சிவபாதசேகரன்
இறைவன் திருவடியை முடியில் கொண்டவன்
சக்கரவர்த்தி, மன்னர் மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவன் இதைவிடப் பெரிசாக நினைத்தது தானும் வேறே ஒரு மஹா பெரிய ராஜாவுக்குத் தொண்டனாக இருப்பதைத்தான். தன் தலையில் நவரத்ன கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பதை விட, அந்தச் சிரஸிலே தனக்கும் ராஜாவாக இருக்கப்பட்டவனின் காலை அழுந்த வைத்துக் கொண்டால் அதுதான் பெரிய ஆபரணம் என்று பெருமைப்பட்டான்.
அவன் தான் ராஜராஜ சோழன் என்று நாம் போற்றுகிறவன். தன்னை எப்போதும் ஸகலலோக சக்ரவர்த்தியான பரமேச்வரனின் தொண்டனாக நினைத்துக் கொண்டு, அந்த சந்திரசேகரனின் திருவடி தன் முடியில் சூட்டப்பட்டிருப்பதாகப் பாவித்து, பாவித்து ஸந்தோஷப்பட்டுக் கொண்டு, இதனால் சிவபாத சேகரனாக ஆண்டவனுக்கு அடங்கிக்கிடப்பதையே உயர்வாக நினைத்தவன்.
சிரஸின் உச்சியில் ஸஹஸ்ரார கமலம் என்று ஆபிரம் இதழ்த் தாமரைப் பூ இருக்கிறது. மூலாதாரத்திலுள்ள குண்டலினீ சக்தியை ஸாதனைகள் பண்ணி அங்கே கொண்டு போனால், அந்தக் கமலத்திலே குரு ரூபமாக இருக்கிற ஈச்வரனின் பாதகமலம் தெரியும். அந்த கமலத்திலிருந்து தேனுக்குப் பதில் பெருகுகிற அம்ருதத்தில் – சரணாம்ருதத்தில் – நாடி நரம்பெல்லாம் குளிர்ந்து, ஜீவபாவமே அடித்துக் கொண்டு போய், பரமாத்மாவோடு பரமாத்மாவாக ஐக்யப்பட்டிருக்கிற மோக்ஷானந்தம் ஸித்திக்கும். பகவான் பாதத்தைத் தலைமேல் வைக்கும்படி மகான்கள் பிரார்த்திப்பதற்கு இதுதான் உள்ளர்த்தம்.
சிரஸி தயயா தேஹி சரணௌ
என்று ஆசார்யாள் ‘ஸௌந்தர்ய லஹரி’யில் இந்தத் திருவடி தீக்ஷையைத்தான் அம்பாளிடம் வேண்டுகிறார்.
இந்த தீக்ஷை கிடைத்த ஆனந்த பரவசத்தில் அப்பர் ஸ்வாமிகள்,
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
என்று பாடுகிறார். அந்தச் சேவடியின் அடியிலே தன் முடி சூடிய தலை கிடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவன் தான் சிவபாதசேகரன்.
அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் கரையான் அரித்து மட்கி மண்ணாகியிருக்கும். இதனால் “திருமுறை கண்ட சோழன்” என்றே அவனுக்கு ஒரு பெயர்.
சிதம்பரேச்வரனான நடராஜாவிடத்தில் அவனுக்கு அபார பக்தி. ‘நடராஜா’ என்ற பெயரைத் தமிழில் ‘ஆடவல்லான்’ என்று அப்பர் அழகாகச் சொல்லியிருப்பது அவன் மனஸை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.