தூங்குபவரின் உள்ளேயே ஸபை; விச்வாகார நடனம்
எல்லாம் ஸரி, இன்னம் ஒரு கேள்வி நிற்கிறதே! ‘ஸபையிலே ஸபாபதி என்றே பேர் பெற்றவன் டான்ஸ் பண்ணுகிறது ரொம்பப் பொருத்தம்; சயனித்துக் கொண்டு நித்திரை பண்ணி ‘சாயி’ என்றே – ரங்கசாயி, சேஷசாயி, பன்னகசாயி, புஜகேந்த்ரசாயி, க்ஷீராப்தி சாயி என்றெல்லாமே – பேர் பெற்றிருக்கிறவன் ஸபையிலே வந்து படுக்கையைப் போட்டுக் கொண்டு தூக்கம் போடுகிறானென்றால் பொருத்தமாயில்லையே!’ என்ற கேள்விக்குப் பதிலைக் காணோமே!” என்றால்:
அவர் ஏதோ அவருக்கு வெளியிலே இருக்கிற ஒரு ஸபைக்குள்ளே வந்து பைந்நாகப் பாயை விரித்துக் கொண்டு நித்திரை பண்ணவில்லை. அந்த ஸபை – அரங்கம், அதுவும் – அவருடைய சித்தத்துக்குள்ளேயே அவருடைய ஸ்வப்னமாக விரிகிற ஸமஸ்த ஸ்தூல-ஸுக்ஷ்ம-காரண ஜகத்துக்களில் இருப்பதுதான்! நம்முடைய ஜகத்துக்குள் உள்ள ஸபைக்கு அவர் வரவில்லை! அவருக்குள்தான் நாமும், ஜகத்தும், ஸபையும் எல்லாமுமே இருக்கிறது!
ஜகத் ஆட்டமாக ஆடுகிறதுதான்! பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஒரு டான்ஸ், ஸுர்யனைச் சுற்றி வருவதான இன்னொரு டான்ஸ் என்று இரண்டை ஒரே ஸமயத்தில் பண்ணிக் கொண்டிருக்கிறது. மற்ற கிரஹங்களும் அப்படியே ஸுர்யனைச் சுற்றிக் கொண்டு – ராஸ லீலையில் க்ருஷ்ணனைச் சுற்றி கோபிகா ஸ்த்ரீகள் மாதிரி – டான்ஸ் பண்ணிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த ஸுர்யனும், இன்னும் நக்ஷத்ர-க்ரஹ மண்டலங்கள் பூராவுமே ஒரு டான்ஸாக எதையோ நோக்கி ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பதாகத்தான் தெரிகிறது என்று ஆஸ்ட்ரோ ஃபிஸிக்ஸில் சொல்கிறார்கள்.
ஒரு பக்கம் இப்படி விச்வாகார டான்ஸ். இன்னொரு பக்கம், இன்னொரு கோடியில், ரொம்..பக் கோடியில் துளியிலும் துளியான அணுவுக்குள்ளேயும் ப்ரோடான் என்கிற பரமாணுவைச் சுற்றி எதைவிட ‘ஸ்பீட்’ கிடையாதோ அந்த ‘லைட்’டின் வேகத்தோடு எலெக்ட்ரான் என்ற பரமாணு பண்ணும் டான்ஸ்!
மநுஷ்யர்களாகிற நம்மை எடுத்துக் கொண்டாலோ ரத்தம் துடித்துத் துடித்துப் பாய்கிற டான்ஸ், ச்வாஸம் ஏறி இறங்குகிற டான்ஸ், வயிற்றுக்குள்ளே அன்னபானங்களைச் சுழட்டிச் சுழட்டி ஜீர்ணிக்கிற டான்ஸ், பலவிதமான ‘க்ளான்டு’களும் சுரந்து கொண்டிருக்கிற டான்ஸ் என்று டான்ஸ் மயமாக இருக்கிறது!
நம்முடைய, நம்மில் ஒவ்வொருத்தருடைய சித்தத்தையும் எடுத்துக் கொண்டாலோ, கேட்கவே வேண்டாம்! இதுவரை சொன்ன அத்தனை டான்ஸையும் சேர்த்து வைத்த டான்ஸ்! ஆசை, கோபம், அந்த இரண்டிலே கவடுவிடுகிற நூறாயிரம் உணர்ச்சிகள் ஆகியவை ஆடுகிற, நம்மை ஸதாவும் ஆட்டி வைக்கிற டான்ஸ்!
இத்தனையும் அவனுடைய மாயக் கனாவுக்குள் இருக்கிறது தான்!
அதாவது இத்தனை டான்ஸும் நடக்கிற ஸபை, அரங்கம், அவன் சித்தத்துக்குள் இருக்கிறதுதான்!
அந்த அவனை, அவனுடைய அந்த ஸாக்ஷாத் ஸ்வரூபத்தில் நம்மால் பார்க்க முடியாது. அது பார்க்கக் கூடிய ஸ்வரூபமே இல்லை. ஞானிகள் அநுபவமாகவே தெரிந்து கொள்ளும் தத்வ ஸ்வரூபம் அது.
பரம கருணையினாலே – நாம் நிஜம் என்று நம்பி மோசம் போகும் ஜகத்து தன்னுடைய லீலா நிமித்தமான மாய ஸ்வப்னமே என்று நமக்கும், பாமர பாமரமான நமக்கும், கண்ணுக்கு முன்னால் அழகாக, திவ்ய ரூபமாகக் காட்டிக் கொடுக்கிற பரம கருணையினாலே – அந்த தத்வ ஸ்வரூபன் அந்த தத்வத்தின் ரூபகமான (உருவகமான) ஒரு ஸ்தூல மூர்த்தியாகி, ஸகலரும் தன்னைப் பார்த்துத் தத்வம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, அரங்கம் என்று பெரிசாக ஸபை கூட்டி, ஜகத்துக்குள்ளே தான் வந்து நித்திரை செய்வதாக தரிசனம் கொடுக்கிறான்!