காண்டிக்யர் கேட்ட தக்ஷிணை! இப்படி ராஜரிகத் தோற்றத்துடன் இவர் மறுபடி வருவதைப் பார்த்தவுடன் காண்டிக்யருக்கு எப்படி இருந்திருக்கும்? ‘சரிதான், நம்மிடம

காண்டிக்யர் கேட்ட தக்ஷிணை!

இப்படி ராஜரிகத் தோற்றத்துடன் இவர் மறுபடி வருவதைப் பார்த்தவுடன் காண்டிக்யருக்கு எப்படி இருந்திருக்கும்? ‘சரிதான், நம்மிடம் விஷயத்தைக் கறந்து கொண்டு யாகத்தை முடித்தாயிற்று. யாக காலத்தில் ஸாத்விகம்தான் அநுஷ்டிக்க வேண்டுமென்பதால் ஸாதுவாக வந்தான். காரியம் ஆக வேண்டுமென்று காலைப் பிடித்தான். இப்போது காரியம் முடிந்துவிட்டதால் கழுத்தைப் பிடிக்கவே மறுபடி வருகிறான்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டார்.

உடனே அம்பைத் தொடுத்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றார்.

முன் தடவை மாதிரியே அவரைக் கேசித்வஜர் இப்போதும் தடுத்தார். “அப்பா! நான் உனக்கு ஸம்பாவனை பண்ணிவிட்டுப் போக வந்திருக்கிறேனேயொழிய, ஹானி பண்ண வரவில்லை. வேறுவிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யஜ்ஞ பூர்த்திக்குப் பெரிய உபகாரம் பண்ணின உனக்கு, நீ என்ன தக்ஷிணை கேட்டாலும் ஸமர்ப்பணம் செய்யவே வந்திருக்கிறேன்… கேள்” என்றார்.

என்ன தக்ஷிணை கேட்பதென்று காண்டிக்யர் தம்மோடிருந்த குட்டிப் பரிவாரத்துடன் கலந்து ஆலோசனை செய்தார். இழந்த ராஜ்யத்தைத் திரும்பிக் கேட்டுப் பெறுவதற்கு இதுவே வாய்ப்பு என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், ‘எது கேட்டாலும் தருகிறேன்’ என்று கேசித்வஜர் முன் வந்திருக்கிற இந்த வாய்ப்பை விடாமல், தன்னுடைய ராஜ்யத்தோடு அவருடைய ராஜ்யத்தையும் காண்டிக்யர் கேட்டு வாங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று அபிப்ராயப்பட்டார்கள்.

காண்டிக்யர் தீர்க்கமாக யோசித்துப் பார்த்ததில் அவருக்கு மற்றவர்களின் ஆலோசனை ஸம்மதமாகப் படவில்லை. “ராஜ வம்சத்தில் பிறந்தவனின் ஸ்வதர்மம் ராஜ்யத்தைப் பெற்றுக் கட்டி ஆளுவதே என்பது வாஸ்தவமாயிருக்கலாம். ஆனால் அப்படிப் பெறுவதும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தின் மூலமோ, வீர பராக்ரமத்துக்கு ஸம்மானமாகவோ, அல்லது விவாஹ ஸம்பந்தத்தின் மூலமோதான் இருக்கவேண்டுமேயன்றி, ‘தக்ஷிணை’ என்ற கௌரவமான பெயரிலுள்ள யாசகத்தால் அல்ல. வேறெந்த விதத்திலும் அர்த்த (பொருள்) ஸம்பாதனம் செய்து கொள்ள உரிமை பெறாத பிராம்மணனுக்குத்தான் அர்த்தமாக (பொருளாக) தானம் பெற உரிமை உண்டு. இது க்ஷத்ரியனான என் தர்மமாகாது. ஒருவனுக்கு தர்ம சாஸ்த்ர விஷயம் சொல்லி அதற்கு ப்ரதியாக அதர்மமான முறையில் ராஜ்ய தானம் வாங்கிக் கொண்டேனானால் பதிதனாகி விடுவேன்.

“தர்ம-அர்த்த-காம-மோக்‌ஷங்களில், ‘தர்ம உபதேசத்துக்காக அர்த்தம் பெற வேண்டும்’ என்ற காமம் எனக்கு இப்போதில்லை. மோக்‌ஷத்துக்கு நேர் வழியாக முடிவிலே வருகிற ப்ரம்ம வித்யையில்தான் இப்போது எனக்கு நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. கேசித்வஜன் என்னிடமிருந்து கர்மத்தைப் பற்றிய தர்மத்தைக் கேட்டுக் கொண்டாற்போலவே நான் அவனிடம் ப்ரஹ்ம வித்யையில் உபதேசம் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். என் வித்யா தானத்துக்கு தக்ஷிணையாக அவனிடமிருந்து இன்னொரு வித்யா தானமே கேட்கப் போகிறேன். எந்த ஜாதியாரும் அறிவுதானம் பெறத் தடையில்லை.”

“க்ஷத்ரியனின் ஸ்வதர்மம் ராஜ்யத்தைப் பெற்று ஆட்சி நடத்துவதே அல்லவா?” என்று நீங்கள் கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறேன். ராஜ்யத்தைப் பெற்று ஆட்சி நடத்தினவன்தான் நான். அதிலே எனக்கு ஸாமர்த்யம் போதவில்லை என்று இப்போது நாம் காட்டிலே வந்து வஸித்து, நீங்கள் இவனிடம் என்னைப் பிச்சை கேட்கச் சொல்வதிலிருந்தே நன்றாக நிதர்சனமாயிருக்கிறது. ப்ரஜைகளைப் பாலித்து, சத்ருக்களைத் தடுத்து, ராஜ்ய ரக்ஷணம் செய்ய சக்தியில்லாத நான், ராஜ்யத்தைக் கேட்காமல் போனால் அது தோஷமாகாது. சக்தியுள்ள க்ஷத்ரியன் ராஜ்யத்துக்குப் பாடுபடுவதுதான் தர்மத்தில் ஆசை. சக்தியில்லாத நான் அப்படிச் செய்தால் அது போகத்தில் ஆசைதான். இப்படிப்பட்டவனை ராஜ்ய பாரமும் ராஜ போகமும் ஸம்ஸாரத்தில் மேலும் அழுத்தத்தான் செய்யும். ஸ்வதர்மம் என்பதோ படிப்படியாய் ஜீவனை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கப் பக்குவப்படுத்துவதல்லவா? என்னால் முடியாததும், என்னை ஸம்ஸாரத்தில் மேலும் அழுத்துவதுமான ராஜ்ய பாரத்தை கேசித்வஜன் என்னிடமிருந்து அபஹரித்தது பகவான் எனக்குச் செய்த அநுக்ரஹமே என்று இப்போது தெரிந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த ராஜ்யமில்லை என்று பகவான் வைத்துவிட்ட பிறகும் நான் ஆத்ம ஸாம்ராஜ்யத்தை அறிய முயற்சி பண்ணாவிட்டால் – அதுவும் ஆத்ம வித்யையில் கரைகடந்தவனான இவன், ‘என்ன வேணுமானாலும் தருகிறேன்’ என்று சொல்லியும் அந்த அறிவு தானம் பெறாவிட்டால் – என்னைப் போல முட்டாள் எவனும் இருக்க முடியாது.”

“உயிர் போனாலும் போகட்டும் என்று இவன் அன்றைக்கு ப்ராயச்சித்தம் கேட்டுக் கொள்ள வந்ததும், இன்றைக்கு மறுபடி தக்ஷிணை தர வந்திருப்பதும் எதனால்? இவனுடைய அத்யாத்ம சாஸ்த்ர ஞானத்தினால்தானே? இவன் இப்போதே ஞானமார்க்க ஸித்தனாக ஆத்மாவில் ஒன்றிப்போய் உட்காராவிட்டாலும் இவனுடைய ஆத்ம சாஸ்த்ர ஞானம் உள்ளூர இவனுக்குக் கைகொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆத்மா அமரமானது என்ற அந்த நிச்சய புத்தியாலேயே உயிர் இருப்பதையும் போவதையும் இவன் பொருட்படுத்தவில்லை. அதே மாதிரி, உயிரோடிருந்து உலகத்தையே கட்டியாள்வதையும் இவன் என்னைப் போல பாரமாக நினைக்காமல், ராஜ்ய ‘பாரம்’ என்பதையும் லேசாக எடுத்துக் கொண்டு என்னைவிட நன்றாகப் பாலனம் பண்ணவும் இவனுடைய ஆத்ம சாஸ்த்ர அறிவே ஸஹாயம் செய்திருக்கிறது. அவனிடமே அந்த ராஜ்யப் பொறுப்பை விடுவதுதான் எனக்கு அறிவுடைமையாகும்.

“இத்தனை நாளாக, நமக்கு அநுகூலமாக ஸந்தர்பம் ஏற்படும்போது மறுபடி ராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே வனவாஸம் செய்தேன். இப்போது அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். ராஜ்யத்துக்குத் திரும்புவது பற்றி இனி ஒருநாளும் நினைக்க மாட்டேன். இவனிடம் ஆத்மோபதேசம் வாங்கிக் கொண்டு, இந்த வனத்திலேயே அதற்கான ஸாதனையைப் பண்ணி ஸித்தி பெற்று முடிந்து போவது என்றே முடிவு செய்துவிட்டேன்” என்று காண்டிக்யர் உறுதியாகச் சொன்னார்.

கேசித்வஜரிடம், “எனக்கு வேண்டிய தக்ஷிணை இது தான்: அத்யாத்ம வித்யையை உபதேசிக்க வேணும்” என்று ரொம்பவும் தாழ்மையோடு கேட்டுக் கொண்டார்.

“அப்படியா? நன்றாக ஆலோசனை பண்ணித்தான் கேட்கிறாயா? இப்போது என்னிடமிருந்து ஸுலபமாய் ராஜ்யத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டுவிடலாமே! நன்றாகச் சிந்தனை பண்ணிச் சொல்லு” என்றார் கேசித்வஜர்.

“நன்றாக யோஜித்துத்தான் கேட்கிறேன். ராஜ்யத்தைப் பற்றிய விசாரம் எனக்கு இல்லாமல் நீ அதை எடுத்துக் கொண்டு பெரிய உபகாரம் பண்ணியிருக்கிறாய். நீயோ அதை நிர்விசாரமாகவே நிர்வாஹம் பண்ணுகிறாய். அதற்கு உன்னைப் பக்குவப்படுத்தியிருப்பது அத்யாத்ம சாஸ்த்ரம். அதனால் அதுதான் எனக்கு வேண்டும். க்ஷத்ரிய தர்மப்படி அர்த்தம் யாசிக்காமல் வித்யாதானம் கேட்கிறேன். அநுக்ரஹம் பண்ணணும்” என்று காண்டிக்யர் பிரார்த்தித்துக் கொண்டார்.

ஸந்தர்பங்கள் உருவாவதைப் பொறுத்துச் சில பேருக்கு ஓர் உச்சமான கட்டத்தில் திடீர்ப் பக்குவம் வந்து விடும். படிப்படியாகப் பக்குவமாவதே பொது நியதியானாலும் ஈச்வர க்ருபையில் சில பேருக்கு க்ஷண  காலத்தில் பல படி தாண்டிப் போகிற ஸ்திதி ஏற்படும். அம்மாதிரிதான் இப்போது, பல காலமாகக் காண்டிக்யர் அப்யஸித்து வந்திருக்கும் கர்மாநுஷ்டான பலத்தில் ஏற்பட்ட சித்த சுத்தி என்பதன் விசேஷமும், அந்த விசேஷத்தோடு க்ருபா விசேஷமும் சேர்ந்து அவர் நேரே ஞான மார்க்கத்தை அப்யஸிப்பதற்கான ஆர்வத்தையும் ச்ரத்தையையும் பெற்றுவிட்டார்.