கதை உருவாகிறது!
ஏதாவது தடங்கல் வந்தால்தானே கதை, கதையாக ரூபம் எடுக்கும்? இப்போது கேசித்வஜரின் யஜ்ஞாநுஷ்டானத்துக்கு அப்படியொரு தடங்கல் ஏற்பட்டது. ஹோமத்துக்கு ப்ரயோஜனமாகும் க்ஷீரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த பசுவை ஒரு புலி அடித்துப் போட்டு விட்டது.
கோவதை என்றாலே எந்த ஹிந்துவுக்கும் தன்னால் ஹ்ருதயம் துடித்துப் போகும். அதிலும் யஜ்ஞத்துக்கு உபகரித்து வந்த பசு இந்த கதிக்கு ஆளாயிற்று என்னும் போது கேசித்வஜர் பதறிப் போய்விட்டார். அப்போது அவர் படித்த வேதாந்தம் கைகொடுக்க வந்தது. “நடந்தது நடந்து விட்டது, வருத்தப்பட்டு என்ன ப்ரயோஜனம்?” என்று தேற்றிக் கொண்டார்.
வருத்தத்தை இப்படிப் போக்கிக் கொள்ளலாம்; ஆனால் யக்ஞத்துக்கு பால் தந்த பசு யக்ஞ மத்தியிலேயே போய் விட்டதென்றால் அது சாஸ்த்ரப்படி தோஷமாயிற்றே. அதை எப்படிப் போக்கிக் கொள்வது?
சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் தோஷங்களை நிவ்ருத்தி பண்ணவும் அந்த சாஸ்த்ரங்களிலேயே ப்ராயச்சித்தம் சொல்லியிருக்கும். அவற்றைச் செய்துதான் தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
“இப்போது நான் பண்ண வேண்டிய ப்ராயச்சித்தம் என்ன?” என்று தம்முடைய பண்டித ஸதஸைக் கேசித்வஜர் கேட்டார்.
அவர் கர்மாநுஷ்டானத்தில் ஈடுபாடுள்ளவர்தான் என்றாலும், குறிப்பாக ப்ரஹ்ம வித்யையில் சிறப்புப் பெற்றவர்தானே? அதனால் அவருடைய ஸதஸில் கர்மாநுஷ்டானங்களில் விசேஷமாக நைபுண்யம் (நிபுணத்துவம்) பெற்றவர்கள் இல்லை போலிருக்கிறது. அவர்களில் எவருக்கும் தோஷ பரிஹாரமாகப் பண்ண வேண்டிய ப்ராயச்சித்தம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
நம்முடைய பூர்விகர்களுக்கு ஸத்ய ப்ரக்ஞையும், விநயமும் ரொம்பவும் ஜாஸ்தி. அதனால் தங்களுக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொண்டு, யார் தெரிந்தவரோ அவரிடம் தயங்காமல் போய்த் தெரிந்து கொள்வார்கள். வேத, உபநிஷத, இதிஹாஸ, புராணங்களில் இப்படி அநேக எடுத்துக்காட்டுக்கள் பார்க்கலாம்.
இப்போது தங்களுக்குத் தெரியாத ப்ராயச்சித்த ஸமாசாரம் கசேரு என்ற பிராம்மணோத்தமருக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைத்து அவரைக் கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள்.
ராஜா கேசித்வஜர் உடனே கசேருவிடம் போயக் கேட்டார். அவருக்கும் பரிஹாரம் தெரியவில்லை. நாமாக இருந்தால், “ராஜாவே நாம்தான் தெரிந்தவர் என்று வந்து கேட்கிறார். எதையாவது சொல்லி வைப்போமே” என்று நினைப்போம். கசேரு அப்படிப் பண்ணவில்லை. “எனக்குத் தெரியவில்லை. பார்க்கவரைக் கேளும்” என்று சொல்லிவிட்டார்.
கேசித்வஜர் பார்க்கவரிடம் போனார். அவர், “எனக்கும் தெரியவில்லை. சுனகருக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் போம்” என்றார்.
நாமானால், “கோவிந்த நாமாவே ஸர்வ ப்ராயச்சித்தம்” என்று மூணு தரம் “கோவிந்தா” சொல்லிவிட்டு அதோடு விட்டிருப்போம். ஆனால் ஒரு ராஜ்யாதிபதியாக இருக்கப்பட்ட கேசித்வஜர் ஒரு பசுவின் மரணத்துக்குச் செய்ய வேண்டிய ப்ராயச்சித்தத்தில் பூர்ணமாக ‘ஸின்ஸிய’ராக இருந்து, சுனகரிடம் போனார்.