ஸ்வயம்வரம் ஸ்வயம்வர வேளை வந்தது பல தேசத்து ராஜாக்கள் ஸ்வயம்வர மண்டபத்தில் வந்து திரண்டிருந்தனர் நளனும் வந்திருந்தான் ஒரு நளன் இல்லை; ஐந்து

ஸ்வயம்வரம்

ஸ்வயம்வர வேளை வந்தது. பல தேசத்து ராஜாக்கள் ஸ்வயம்வர மண்டபத்தில் வந்து திரண்டிருந்தனர். நளனும் வந்திருந்தான்.

ஒரு நளன் இல்லை; ஐந்து நளர்கள் ஸ்வயம்வர மண்டபத்தில் பிரசன்னமாயிருந்தார்கள்! இதைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியமாகி விட்டது.

ஐந்து நளர்கள் எப்படி உண்டானார்கள்? இதுவும் தேவமாயைதான். இந்திரன் முதலிய நாலு தேவர்களும் தத்ரூபம் நளன் மாதிரியே வேஷம் போட்டுக்கொண்டு வந்து விட்டார்கள்! ‘ஐந்து நளர்களில் யார் உண்மை நளன் என்று தமயந்தி எப்படிக் கண்டு கொள்வாள்? எவனோ ஒருத்தனுக்கு மாலையிடுவாள். அது நிஜ நளனாக இல்லாவிட்டால் தங்களில் ஒருவனுக்கே அதிர்ஷ்டச் சீட்டு விழுந்துவிடும் அல்லவா?” – இப்படி எண்ணிச் சூழ்ச்சி செய்து விட்டார்கள் தேவர்கள். முதலில் வெட்கத்தை விட்டு நளனிடம் வேண்டினார்கள்; இப்போது அவன் மாதிரி உருவம் எடுத்துக் கொண்டு வேஷதாரிகளாகி விட்டார்கள். பெண்ணாசை அத்தனை பொல்லாதது.

தமயந்தி ஸ்வயம்வர மண்டபத்துக்கு வந்தாள். ஒவ்வொரு ராஜகுமாரனாகத் தாண்டிக் கொண்டே வந்தாள். நளன் ஒருவனையே மனத்தில் நினைத்துக் கொண்டு வந்தாள். கடைசியில் பார்த்தால் ஒரு நளனுக்குப் பதில் ஐந்து நளர்கள் இருக்கிறார்கள்! தமயந்தி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். “இவர்களுக்கிடையே துளிக்கூட வித்தியாசம் தெரியவில்லையே! தவறாக நிஜ நளனுக்கு மாறாக இன்னொருத்தனுக்கு மாலை போட்டுவிட்டால் பாதிவ்ரத்யத்துக்குத் தோஷம் வந்துவிடுமே!” என்று நடுங்கித் திக்பிரமையுடன் நின்றாள்.