பாடலின் சில சிறப்பம்சங்கள்
தீன சரண்யாய…..லாவண்யாய……ஸுப்ரஹ்மண்யாய – எல்லாம் ஒரே மாதிரி, எதுகையோ மோனையோ ஏதோ ஒன்றாக, பாடியிருக்கிறார். எதுகைதான். ஆனால் வார்த்தையின் ஆரம்பம் எதுகையாக இல்லாமல் முடிவில் இருக்கிறது. இதை ‘அந்த்ய ப்ராஸம்’ என்பார்கள். ‘யாய’, ‘யாய’ என்று வருவது ‘அவருக்கு’ என்று நாலாம் வேற்றுமையில் அர்த்தம் கொடுக்கும். ‘ஸுப்ரஹ்மண்யருக்கு, கோடி கோடி மன்மத லாவண்யருக்கு, தீன சரண்யருக்கு நமஸ்காரம்’. ‘உனக்கு நமஸ்காரம்’ என்பது தான் ‘நமஸ்தே’.
‘மநஸிஜ கோடி கோடி….’ என்று வேகமான கதியில் பாடித் திருப்புவது வழக்கமாயிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து மெதுவாக, கம்பீரமாகப் பாடிக்கொண்டு வந்து இங்கே வேகமாகத் திருப்புவது. முதலில் பாடுவது சௌக காலம். விளம்ப காலம் என்றும் சொல்வார்கள். ‘விளம்பம்’ நல்ல ஸம்ஸ்க்ருத வார்த்தை. Slow என்று அர்த்தம். ‘சௌகம்’ – ஸரியாகப் புரிபடவில்லை. ‘ஸௌக்யம்’தான் ‘சௌக’மாச்சோ என்னவோ? நிதானமாகப் பாடினால் மனஸுக்கு விச்ராந்தியாக, ரொம்ப ஸௌக்யம் உண்டாகிறது. அது ராகத்தின் இழுப்பு, வளைசல்களுக்கு இடம் கொடுத்து ராக பாவத்தையும் விசேஷமாகத் தெரிவிக்கிறது. ஸாஹித்யத்தின் அர்த்த பாவத்திலேயும் தோய்ந்து நிற்க அவகாசம் கொடுக்கிறது. தீக்ஷிதர்வாள் க்ருதிகளில் இது தனிச் சிறப்பு. கம்பீரமான ஸம்ஸ்க்ருத பாஷை அதற்கேற்ற கம்பீர நடையோடு மத்த கஜம் அசங்கி அசங்கி வருகிற மாதிரி சௌக க்ருதிகளாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் நாம் அவஸர ப்ரக்ருதிகளாக இருக்கிறோமோல்லியோ? மனஸாலே, உடம்பாலே சாஞ்சல்ய மயமாக ஓடிக் கொண்டேயிருப்பதுதானே நம் நேச்சராக இருக்கிறது? அதனால் ஒரே சௌகமாக வளர்ந்து கொண்டு போனால் அலுப்புத் தட்டிப் போகிறது. அதற்காகத்தான் மாற்றாகக் கொஞ்சம் அங்கங்கே வேகமான நடையில் திருப்பும்படியாகவும் ஒவ்வோர் உருப்படியிலும் வைத்திருக்கிறார். சௌக காலத்துக்கு ரிலீஃபாக மத்யம காலம். ஒரே தித்திப்பு லட்டு சாப்பிட்டால் திகட்டப் போகிறதென்று கிராம்பு போட்டு விருவிரு பண்ணுகிற மாதிரி பாட்டிலேயும் கொஞ்சம் விருவிரு.
இந்தப் பாட்டில் பல்லவி, சரணம் இரண்டிலேயும் முடிக்கிற இடத்தில் மத்யம கால ஆவர்த்தங்கள் வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான பாட்டுக்களில் அநுபல்லவியிலேயும் சரணத்திலேயும்தான் மத்யம காலம் வைத்திருப்பார். ஸுப்ரஹ்மண்யர் நல்ல யுவா. “என்றும் இளையாய்” என்று சொல்லப்படுகிறவர். அதனால் ஆரம்பத்திலேயே அவர் குதிநடை போட்டுக்கொண்டு வருகிற மாதிரி மத்யம காலம் வைத்து விட்டார் போலிருக்கிறது!