சாஸ்திரப்பிரகாரமே கலை வளர்ப்பு
’ராஜராஜன்’, ‘சிவபாத சேகரன்’ என்பவை தவிர அவனுக்கு வேறு பட்டப் பெயர்களும் உண்டு. பாண்டியர்களை ஜயித்ததால், ‘பாண்டிய குலாசனி’ என்று ஒரு பிருதம் (விருது). ‘அசனி’ என்றால் வஜ்ராயுதம். ‘பாண்டிய வம்சத்தைப் பிளக்கும் வஜ்ராயுதம்’ என்று அர்த்தம். அநேக சோழ ராஜாக்கள் தங்களைப் பாண்டியர்களுக்கு யமனாகக் கருதி ‘மதுராந்தகன்’ என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சேரர்களையும் ராஜராஜன் ஜயித்ததால் அவனுக்குக் ‘கேரளாந்தகன்’ என்ற பெயருண்டு. பெரிய கோவிலின் மூன்று வாசல்களில் முதலாவதற்குக் ‘கேரளாந்தகன் திருவாசல்’ என்றுதான் பெயர். அந்தக் கோவிலிலே அவன் போஷித்து வளர்த்த ஒரு கலை இன்றைக்குக் கேரள தேசத்தில் தான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! அதைப் பின்னாடி சொல்கிறேன். அவனுடைய இன்னொரு பட்டப் பெயரைச் சொல்லத்தான் வந்தேன். ‘ராஜ வித்யாதரன்’ என்பதே அது. வித்யைகளை, கலைகளைத் தாங்கி ஆதரித்த பிரபு என்று அர்த்தம். கந்தர்வர்களோடு சேர்த்துச் சொல்லப்படுகிற தேவலோக Fine Arts நிபுணர்களான வித்யாதரர்களுக்கு நாயகன் என்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம்.
போஜன், விக்ரமாதித்தன், பல்லவ ராஜா மஹேந்திர வர்மா, பிற்காலத்தில் கிருஷ்ணதேவராயர் ஆகியவர்களைப் போல ராஜராஜனும் பெரிய Patron of Arts. பொழுது போக்காக மட்டும் அல்லாமல், Fine Arts என்பவை ஜீவனை refine பண்ணிப் பரமாத்மாவிடத்தில் கொண்டு போய்க் கலக்கும்படியாகச் செய்யவேண்டும் என்ற பெரிய லக்ஷ்யமுள்ளவன்.
அதனால் வேதமும் திருமுறைகளும் ஓதுவது மட்டுமில்லாமல், தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் ஈச்வரபரமான வேறு பாடல்களும் பாடுவதற்கென்று ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர் என்று இரண்டு சாராரை ராஜராஜேச்வரத்தில் நியமித்தான். ஆரியம் பாட மூன்று பேர்; தமிழ் பாட நாலு பேர்.
நடராஜா, ஆடவல்லான் என்றே பேர் வைத்துக் கொண்டிருப்பவனுக்கு டான்ஸ் வைக்க வேண்டாமா? அதையும் பெரிசாகப் பண்ணினான். பூஜையிலே பண்ண வேண்டிய அநேக உபசாரங்களில் ஆகியவை சாஸ்திரத்திலேயே சொல்லப் பட்டிருக்கின்றன.
சாஸ்திரப் பிரகாரம்தான் ராஜராஜன் பண்ணினானே தவிர, தான் ராஜா, தனக்குக் கலையார்வம் இருக்கிறது என்பதற்காக innovation எதுவும் செய்யவில்லை.
‘ந்ருத்த-கீத-வாத்யம்’ என்பதைக் கொஞ்சம் மாற்றித் தமிழ் மூதாதைகள் ‘கொட்டாட்டுப் பாட்டு’ என்றார்கள். ‘கொட்டு’ என்பது வாத்யம். தவில், மிருதங்கம் மாதிரிக் கொட்டு ஓசை எழுப்பும் வாத்யங்களுக்கு முதலில் இப்படிப் பெயர் இருந்து, அப்புறம் எல்லா வாத்யத் தினுசுகளையும் குறிப்பதாகிவிட்டிருக்கலாம். ‘ஆட்டு’ என்பது நிருத்தம். அதாவது டான்ஸ். ‘பாட்டு’ – கீதம் என்று உங்களுக்கே தெரியும்.
‘ஆட்டு’ என்பதைப் பொதுவாகக் ‘கூத்து’ என்றார்கள். நடராஜாவுக்கு நேர்த் தமிழ் ‘கூத்தப்பிரான்’ என்பது. இந்தக் கூத்துக்காகப் பெரிய கோவிலில் நானூறு பெண்டுகளை நியமித்து, மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பொன், பொருள், ஜாகை வசதி எல்லாம் செய்து கொடுத்தான். ஆண்களிலும் நிருத்தாசாரியர் என்று இருந்த அநேக நாட்டியக்காரர்களைக் கோவில் ஸேவையில் நியமித்தான். இந்த ஆண் நாட்டியக்காரர்கள் குறிப்பாக நாடகத்தில் தேர்ச்சி பெற்றவராவர்.