வேற்றுமையில் ஒற்றுமை
இங்கே நம் ஊரிலே அந்த ஆட்டக்காரனும் தூக்கக்காரனுங்கூட இதே பரம ஸத்யத்தைத்தான் ‘unity in diversity; - வேற்றுமையிலேயே ஒற்றுமை – என்கிறபடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபஞ்சமெல்லாம், உயிர்களெல்லாம் ஒடுங்கிப் போகிற சாந்தமாக சிவனைத் தான் பொதுவிலே சொல்வது. உபநிஷத்திலேயே அப்படித்தான்!2 ’ப்ரபஞ்சங்கள் எல்லாம் ‘உபசமனம்’ என்பதாக உள்ளே அடங்கிப் போன சாந்தமே சிவமாக இருக்கிறது, அத்வைதமாக இருக்கிறது. இப்போது தூக்கம்-முழிப்பு-கனா என்று மூன்று பார்த்தோமே, அவற்றைக் கடந்த நாலாவது நிலையான ‘துரீய’மாக இருக்கிறது’ என்று அந்த உபநிஷத் சொல்கிறது. ஆனாலும் இங்கே நாம் என்ன பார்க்கிறோம்? அந்த சாந்த சிவம்தான் ஆட்டமான ஆட்டம் ஆடுகிறது.
2. மாண்டூக்ய உபநிஷ்த்து 7,12
அந்த சாந்த சிவத்துக்கு எதிர்வெட்டாக மஹா விஷ்ணுவையே இந்த மாய ப்ரபஞ்ச காரகனாக அத்தனை மாயா நாடகமும் பண்ணுவித்துக் கொட்டம் போடுபவனாகச் சொல்வது பொது வழக்கம். இங்கே பார்த்தாலோ அவன்தான் பரம சாந்தனாக, ‘சாந்தாகாரம் புஜகசயனம்’ என்று சயனித்துக் கொண்டு, நித்திரை பண்ணிக் கொண்டிருக்கிறான்!
‘எதிர்வெட்டே இல்லை! நாங்கள் இரண்டு பேரும் எதிரே எதிரே நின்று வெட்டிக் கொண்டிருக்கிறவர்களில்லை’….
எதிரே நிற்பவன்தான் எதிரி! பக்கத்திலே இருக்கிறவன் தான் பக்ஷமாக இருப்பவன். ‘பக்கம்’ என்ற வார்த்தையே ‘பக்ஷ’த்தின் மரூஉ தான்! அதனால்தான் கோவில் ஸந்நிதிகளில் ஸ்வாமிக்கு இரண்டு பக்கமுமே ஸேவார்த்திகள் நிற்பது. கடாக்ஷம் – கடைக்கண் – தான் குளிர்ச்சி; க்ருபா வர்ஷம் பொழிவது. அதைத்தானே பிரார்த்திப்பதும்? நேர்ப்பார்வையை இல்லையே! அந்தக் கடைக்கண் பார்வை பக்கவாட்டில் நின்றால்தானே கிடைக்கும்?.....
‘நாங்கள் இரண்டு பேரும் எதிரிகள் இல்லை. வெட்டிக் கொள்கிறவர்களில்லை. ரொம்பவும் பக்ஷமாக ஒட்டிக் கொண்டவர்கள்தான்!’ ‘ஒட்டிக் கொண்டு’ என்றால் கூடப் போதாது; ஒன்றியே இருப்பவர்கள்; ஒன்றாகவே இருப்பவர்கள். பக்கத்தில் பக்கத்தில் இல்லை. எங்களில் பரஸ்பரம் ஒருத்தருக்குள்ளேயே இன்னொருத்தர்! ‘இருவர் அங்கத்தால் திரிவரே(லு)ம் ஒருவன் ஒருவன் அங்கத்(து) உளன்’ என்று பொய்கை ஆழ்வார் சொன்ன மாதிரி அங்க வித்யாஸம் வெளியிலே தெரிந்தாலும் உள்ளே அந்தரங்கத்திலே, ஒன்றாகவே இருப்பவர்கள்’ என்றே அந்த இரண்டு பேரும் சொல்லாமல் சொல்லிக்கொண்டு, அதற்கு மறைமுகமாகச் சான்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
‘இருவர் அங்கத்தால்’ என்று நான் ஸந்தி பிரித்துச் சொன்னது மூலத்திலும், ஸ்ரீவைஷ்ணவர்கள் பாசுரம் ஸேவிக்கிற பாணியிலும் ‘இருவரங்கத்தால்’ என்று சேர்ந்து வரும். அதைச் சாதுர்யமாக ‘இரு அரங்கத்தால்’ என்றும் பிரித்துக் கொள்ளலாம்! அரங்கம் என்றே சொல்லும் ஸ்ரீரங்கம், ஸபை எனப்படும் சிதம்பரம் ஆகிய இரண்டு அரங்கத்தால் அவர்கள் திரிந்தாலும், - ‘திரிவரேலும்’, அதாவது ஜகத் வியாபாரம் முழுவதையும் பண்ணுகிறார்களாயினும், ஒருத்தருக்குள் ஒருத்தர்தான் – ‘ஒருவனொருவனங்கத்துளன்’ – என்று அர்த்தம் பண்ணலாம்.