முகவுரை அண்மையில்2 நூற்றாண்டு விழா கண்டவர் ஸங்கீத சக்கரவர்த்தி அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் அவர்கள் மூன்றாண்டுகளில் நூறு தொடவிருப்பவர் ஞானச் ச

முகவுரை

அண்மையில்2 நூற்றாண்டு விழா கண்டவர் ஸங்கீத சக்கரவர்த்தி அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் அவர்கள். மூன்றாண்டுகளில் நூறு தொடவிருப்பவர் ஞானச் சக்கரவர்த்தியான காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகள். இவர் “தேவச் சொர்க்கச் சக்கரவர்த்திப் பெருமா”ளான முருகனைப் பற்றிய ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கிருதிக்கு அரியக்குடியிடம் முத்தாகப் பொருள் கூறியது மறக்கவொண்ணா நிகழ்ச்சி.

1 இவ்வுரையை ‘தெய்வ விஷயம்’ என்ற பிரிவில் வெளியிடவும் இடமுண்டாயினும், இதில் இசை தொடர்பாகவும் பல விஷயங்கள் வருவதால் ‘பண்பாடு’ என்பதி சேர்த்திருக்கிறது.

2 இக்கட்டுரை வெளியான 1990 தீபாவளியின் போதாகும்.

1961 ஜீன் மாதம் ஸ்வாமிகள் தேவகோட்டையில் நீண்ட முகாமிட்டிருந்தார்கள். ஜாடையில்கூட ஏதும் தெரிவிக்காத காஷ்ட மௌனம் பூண்டு, அது ஒரு வாரம். பத்து நாளென்று நீண்டுகொண்டே போயிற்று. அடியாரின் விண்ணப்பங்களைச் செவி கொள்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் காலை, அடுத்துள்ள காரைக்குடியைச் சேர்ந்த நகரத்தார் பெருமக்கள் சிலர் அவரைத் தரிசித்துத் தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். அவர்கள் பேச்சிடையே அரியக்குடியவர்கள் காரைக்குடியில் இருப்பதாகப் பிரஸ்தாவம் வந்தது.

உடனே அனைவருக்கும் ஆச்சரியமாக, அவரை அழைத்து வர முடியுமா என ஸ்ரீ ஸ்வாமிகள் சைகையில் கேட்டார்கள்.

உத்தரவானதாக அரியக்குடிக்குச் சொல்வதாகக் கூறி அவர்கள் விடைபெற்றனர்.

அன்று பிற்பகல் மூன்று மணியளவில் அரியக்குடி ஸ்வாமிகளின் முகாமுக்கு வந்துவிட்டார். பரவசம் என்றே சொல்லக்கூடிய பரபரப்புடன் வந்தார். காஷ்ட மௌனத்திலிருந்த ஜகதாசாரியர்கள் தம்மைக் கூப்பிட்டனுப்பியிருக்கிறாரென்பதில் ஏற்பட்ட உணர்ச்சி மிகுதி!

ஜகதாசாரியர்கள் ஜகத்திலேயே எளியவற்றை உவப்பவரல்லவா? அதற்கேற்கவே இருந்தது அவர் தேவகோட்டையில் தங்கியிருந்த ஜாகை. ஒரு விடுதியின் தோட்டப்புறத்திலிருந்த சிறிய அறையில் ஸ்வாமிகளின் வாஸம் அமைந்திருந்தது. வாயிற்பக்க வழியாக பக்தர்கள் தரிசிப்பதற்கின்றித் தோட்டம் பார்க்க அமைந்த சிறிய ஜன்னலொன்றைத் திறந்து வைத்துக் கொண்டு அதன் வழியேதான் தரிசனம் தந்து வந்தார். அடியார்கள் செடியும் கொடியும் புல்லும் மண்டிய பின்புறப்பகுதிக்கு வந்து சாளரம் வழியே ஸ்வாமிகளைக் கண்டு சென்றனர். சுகஜீவன சொகஸுகளை விரும்பும் நமக்கும் தமது எளிய வாழ்முறையில் சிறிதேனும் பழக்கம் தரவோ என்னவோ, ஸ்வாமிகள் இவ்விதம் செய்வதுண்டுதானே?

அரியக்குடி வந்துவிட்டாரென்று ஸ்வாமிகளிடம் அறிவிக்கப்பட்டவுடன் அவரையும் பின்புற ஜன்னலுக்கே அழைத்து வருமாறு ஸமிக்ஞை செய்தார்கள்.

அரியக்குடி அவ்விதமே தோட்டப்புறம் வந்து ஸாஷ்டாங்கமாகத் தண்டனிட்டெழுந்தார்.

அவ்வளவுதான். அனைவருக்கும் மகிழ்ச்சியாக, ஒன்று நடந்தது – அத்தனை நாட்கள் தக்ஷிணாமூர்த்தியாக இருந்த குரு மூர்த்தியின் மணிக்குரல் அதற்கே உரிய ஜீவச்செழிப்போடு ஒலிக்கலாயிற்று. கடகடவென பேசிக் கொண்டே போனார்கள்.

“நீ ராஷ்ட்ரபதி அவார்ட் வாங்கினதெல்லாம் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்ப்பெட் போட்டு – அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுண்டிருப்பே; நடைபாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு – பெரிய ஸதஸுலே கௌரவப்படுத்தியிருப்பா. நான் என்னடான்னா இங்கே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கிடத்திலே ஒன்னை ஒக்காத்தி வெக்கறேன்.”