்கு செம்மஞ்சளாக எரியும்; கடலெண்ணெய் தீபம் ஒரு தினுசான மஞ்சளாக எரியும். நெய் விளக்கு மட்டும், அதைப் பார்த்தாலே மனசு அடங்குகிற மாதிரி, வெள்ளை ஒளியாகப் பிரகாசிக்கிறது – அதிலே சிவப்பு ஜோதி வீசுவதில்லை. நல்ல சுத்தமான நெய்க்கு இதுதான் லக்ஷணம். அதனால்தான் ஸ்வாமி சந்நிதானத்தில் எல்லோர் மனத்திலும் சாந்தம் உண்டாக வேண்டும் என்று நெய் விளக்கே ஏற்றச் சொல்வது.

சாந்தமுலேக ஸௌக்யமுலேது” என்று தியாகையர்வாள் பாடினது போல், நாம் எத்தனைவிதமான உணர்ச்சிகளில் மொத்துப்பட்டாலும் கடைசியில் சாச்வத சௌக்கியம் வேண்டுமானால் சாந்த நிலையைத்தான் அடைய வேண்டும். அதற்குத்தான் எல்லாக் கலைகளும் உதவ வேண்டும்.

நாடகங்களில் நானாதினுசான உணர்ச்சி மோதல்கள் இருந்தாலும், அது மிக உயர்ந்த நாடகமானால் அதைப் பார்த்து முடித்தபின் மனஸில் இனம் தெரியாத ஒரு விச்ராந்தியும் அமைதியும் ஆனந்தமும்தான் நிலவ வேண்டும்.