இன்றைய இழிநிலை அப்படிப்பட்ட நாடகக் கலை இப்போது எப்படி இருக்கிறது? ரொம்ப ஜனங்களை இழுக்கிற சக்தி – mass media வாக இருக்கிற சக்தி – அதற்கு இருப்பது வாஸ்தவம் த

இன்றைய இழிநிலை

அப்படிப்பட்ட நாடகக் கலை இப்போது எப்படி இருக்கிறது? ரொம்ப ஜனங்களை இழுக்கிற சக்தி – mass media வாக இருக்கிற சக்தி – அதற்கு இருப்பது வாஸ்தவம் தான். ஜனங்களை இழுத்து இந்திரியங்களைக் கிளறி அனுப்பிவிட்டால் போதுமா? அது சரியா? டிராமாவால், சினிமாவால் எத்தனையோ நல்லது செய்யலாம், செய்யலாம் என்கிறார்கள். ‘லாம்’ என்பது வாஸ்தவம்தான். வாஸ்தவத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி. அணு சக்தியால் நல்லது செய்யலாம் செய்யலாம் என்று சொல்லிக்கொண்டே ‘பாம்’களைக் குவித்துக் கொண்டு போகிற மாதிரிதான் நடந்து வருகிறது.

பொறுப்புணர்ந்த நாடகாசிரியரும், நாடகம் நடத்துகிறவரும் என்ன செய்ய வேண்டும்? ஜனங்களின் மனஸை உயர்த்தப் பாடுபட வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளை நல்வழியில் திருப்பிக் கட்டுப்படுத்தி, லோகத்தோடு அவர்கள் ஸௌஜன்யமாக இருக்கும்படியாகவும் தங்களுக்குள் சாந்தமாக ஆகும்படியாகவும் செய்யக்கூடிய நாடகங்களை எழுதி நடிக்க வேண்டும். இப்போது நடப்பது நேர்மாறாக இருக்கிறது. ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கிறவன் அது முடிந்து வெளியே போகிறபோது முன்னைவிட மனசு கெட்டுப் போகிற ரீதியிலேயே இப்போது இருக்கிறது. காமமும் குரோதமும்தான் ஜீவனின் பரம விரோதிகள் என்பது கீதாவாக்கியம். இப்போது படங்களில் இந்த இரண்டும்தான் பிரதானம். வெவ்வேறு வகுப்பு ஜனங்களை, வெவ்வேறு கட்சிக்காரர்களைப் பரஸ்பரம் சண்டைக்குத் தூண்டிவிடுகிற நாடகங்களும் சினிமாக்களும் ஜாஸ்தியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விரஸத்துக்கோ எல்லையே இல்லாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.

நாடகக் கலை ஆயிரம் காலப் பயிர் என்பது வாஸ்தவம்தான். நானே இத்தனை நேரம் அதை சிலாகித்துத்தான் பேசினேன். ஆனால் முன்னெல்லாம் அதற்கு வரம்புகள் இருந்தன. அந்த வரம்புகள் போன பின் அந்தக் கலையே வீணாகி விட்டது. இன்னின்ன காட்சிகளைத்தான் மேடையில் காட்டலாம் என்ற விதிகள் முன்பு இருந்தன. சில விதமான ஸம்பவங்களை மற்ற பாத்திரங்கள் பேசுகிற மாதிரி கொண்டு போய் விடுவார்கள்; ஸ்தூலமாகக் கண் முன் காட்டி மனஸை விகாரப்படுத்த மாட்டார்கள்.

நாடகம் நடிப்பதற்கென்றே ‘பரத புத்திரர்கள்’ என்று தனியாக ஒரு ஜாதியார் இருந்தார்கள்; மற்றவர்கள் அதில் நுழையவிட மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் சினிமாவில் சேரலாம். அப்பாவை விட்டு விட்டுப் பிள்ளை ஓடிப்போய் சினிமாவில் பிழைத்துக் கொள்ளலாம், ஸ்திரீகள் வீட்டை விட்டு ஓடிப்போய் ஸ்டாராகி விடலாம் என்பதற்கெல்லாம் அப்போது இடமே இல்லை. இதெல்லாவற்றையும் விட, அந்தக் காலத்தில் எத்தனையோ கௌரவமான வரம்புகளுக்கு உட்பட்டே ஸ்திரீ புருஷர்கள் நடித்த போதிலும்கூட வாஸ்தவத்தில் புருஷன் பெண்டாட்டியாக இருப்பவர்கள்தான் நாடகத்திலும் தம்பதிகளாக வருவார்கள். நடீ-ஸுத்ரதார tradition என்று இதைச் சொல்லுவார்கள். இப்போது இந்த நல்ல ஒழுக்க விதிகள் எல்லாம் போய்விட்டன. ரொம்பக் குழந்தைகள் திருட்டுப் புரட்டில் விழுவதற்குச் சினிமாக் காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். பெண் குழந்தைகள் மானம் மரியாதை இல்லாமல் ஆகியிருப்பதற்கும் இதுதான் காரணம். நம்முடைய தர்மத்துக்கே பெரிய நஷ்டம் இதனால் வந்திருக்கிறது. முன்னெப்போதையும்விட இப்போது சமூகத்துக்கு நாடகக் கலையால் ஏற்பட்டிருக்கிற ஆபத்து பயங்கரமானது. ஏனென்றால் முன்னே நாடகம் என்றால் ஒரு ஊரில்தான் நடக்கும். இப்போது சினிமா என்று வந்து, எத்தனை காப்பி வேண்டுமானாலும் பிரிண்ட் பண்ணி உலகம் முழுக்க ஒரே சமயத்தில் காட்ட முடியும் என்றாகி விட்டது.

நாடகம் நல்ல கலைதான். வாஸ்தவம். நல்லபடியாக நடத்தினால் ஜனங்களை நல்வழிப்படுத்த அது பெரிய சாதனம் என்பது வாஸ்தவம். ஆனால் நடைமுறையைப் பார்க்கிறபோது, எனக்கு சினிமா, டிராமா அடியோடு வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. டாகுமெண்டரி, கல்விப் படங்கள் (விஷுவல் எஜுகேஷன்) என்று காட்டுகிறார்களே, அதோடு போதும் என்றுதான் தோன்றுகிறது. ஸயன்ஸ்களுக்கு மட்டும் சினிமா போதும். சமூகச் சீர்திருத்தம், சமய வளர்ச்சி இதற்கெல்லாம் சினிமா வேண்டாம். அவை மற்ற வழியில் நடக்கிறபடி நடக்கட்டும், நடக்காவிட்டால் போகட்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
என்னை எல்லோரும் ஸ்தோத்திரம் செய்யலாம். அதற்காக நானும் எல்லோருக்கும் நல்லவனாகப் பேர் எடுக்க வேண்டுமென்று, என் மனஸுக்குத் தப்பு என்று தோன்றுவதைச் சொல்லாமல் இருந்தால் அதைவிடப் பெரிய தப்பு இல்லை. ஸினிமாக்காரர்களை ஒரு நல்ல கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இப்போதுள்ள சட்டம் போதவில்லை என்றால், சினிமாவே வேண்டாம் என்பதுதான் என் அபிப்பிராயம்.

புராணப் படம் எடுத்தாலே ஸ்வாமிகள் ரொம்ப ஆசீர்வாதம் பண்ணிவிடுவார் என்று சிலபேர் நினைக்கலாம். ஆனால் சமூகப் படம்கூட வேண்டியதில்லை என்று நான் நினைக்கும்போது நம்முடைய ஸ்டார்கள் தெய்வங்களாக வேஷம் போட்டுக் கொள்வதை ஆமோதிப்பேனா என்ற கேள்விக்கே இடமில்லை.

வேதாத்யயனத்திலிருந்து ஆரம்பித்து நம்முடைய மஹத்தான சம்பிரதாயத்தைச் சேர்ந்த பல சம்பத்துக்கள் போய்விட்டன. இப்போது சினிமா, டிராமா போகிற போக்கையும், சமூகத்துக்கு இதனால் ஏற்பட்டிருக்கிற உத்பாதத்தையும் பார்க்கும்போது தொன்று தொட்டு வந்த நம்முடைய நாடகக் கலையும் அப்படிப் போகட்டும் என்றுதான் தோன்றுகிறது. ஜனங்களை ரொம்பவும் தப்பிலும், விகாரத்திலும் தூண்டிக் கொடுக்கும் விதத்தில் இப்போது ப்ரளய ப்ரவாஹமாக வந்திருக்கிற சினிமாக்கூத்து இதே கதியில்தான் போகும், அதை மாற்ற முடியாது என்றால் ஒரு உத்தமமான கலையாக ஆதிகாலத்திலிருந்து வந்திருக்கிற நாடகக்கலை போயே போய்விடட்டும் என்று தோன்றுகிறது.

நான் சொல்வதற்காக எல்லாம் மாறிவிடும் என்று நினைக்கவில்லை; மாறுமோ மாறாதோ, சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொன்னேன்.