நள-தமயந்தியரின் பெருமை தமயந்திக்கு ஸ்வயம்வரம் வைத்தான் அவளுடைய பிதாவான விதர்ப ராஜன் பீமன் இதற்கு முன்பே அவள் நிஷத நாட்டரசனான நளனைப் பற்றிக் கேள்வ

நள-தமயந்தியரின் பெருமை

தமயந்திக்கு ஸ்வயம்வரம் வைத்தான் அவளுடைய பிதாவான விதர்ப ராஜன் பீமன். இதற்கு முன்பே அவள் நிஷத நாட்டரசனான நளனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன்மீது பிரியம் கொண்டிருந்தாள். நளனும் தமயந்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் மேல் பிரியம் கொண்டான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. கேள்வி ஞானத்திலேயே பரஸ்பரம் ரூப சௌந்தரியத்தையும் குண சம்பத்துகளையும் தெரிந்து கொண்டு பிரியம் கொண்டார்கள். ஓர் அன்னத்தின் மூலம் தூதும் விட்டுக் கொண்டார்கள்.

இவ்விஷயம் தெரியாமல் பீமன் தமயந்திக்கு ஸ்வயம்வரம் வைத்தான். சகல தேச ராஜாக்களும் அவளது ஒப்பில்லாத சௌந்தரியத்தை அறிந்து ஸ்வயம்வரத்துக்கு வந்தனர். பூலோகவாசிகள் மட்டுமல்ல – இந்திரன், அக்கினி, யமன், வருணன் ஆகிய தேவர்களும் அவளை மணக்க விரும்பினர். ஆனால் அவர்களுக்கு இவள் நளனையே பதியாக வரித்துவிட்டது தெரியும். மஹா உத்தமியான அவள் இனி பர புருஷர் எவரையும் – அவன் தேவராஜாவாகவே இருந்தாலும்கூட – கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள் என்று அவர்களுக்குத் தெரியும். தங்களில் ஒருத்தரை அவள் வரிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு வழிதான் இருந்தால் இருக்கலாம் – அதாவது அவளீடம் தங்களில் ஒருவருக்கு மாலையிடுமாறு நளனே சிபாரிசு செய்தால் அவள் அதைக் கேட்கக்கூடும் என்று அவர்கள் எண்ணினார்கள்.
எனவே ஸ்வயம்வரத்துக்கு முன்பாகவே நளனிடம் அந்தத் தேவர்கள் வந்து, “எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று கேட்டுக் கொண்டார்கள்.
“செய்கிறேன்” என்று வாக்குத் தத்தம் கொடுத்தான் நளன்.
“நீ தமயந்தியிடம் தூது போக வேண்டும். எங்களில் ஒருவனுக்கு அவள் மாலையிட வேண்டுமென்று எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றனர் தேவர்கள்.

இது போல் எங்கேயாவது கேட்டதுண்டா? நளனும் தமயந்தியும் பரஸ்பரம் பிரியம் வைத்திருந்தார்கள். ஸ்வயம்வரத்தில் அவள் தன்னையே வரிக்கப் போகிறாள் என்ற ஆவலுடனேயே நளன் நிஷத ராஜ்யத்திலிருந்து விதர்பத்துக்கு வந்திருக்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவள் வேறொருவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவனே அவளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறார்கள்!

தேவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள்? அவர்களுக்குத் தமயந்தியின் பெருமை, நளனின் பெருமை இரண்டும் தெரிந்திருந்ததால்தான் இப்படிச் செய்தார்கள். ஒரு மனிதனிடம் வைத்த மனத்தை மாற்றி சாட்சாத் தேவேந்திரனைக் கூட ஸ்மரிக்காத  பாதிவ்ரத்யம் கொண்டவள் தமயந்தி என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் தேவர்களான தாங்களே ஸ்வயம்வரத்துக்குப் போய் நின்றாலும் அவள் நரனான நளனுக்குத்தான் மாலை இடுவாள் என்றும், அப்படி ஆகாமல் செய்ய ஏதாவது வாய்ப்பு இருக்குமானால் அது அந்த நளனை விட்டே அவளிடம் தங்களுக்காகச் சிபாரிசு செய்யப் பண்ணுவதுதான் என்றும் நினைத்தார்கள். அதேபோல் கொடுத்த வாக்கை ஒருபோதும் மீறாத சத்தியப் பிரதிக்ஞன் நளன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் நளனிடம் தங்களுக்கு உபகாரம் செய்வதாக வாக்குப் பெற்றுக்கொண்டு அப்புறம் அவனையே தமயந்தியிடம் தங்களுக்காகத் தூது போகுமாறு கூசாமல் சொன்னார்கள்.
நளன் மஹா உத்தமன். சத்தியசந்தன். இப்போது சத்தியத்துக்காக அவன் தன் பிரேமையையே தியாகம் செய்ய முன்வந்து விட்டான். உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அந்த வாக்கை மீறக்கூடாது என்பதால் தேவர்கள் விருப்பப்படி தமயந்தியிடம் தூது போக முன்வந்தான்….

புண்ணிய ச்லோகர்கள், ப்ராத ஸ்மரணீயர்கள் என்றெல்லாம் சில மகாத்மாக்கள் இருக்கிறார்கள். பிராதக்காலத்தில் – அதாவது காலையில் துயில் எழுந்தவுடன் – இந்தப் புண்ணிய புருஷர்களை நினைக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் விதித்திருக்கிறார்கள். அப்படி நினைப்பதால் அவர்களுடைய சத்தியம், தர்மம், தியாகம், சீலம் முதலிய குணங்களெல்லாம் நமக்கு வரும். அன்றன்றும் நம் காரியங்களைத் தொடங்குவதற்குமுன் அவர்களை நினைப்பதால் நாமும் வாழ்க்கைப் போராட்டத்துக்கு அவர்களைப் போலவே ஜயசாலிகளாக முகம் கொடுக்கலாம். இந்தப் பரிசுத்தர்களையும், தார்மிகர்களையும் ஸ்மரிப்பதால் நம்முடைய தோஷங்களும், அதர்ம சிந்தையும் குறையும். தாற்காலிகமாகவாவது மனசில் பயமில்லாத தீரமும், தெளிவும், சாந்தியும் பிறக்கும். இப்படி நாலு புண்ணிய ச்லோகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதல்வன் நளன்; அப்புறம் தர்மபுத்திரர்; மூன்றாவது ஸீதாதேவி; நாலாவது கிருஷ்ண பரமாத்மா.
புண்ய ச்லோகோ நளோ ராஜா, புண்ய ச்லோகோ யுதிஷ்டிர: |
புண்ய ச்லோகா ச வைதேஹீ, புண்ய ச்லோகோ ஜனார்தன: |

இந்த நாலு பேருக்கும் வாழ்க்கையில் உண்டான தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவர்கள் இத்தனை தொல்லைக்கு நடுவிலும் தர்ம மார்க்கத்திலிருந்து துளிக்கூட விலகாமல் இருந்து, ஜயசாலிகளாக ஆனார்கள். அவர்களை விடிகிற வேளையில் நினைப்பதால் நம் புத்தியும் கொஞ்சத்தில் கொஞ்சம் அந்த மார்க்கத்தில் பிரவிருத்திக்க ஆசைப்படும்.
நளன் தன்னுடைய மிகவும் பிரியமான விருப்பத்தைத் தியாகம் செய்து தேவர்களுக்காகத் தூது போக ஒப்புக் கொண்டான். தமயந்தி இருக்கிற உப்பரிகைக்கு ஏகக் காவல் போட்டிருந்தது. இவன் எப்படி அங்கே போக முடியும்? இந்திரன் உடனே மாயம் செய்தான். இந்திர ஜாலம் என்றே சொல்கிறோம் அல்லவா? அந்த மாயா பலத்தால் தாற்காலிகமாக நளனை தமயந்தி தவிர மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் அரூபமாக்கி விட்டான்.

நளனும் அருவமாக தமயந்தியை அடைந்தான். அவள் கண்ணுக்கு மட்டும் தென்பட்டான். இவனைப் பார்த்ததும் அவள் ஒரே குதூகலத்தில் ஆழ்ந்துவிட்டாள். ஆனால் இவனோ தன்னுடைய சத்தியப் பிரமாணத்துக்குத் துளிக்கூட தவறிழைக்காமல் அவளிடம் தேவர்களின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, “என்னைவிட அவர்கள் எவ்வளவோ உத்கிருஷ்டமானவர்கள். ஆகையால் இந்திரன், அக்கினி, யமன், வருணன் இவர்களில் ஒருத்தரை நீ வரிப்பதுதான் சிலாக்கியம்” என்று அவர்கள் சார்பில் வாதாடினான்.
தமயந்தி விட்டுக் கொடுக்கவில்லை. நளனே சொன்னாலும் கூடப் பதிவிரதா தர்மத்தை ஒரு நாளும் விட முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். அவனை அவள் பதியாக வரித்தபின் இன்னொருத்தரை மனத்தால் நினைத்தாலும் பதிதையாகிற மகாபாபம் வந்து சேரும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.
அவளிடம் தன் முறையீடு நிச்சயம் எடுபடாது என்று நளன் புரிந்து கொண்டு தேவர்களிடம் திரும்பி வந்தான். அவர்களுக்கும் நடந்ததெல்லாம் தெரியும். ஆனபடியால் தங்களுக்குக் காரியசித்தி ஆகாவிட்டாலும், நளன் சொன்ன வாக்குத் தவறாமல் அந்தரங்க சுத்தமாகத் தன்னால் முடிந்த அளவு முயன்று பார்த்ததில் அவனிடம் திருப்தி கொண்டு அவனுக்குச் சில வரங்களைத் தந்தார்கள்.