முருகன் – சக்தி – ஸர்ப்பம்
”வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய”:
”வாஸுகி, தக்ஷகன் முதலான ஸர்ப்பங்களின் ரூபத்தை எடுத்துக் கொண்டிருப்பவர்.” ஸர்ப்பம் என்றால் ப்ராண சக்தியான குண்டலினீ என்று அர்த்தம். குண்டலம் மாதிரி பாம்பு வளைத்துச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்கிறதல்லவா? அப்படித்தான் ஸாதாரணமாக நாம் இருக்கிற ஸ்திதியில் ப்ராண சக்தி சுருட்டிக் கொண்டு தூங்குகிற மாதிரி இருக்கிறது. ஸாதனை செய்தால் அது விழித்துக்கொண்டு மஹா சக்தியோடு ப்ரகாசித்து எழும்பி, அப்புறம் பரமாத்ம ஸ்வரூபமான பரம சாந்தியில் ஐக்கியமாகி விடுகிறது. குண்டலினீ சக்தி என்று அதை அம்பாளாகச் சொல்வது. அதனால்தான் பரமசிவனுக்கு ஒரே நாகாபரணம். நாக குண்டலமே போட்டுக் கொண்டிருக்கிறார். சிவகுமாரரான ஸுப்ரஹ்மண்யர் சக்தி ஸ்வரூபமாக இருப்பவர்.
ஸுப்ரஹ்மண்யர் என்றால் வேல்தான் முக்யமாக நினைவு வருவது. எல்லா ஸ்வாமிக்குமே ஆயுதங்கள் இருந்தாலும், ஸுப்ரஹ்மண்யரும் அநேக ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருந்தாலும் ஸாக்ஷாத் அவரே வேலாயுதம் என்று நினைக்கிற அளவுக்கு எந்த ஸ்வாமியுடனும் எந்த ஆயுதத்தையும் ‘ஐடெண்டிக’லாக (ஸர்வஸமமாக) நினைப்பதில்லை. அந்த வேலுக்கு என்ன பேரென்றால் சக்தி, சக்த்யாயுதம் என்பதே! சக்திவேல் என்பார்கள். சக்தி ஸ்வரூபரான அவர் குண்டலினீயானபடியால் ஸர்ப்ப ஸ்வரூபமாக இருக்கிறார். “ஸொப்பனத்தில் பாம்பு வந்துதா? அப்ப ஸுப்ரஹ்மண்யருக்கு ப்ரீதி செய்யணும்” என்றுதான் சொல்கிறோம். ஷஷ்டி பூஜை என்பதே நாகராஜ பூஜையாகப் பண்ணுகிற வழக்கமிருக்கிறது. குறிப்பாக, புத்ர தோஷம் நீங்க ஷஷ்டி வ்ரதம், நாக பூஜை என்று செய்கிறோம். தேவர்களெல்லாம் தங்களுக்கு மஹா சக்திமானான ஸேநாதிபதி வேண்டுமென்று வேண்டிக் கொண்டதன் பேரில் சக்தி ஸ்வரூபமான புத்ரனைப் பரமேச்வரன் அவர்களுக்கு வரமாகத் தந்தார். அவரையே ஜனங்கள் தங்களுக்குப் புத்ரவரம் வேண்டி ஷஷ்டியில் வ்ரதமிருந்து பூஜை செய்கிறார்கள். அதில் ஸர்ப்பத்திற்கு, புற்றுக்குப் பால் நைவேத்தியம் முக்யமாகச் செய்கிறார்கள்.
ஆந்த்ர, கர்நாடக தேசங்களில் ஸுப்ரஹ்மண்யருக்கு நராக்ருதியில் விக்ரஹம் வைப்பதில்லை. நாக ஸ்வரூபமாகத் தான் அங்கே கோவில்களில் இருக்கும். ‘ஸுப்ரஹ்மண்யா’ என்றே கன்னட தேசத்தில் ஸ்தலம் இருக்கிறதே, அங்கே கூட அப்படித்தான். ‘ஸுப்பராயுடு’ என்று தெலுங்கர்கள் செல்லமாகச் சொல்வதே பாம்பையும் குறிப்பதாக இருக்கிறது.
ஆசார்யாள் ‘புஜங்க’த்திலே ஸுப்ரஹ்மண்யரை நாகத்தோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். டைட்டிலை நினைத்ததுமே சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. பேரே புஜங்கம்! புஜங்கம் என்றாலே பாம்புதான். அதற்குக் கால் கிடையாது. மரவட்டை, கம்பளிப் பூச்சிக்கெல்லாம் எண்ணி முடியாத கால்கள். ஸர்ப்பத்துக்குக் காலே இல்லை. உடம்பு முழுக்க புஜம் மாதிரி சாட்டையாட்டமாக நீண்டிருக்கிறது. புஜத்தை அப்படியே வளைத்து வளைத்து இழுத்துக் கொண்டு போகிறதால் அது ‘புஜங்கம்’. பாம்பின் கதி மாதிரியே அமைந்த ஒருவித சந்தத்துக்கு புஜங்க ப்ரயாதம் என்று பெயர். அந்த மீட்டரில் உள்ள ச்லோகத்தைச் சொல்லும் போதே பாம்பு வளைந்து வளைந்து போகிற மாதிரியிருக்கும். ஆசார்யாள் பல தெய்வங்களின் மேலே புஜங்கம் பாடியிருக்கிறார். ஆனாலும் ‘புஜங்கம்’ என்ற மாத்திரத்திலே நினைப்பது ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தைத்தான். மற்ற ஸ்வாமிகளின் மேலே அஷ்டகம், பஞ்சரத்னம், இன்னம் பலவிதமான ஸ்துதிகளையும் பண்ணிவிட்டு ஒரு புஜங்கமும் பண்ணியிருக்கிறார். ஆனால் ஸுப்ரஹ்மண்யர் பேரில்தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் அடக்கி ஒரே ஒரு புஜங்கம் மட்டும் பண்ணி நிறுத்தி விட்டார். இதுவே ப்ரூஃப்தான், அவர் நாகஸுப்ரஹ்மண்யமாகவே ஸ்வாமியைக் காட்டுவதற்கு என்று புரிந்தது.