ஓடி ஓடி ஜன்மப்பணி செய்த இருவர்
இவரைக் கொஞ்சம் நிஜமாகவே ‘உபய வேதாந்த’மாக்க வேண்டுமென்று எனக்கு ஆசை. இப்படிச் சொல்வதால் இவரை அத்யயனம் பண்ண வைக்கணும், ஆழ்வார் பாசுரங்கள் ஓத வைக்கணும் என்று ஆசைப்பட்டதாக அர்த்தமில்லை. தமிழுக்கென்று சிறப்பாக இருக்கிற மரபு, அதையும் தழுவுவதாக தேசம் பூராவுக்கும் பொதுவாக ஸம்ஸ்க்ருதத்தை முக்யமான கருவியாகக் கொண்டு உருவாயிருக்கும் ஸமயாசார அநுஷ்டானங்கள் – ஆகிய இரண்டிலுமே ஆழ்ந்த அபிமானமும், இரண்டிலுமே ஓரளவு அறிவும் இருப்பதுதான் நான் ஆசைப்படும் ‘உபய வேதாந்தம்’. ஸகல தமிழ் ஜனங்கள் விஷயமாகவும் எனக்கு இந்த ஆசை உண்டு. ‘புலவருலகத்திலே அஸாதாரணமான யோக்யதாம்சமும், மதிப்பும் பெற்ற உ.வே.ஐயர் போலுள்ளவர்கள் நல்ல தெய்வ பக்தியுடன் இருப்பதோடு நின்று விடாமல், ஸநாதன ஸமயாசார ஸம்ப்ரதாயத்தை ஏதோ மேலெழுந்தவாரியாகப் பின்பற்றுவதுடன் நின்று விடாமல், கெட்டியாக அதில் பிடிமானம் கொள்ளவேண்டும். அதற்குப் புனர் ஜீவன் ஊட்டிய ஆசார்யாளிடம் பக்தி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் அது தமிழறிஞர் உலகத்துக்கே உதாரணமாயும் வழிகாட்டியாயும் இருக்கும்’ என்று எனக்கு ஆசை. ஏனென்றால், எப்படி ஆதியில் தமிழுலகம் முழுவதும் ஒரு பாட்டியைப் பின் தொடர்ந்தே போயிற்றோ – ஒளவைப் பாட்டியைத்தான் சொல்கிறேன் – அப்படி இந்த நூற்றாண்டில் தமிழில் புலவருலகம் ஒருவர் பின்னால் போயிற்று என்றால், அது ’தமிழ்த் தாத்தா’ என்றே போற்றப்பட்ட ஸ்வாமிநாதையரைத்தான்.
காரைக்கால் அம்மையாருக்குப் பெருமை ஸாக்ஷாத் ஈச்வரனே அவளை “அம்மா!” என்று கூப்பிட்டது. அப்படி ஒளவைப் பாட்டிக்குப் பெருமை ஈச்வர குமாரனான முருகனே அவளைப் “பாட்டி” என்று கூப்பிட்டு, “சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?” கேட்டதுதான். அறிவிலே ஸரஸ்வதி அவதாரமாக இருந்த ஒளவைப் பாட்டியையே கொஞ்சம் அசடாக்கி, அதனால் வித்யையோடு விநயமும் அவளிடம் சேரும்படி சிவகுமாரர்களில் சின்னவர் செய்தார். தாழ்மையிலே உள்ள ஸௌக்யத்தை அவள் தெரிந்து கொள்ளும்படியாக அருள் செய்தார்.
சிவகுமாரர்களில் பெரியவரான பிள்ளையார் என்ன செய்தாரென்றால் இப்படி விநயத்தோடு தாழ்ந்து இருந்தவளைத் தம்முடைய தும்பிக்கையால் ஒரே தூக்காகத் தூக்கி உயர்த்தி, சிவலோகமான கைலாஸத்திலேயே சேர்த்து விட்டார். ஸாதாரணமாக ஒரு பேரப்பிள்ளை பாட்டியைக் கையைப் பிடித்து வண்டியிலே, ரயிலிலே ஏற்றி இறக்கி, ஊருக்கு அழைத்துக் கொண்டு போகுமென்றால், ஒளவைப் பாட்டியைப் பிள்ளையார்க் குழந்தை இந்த உலகத்திலிருந்தே பரலோகத்துக்குக் கொண்டு சேர்த்து விட்டது!
பாட்டி, தாத்தாவைப் பேரன் பிடித்து அழைத்துக் கொண்டு போவது அவனுக்குக் கொஞ்சம் வயசு வந்த அப்புறம். ரொம்பக் குழந்தையாக நடக்கக் கற்றுக்கொள்கிற போது அந்தப் பேரப்பிள்ளைதான் தாத்தாவுக்கோ, பாட்டிக்கோ பின்னால் போய் நடை பழகிக் கொள்வது. கைத்தடி வைத்துக் கொண்டு போகிற கிழங்களின் ‘ஸ்பீடை’த்தான் நடைவண்டி தள்ளிக் கொண்டு போகும் குழந்தை பின்பற்ற முடியும். ஆனால் அன்றைக்குத் தமிழ்ப் பாட்டி ஒளவைக்குப் பின்னாலும், இன்றைக்குத் தமிழ்த் தாத்தா ஸ்வாமிநாதையருக்குப் பின்னாலும் தமிழுலகம் போயிற்று என்றாலும், அவர்கள் தங்களுடைய பணியிலே காட்டிய ’ஸ்பீடை’ யாரும் பின்பற்ற முடியாது! இரண்டு பேருமே அப்படிச் சுறுசுறுப்பாக, நின்ற இடத்தில் நிற்காமல் ஓடி ஓடித் தங்கள் ஜன்மப் பணியைச் செய்தவர்கள்.