சைவ வைஷ்ணவ ஒற்றுமை
த்வேஷ பாவம் போய் ஒன்று சேர்ந்து விடுவதைச் சொன்னேனே, இங்கேயும் அதற்கு எக்ஸாம்பிள். விஷ்ணுவின் பிள்ளையான மன்மதனை எரித்த ஈச்வரனுக்கு அதே நேத்ராக்னியிலிருந்து பிறந்தவர் ஸுப்ரஹ்மண்யர். இவருக்கே அந்த விஷ்ணு ஒட்டிக்கு இரட்டியாகத் தம் பெண்களைக் கல்யாணம் பண்ணித் தந்திருக்கிறார்!
இப்படிப் பார்த்துக் கொண்டு போனால், சைவம்-வைஷ்ணவம் என்பது கூடப் போய் “ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய” ஒரு வைஷ்ணவருக்கு மாஸ்டர்-பீஸாக இருப்பது விசித்ரமேயில்லை, ரொம்ப ந்யாயம்தான் என்றாகிவிடும். விஷ்ணுவின் மாப்பிள்ளைதானே அவர்? மாப்பிள்ளையிடமில்லாத ப்ரியமும் மரியாதையும் உண்டா?
இன்னம் ஒரு படி மேலே, அம்பாள் விஷ்ணு ஸஹோதரிதானே? மீனாக்ஷியை ஸுந்தரேச்வரருக்கு யார் தாரை வார்த்துத் தருவது? பெரிசாக, லோகமே கொண்டாடுகிற சில்பமாக அடித்து வைத்திருக்கிறதே!...
முதலில் “ஸமஸ்த ஜன”ங்களும் பூஜிப்பதாகச் சொன்ன தீக்ஷிதர் அப்புறம் “ஸகல தேவ”ர்களும் வந்தனை செய்வதைச் சொல்கிறார். மனிதர்களில் பல ஜாதி இருப்பது போல் தேவரிலும் உண்டு. வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் - இன்னம் அடுத்த படிகளில் கந்தர்வர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் – என்பதெல்லாம் தேவ ஜாதிகள். எல்லா மனுஷ்ய ஜாதிகளாலும் பூஜிக்கப்படுவது போலவே இந்த எல்லா தேவ ஜாதிகளாலும் பூஜிக்கப் படுபவர் ஸுப்ரஹ்மண்யர் – “ஸகல தேவ வந்திதாய; வரேண்யாய.”