பாத தாமரை
”பூஜிதாப்ஜ சரணாய” – பூஜித அப்ஜ சரணாய. ‘பூஜிக்கப்பட்ட தாமரைத் திருவடிகளை உடையவருக்கு’ நமஸ்காரம். ‘ப்ராமணர் முதலான எல்லா மக்களாலும் பூஜிக்கப்பட்ட திருவடித் தாமரைகளை உடையவர்.’ ‘அப்ஜ’ என்றால் தாமரை. ‘அப்’ என்றால் ஜலம். ஜலத்தில் ஜனிப்பது அப்ஜம். ஜலஜம் என்றுகூடத் தாமரைக்கு ஒரு பேர். அம்புஜம் என்றாலும் தாமரைதான். ‘அம்பு’ என்றாலும் ஜலந்தான். ஜலாசயமான ‘ஸரஸ்’ என்கிற குளத்தில் பிறப்பதால் ஸரஸிஜம், ஸரோஜம் என்று பேர். ஜலஜா, அம்புஜா, ஸரோஜா என்று பேர்கூட வைக்கிறோம். வனஜா என்பதும் தாமரையின் பேரில் உண்டானதுதான். ‘வனம் என்றால் காடு அல்லவா? காட்டிலேயா தாமரை முளைக்கும்?’ என்று தோன்றலாம். ‘வனம்’ என்பதற்கும் ஜலம் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஜலத்துக்குக் ‘கம்’ என்று இன்னொரு பேர். ‘கம்’மில் பிறப்பதாலேயே தாமரையைக் ‘கம்ஜம்’, ‘கஞ்ஜம்’ என்பது. ‘கஞ்ஜலோசனே!’ ‘கஞ்ஜதளாயதாக்ஷி!’ என்றேல்லாம் பாட்டுக்களில் வருகிறதல்லவா? ’நீர’மும் ஜலம்தான். நீரம்தான் நீர். தாமரையை ‘நீரஜம்’ என்று சொல்கிறோம். இப்படியே ‘வாரி’ – அதுவும் ஜலந்தான் – அதை வைத்து ‘வாரிஜம்’ என்பது. ‘அப்ஜம்’ என்றால் தாமரை என்று சொல்ல வந்தேன்.
ஸமஸ்த ஜனங்களும் பூஜை செய்து பூப்போடும் பாதம் தாமரைப் பூவாக இருக்கிறது! அத்தனை அழகு, குளிர்ச்சி, ஸௌகுமார்யம் (மென்மை)! தாமரையிலிருந்து தேன் வழிகிற மாதிரி திருவடித் தாமரையிலிருந்து காருண்யாம்ருதம் வழிகிறது.