ஸ்ரீமடத்தின் ஸாக்ஷி
”தஞ்சாக்கூர்தான் வாணன் ஊர் என்பதற்கு ஆதரவாய் நம் மடமும் ஒரு ஸாக்ஷி தருகிறது” என்று அவரிடம் நான் சொன்னவுடன் அவருக்கு ரொம்பவும் ஆவலும், ஆனந்தமும் உண்டாகி விட்டன.
மடத்தின் அறுபத்து மூன்றாவது ஆசார்யாளான (நான்காவது) மஹாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1783-ல் பீடமேறிச் சில மாஸங்களில் சிவகங்கை ராஜா விஜயரகுநாத பெரிய உடையார் மடத்துக்கு ஒரு கிராமத்தை அர்ப்பணம் பண்ணியிருக்கிறார். அந்த தான சாஸனம் மடத்தில் இருக்கிறது. அந்த கிராமம் இந்தத் தஞ்சாக்கூரைத் தொட்டுக்கொண்டு அதன் தெற்கு பாகத்தில் இருக்கிறது. அதன் பெயர் புலவச்சேரி.
“புலவர்சேரி என்பதுதான் புலவச்சேரி என்றாகியிருக்கிறது. அநேக புலவர்கள் வாழ்ந்த, அல்லது அடிக்கடி வந்து தங்கியிருந்த, இடமாக இது இருந்திருக்க வேண்டும் என்பது என் ஊஹம். நீங்கள் தஞ்சாக்கூர்தான் புலவர்களைக் கொண்டாடிய வாணனின் ஊர் என்று காட்டியிருப்பதாகத் தெரிந்தவுடன் நான் ஊஹித்த விஷயம் நிச்சயப்பட்டே விட்டது. அவனுடைய காலத்தில் எப்போது பார்த்தாலும் மொய்த்துக் கொண்டிருந்த புலவர்கள் தங்கியிருந்ததால் தான் இந்தக் கிராமத்துக்கு புலவர்சேரி என்ற பேர் ஏற்பட்டிருக்கிறதென்று புரிந்து கொண்டேன்” என்று சொன்னேன்.
இதைக் கேட்ட ஐயர், பழைய சுவடி ஒன்றைக் கண்டு பிடித்தால் எப்படிப் பரவசமடைவாரோ அப்படிக் களிக்கூத்தாடினார்!
அநேகமாக எல்லாரும் சோழதேசத் தஞ்சை என்று நினைத்ததைப் பாண்டிய நாட்டு ஊர் என்று காட்டிய மாதிரியே இன்னொரு ஊர் விஷயமாகவும் அவர் ஆராய்ச்சி பண்ணி முடிவு வெளியிட்டிருக்கிறார். இதிலேயும் என் துக்குணியூண்டு ‘ரிஸர்ச்’ சேர்ந்திருக்கிறது.