இலக்கியம் தர்மம் கூறும் முறை
ஒரு யஜமானன் கட்டளை இடுவது போல் ‘சத்தியம் பேசு; தர்மமாக நட’ என்று வேதம் ஆக்ஞை பிறப்பிக்கும். இதற்குப் ‘பிரபு ஸம்மிதை’ என்று பெயர். இதையே நண்பன் எடுத்துச் சொல்கிற மாதிரி புராணங்கள் கதா ரூபத்தில் விளக்கும். இதற்கு ‘ஸுஹ்ருத் ஸம்மிதை’ எனப் பெயர். கதையானாலும் புராணம் செய்த ரிஷிகளும் தர்மத்தை ரொம்பவும் வெளிப்படையாகவே வலியுறுத்திக் கொண்டு போவார்கள் – ‘ஸுஹ்ருத்’ அல்லது நீதிமானான நண்பன் பேசுகிற பாணியில். இதை விட ஹிதமாகவும் மதுரமாகவும் தர்மத்தைச் சர்க்கரையில் தோய்த்த மாத்திரை மாதிரிக் கதையில் தோய்த்துச் சொல்கிறவன் கவி. நம் நாக்குக்குச் சர்க்கரை ருசிதான் தெரியும்; மருந்துச் சரக்கு இருப்பதே தெரியாது. வயிற்றுக்குள் போய்த்தான் அது வேலை செய்யும். இம்மாதிரி காவியரஸத்தை நாம் அநுபவிக்கிற போது நமக்குத் தெரியாமலே நமக்குள் தர்மங்கள் ஊறுகிற விதத்தில் கவி பேசுவான். காவியத்தை ‘காந்தா ஸம்மிதை’ என்பார்கள் – அதாவது அது பிரிய பத்தினியின் வாக்கு மாதிரி என்று அர்த்தம்.
உயர்ந்த கவி மகத்தான தர்மங்களையும் தத்துவங்களையும் நவரஸத்தில் தோய்த்து மிகவும் ரஞ்ஜகமாகக் கொடுத்து விடுகிறான். இலக்கிய உலகத்தில் இருப்பவர்கள் இதையே ஸ்வதர்மமாகக் கொள்ள வேண்டும் – வெறும் ரஞ்ஜகமாக மட்டுமல்லாமல் அதற்குள் தர்மமான பலனும் இருக்கிற மாதிரி எழுதவேண்டும். படிக்கிறவனை அப்போதைக்குச் சந்தோஷப்படுத்துவதோடு நில்லாமல், அவனை உயர்த்துகிற விதத்தில் எழுத வேண்டும்.