ஒரே கல்லில் மூன்று மாங்காய்
தமிழ் தேசத்தில் பூர்வகாலத்தில் ஆரியக்கூத்து இப்படி ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டையும் இணைத்துத் தருவதாக இருந்திருக்கலாம். இப்போது ஒன்றிடம் மட்டும் அதிப்பிரியம், மற்றதிடம் தீவிர த்வேஷம் என்று இருக்கிற துர்பாக்ய ஸ்திதியில் அந்த ஆரியக் கூத்தை யாராவது ‘ரிவைவ்’ பண்ண மாட்டார்களா என்றிருக்கிறது. டான்ஸ் டிராமா – அதுவும் கதகளி மாதிரி நூதன வேஷத்திலே என்றால் நிச்சயமாக ஜனங்களை ஆகர்ஷிக்கும். அந்தக் கவர்ச்சிக்காகவே இரண்டு பாஷா ஞானமும் ஸம்பாதித்துக் கொள்ளத் தோன்றும். இதிலிருந்து தன்னால் பேதமும் த்வேஷமும் போய்விடும். டிராமாவின் கதையும் கன்னா பின்னா social themeகளாக இல்லாமல் தெய்வபரமாக இருப்பதால் ஆத்மாவை உசத்திக் கொள்ளவும் உபாயமாயிருக்கும். நல்ல கலை அழகோடு பொழுதுபோக்குக்குப் பொழுதுபோக்கு; தெய்வ பரமான சிந்தனை; பாஷைப் பிணக்கு போவது – இப்படி ஒரே கல்லில் இரண்டில்லை, மூன்று மாங்காய்!
ராஜராஜன் பெரிய கோவிலில் தினமும் ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து இரண்டும் நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். இப்போது அவனுக்கு விழா எடுக்கிறவர்கள் இதற்குப் புத்துயிர் தர ஏதாவது பண்ணினால், இந்த தெய்வத் தமிழ் நாட்டைப் பீடித்துக் களங்கப்படுத்தி வருகிற பேதம் போவதற்கு ஒரு வழி கோலியதாக இருக்கும்.