முருகனின் அழகும் அருளும்
”மநஸிஜ கோடி கோடி லாவண்யாய”:
இரண்டு தடவை ‘நமஸ்தே’ போட்ட மாதிரி இரண்டு தடவை ‘கோடி’ போட்டிருக்கார். கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் ‘கோடி கோடி’.
‘மநஸிஜ கோடி கோடி’ – கோடி கோடி மன்மதர்கள். மநஸிஜன் என்பது மன்மதன் பெயர். மனஸிலிருந்து ஜனித்தவன் மநஸிஜன். காமம் மனஸில் பிறப்பதுதானே? புராண ரீதியிலும் கதை இருக்கிறது. மஹா விஷ்ணுவின் புத்ரனே மன்மதன். ஆனாலும் ரொம்ப விசித்ரமாக, காமனான அவன் மஹாலக்ஷ்மியிடம் பெருமாளின் காமத்தினால் அவளுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவனில்லை. விஷ்ணுவின் மனஸிலிருந்தே – அவர் மனஸால் எண்ணின மாத்திரத்திலேயே அவன் உண்டாகிவிட்டான். இன்னொரு பிள்ளை ப்ரம்மாவும் நேரே தகப்பனாரான விஷ்ணுவின் நாபியிலிருந்தே உண்டானவர். இப்படி எல்லாமே ஸ்வாமி வேடிக்கை விசித்ரமாகப் பண்ணுகிறார்!
அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். ‘மன்மதன்னு எண்ணம்!’ என்று தான் பரிஹாஸம் பண்ணுகிறோம். அப்படிப்பட்ட மன்மதர்கள் கோடி கோடி பேரின் அழகு சேர்ந்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் ஸுப்ரஹ்மண்யர். ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யர்’.
க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றி (பாகவதத்தில்) “ஸாக்ஷாத் மன்மத மன்மத:” என்று சொல்லியிருக்கிறது. மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கப்பட்ட அப்பேர்ப்பட்ட ஸௌந்தர்யவான் என்று அர்த்தம். அவர் மன்மதனையே படைத்தவர். அவருடைய மனஸுக்குள்ளேயிருந்துதான் அவன் ஸ்ருஷ்டியானது. மன்மதனுக்கும் மூலமானவர் மன்மத மன்மதனாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. க்ருஷ்ணனாக அவர் வந்தபோதும் மன்மதனே தான் அவருடைய பிள்ளையான ப்ரத்யும்னனாக வந்து தனக்கு அவரே மூலபுருஷர் என்று காட்டியிருக்கிறான்.
ஸுப்ரஹ்மண்யர் கோடி கோடி மன்மத லாவண்யராக இருப்பதுதான் ஆச்சர்யம். இவர் யார்? பரமேச்வரனின் புத்ரர். அந்தப் பரமேச்வரனோ மன்மதனை அப்படியே பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே அவர் மன்மதனைப் பொசுக்கினாரோ அதே நேத்ராக்னியிலிருந்து உண்டானவர் ஸுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தியாக ஆன ஸ்வரூபம் என்று தத்வார்த்தம். தத்வார்த்தம் இருக்கட்டும். நான் வேடிக்கையாகச் சொல்ல வந்தேன் – மன்மதனை தஹனம் பண்ணினவரின் பிள்ளை கோடி கோடி மன்மதனாக இருக்கிறார்!
குமாரன் என்பது அவருக்கு ஒரு விசேஷப் பேர் அல்லவா? தெற்கே எப்படிப் பிள்ளை என்றாலே பார்வதி பரமேச்வரர்களின் மூத்த பிள்ளைதான் என்று வைத்துப் ‘பிள்ளையார்’ என்கிறோமோ, அப்படி வடக்கே இளைய பிள்ளையைத்தான் கொண்டாடி ‘குமார்’, ‘குமார்’, என்றே சொல்கிறார்கள். நாமுங்கூட குமாரஸ்வாமி, குமரன் என்று சொல்கிறோம். இப்போது புருஷ ப்ரஜைகளில் பாதிப் பேருக்குப் பேர் ‘குமார்’தான்! ‘குமார’ சப்தம் குறிப்பாக ஸுப்ரஹ்மண்யருக்கே உரியதாக இருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் விச்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்கு ஸுப்ரஹ்மண்ய அவதாரக் கதையைச் சொல்லி முடிக்கும் போது இந்தக் ‘குமார ஸம்பவ’க் கதையைக் கேட்டால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சொன்னதாக வருகிறது. ஆதி கவி வாக்கில் வந்த ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையையே காளிதாஸர் தம்முடைய காவ்யத்துக்குத் தலைப்பாகப் போட்டார்.
குமாரன் என்ற பேர் விசேஷம் இருக்கட்டும். அதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால், அதற்குப் பிள்ளை என்ற அர்த்தத்தோடு மன்மத ஸம்பந்தமாக இன்னோர் அர்த்தமும் சொல்வதுண்டு. மன்மதனுக்கு ‘மாரன்’ என்றும் ஒரு பேர் உண்டல்லவா? மாரனுக்கு வெட்கத்தை உண்டாக்குகிறவன், அதாவது மாரனைப் பழிக்கும் மஹா அழகன் தான் குமாரன்: ‘குத்ஸித மார: - குமார:’. குமாரன் என்றாலே மன்மத மன்மதன், மநஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று அர்த்தம் ஏற்பட்டுவிடுகிறது.
தமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் – முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்து போன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக் கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால்தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத்தானே இருப்பார்? ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யாய.’
”தீன சரண்யாய”:
அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம்தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் – ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த்தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார். ‘தீன சரண்யர்’.