கேசித்வஜர்
கேசித்வஜர், காண்டிக்யர் ஆகிய இரண்டு பேரில் கேசித்வஜர் நிரம்ப வேதாந்தக் கல்வி பெற்றவர். ஆனாலும் இந்த நாளில் பல பேர் ஏதோ புஸ்தகத்தில் வேதாந்தம் படித்துவிட்டு, ‘ஆத்மாவை ஒண்ணும் தொடாது; அது சடங்கு, கர்மா எதற்கும் பிடிபடாதது’ என்று சும்மாவுக்காகச் சொல்லிக் கொண்டு, அதனாலேயே எல்லா அநுஷ்டானத்தையும் விட்டு விட்டுத் தாங்கள் எதுவும் தொடாத நிலைக்கு வந்து விட்ட மாதிரி ப்ரமையில் இருப்பது போலப் பூர்வ காலங்களில் இருக்கமாட்டார்கள். படித்து, வேதாந்த தத்வமெல்லாம் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் அபூர்வமாக எப்போதேனும் எவருக்கேனும்தான் ஈச்வராநுக்ரஹம் ஒரேயடியாகப் புரண்டு வந்து சட்டென்று ஆத்ம ஞானத்தைத் தருமே ஒழிய, மற்ற எல்லாரும் எவ்வளவு படித்திருந்தாலும் படித்த வேதாந்தம் அநுபவமாகணுமானால் அதற்குப் பூர்வ கர்மாவையும் மனஸின் வாஸனைகளையும் யதேஷ்டமாகக் கர்மாநுஷ்டானமும் பக்தியுபாஸனையும் பண்ணிப் போக்கிக் கொண்டால்தான் முடியும் என்று உணர்ந்திருந்தார்கள். அதனால் பிறப்புப்படி வாய்த்த ஸ்வதர்மத்தை முறையாகப் பின்பற்றியும், வைதிக கர்மாக்களையும் ஈச்வர ஆராதனையையும் நிறையப் பண்ணியும் வந்தார்கள். இதனால் பூர்வ கர்மாவும், ‘வாஸனை’ என்கிற சித்த மலமும் குறைந்து கொண்டே வந்து, சித்த சுத்தி ஏற்பட்டு, சித்தம் ஆடாமல் நிற்கப் பழக்கப்பட்ட அப்புறமே ஆத்ம தத்வத்தை நேராக விசாரம் செய்யும் பக்வம் உண்டாகும். அப்போதுதான் ஞானாப்யாஸத்தில் முழுக்கப் பிரவேசிப்பார்கள். முடிவிலே புஸ்தக வேதாந்தத்தை அநுபவ வேதாந்தமாக்கிக் கொள்வார்கள்.
அதாவது, வேதத்தில் கர்ம காண்டம் என்று முதலிலும் ஞான காண்டம் என்று பிற்பாடும் இருப்பதை அநுஸரித்துக் கர்மாவில் ஆரம்பித்தே ஞானத்துக்குப் போனார்கள்.
இம்மாதிரி கேசித்வஜருக்கு ஆத்ம வித்யையில் நல்ல வித்வத் இருந்த போதிலும் அது ஸ்வாநுபூதியாவதற்குப் பூர்வாங்கமாக ஸ்வதர்மப்படி முறையாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். யாகாதி அநுஷ்டானங்களும் பண்ணினார்.