இரு ஸபைகளும் மௌன அகண்டமே!
ஜகத் என்பது நிஜமேயில்லை, ‘பொய்ம்மாயை’ தான்1 என்கிற இதே தத்வத்தைத்தான் சித்ஸபையிலே ஆட்டக்காரரும் காட்டுகிறார். பரமாத்மாவின் சித்த ஸபைக்குள்ளே முளைத்த ஜகத்தையே தன்னுடைய ஆட்டத்தினால் உண்டாக்குவதாக நமக்குப் புரியும்படி, கண்ணுக்குத் தெரியும்படி பரம க்ருபையோடு – ‘க்ருபாநிதி இவரைப் போலக் கிடைக்குமோ?’ என்றே கோபாலக்ருஷ்ண பாரதி கேட்கிறாரே,2 அப்படிப்பட்ட க்ருபையோடு – ஆனந்த நடனமாக, வெளிநாட்டு அநுபவிகளும் கலாரஸிகர்களுங்கூட, ‘இதற்கு மேலே ஒரு மூர்த்தியில்லை!’ என்று கொண்டாடும்படியான ரூபத்தோடு ஆடிக் காட்டுகிறார்!
அத்தனை சித்தங்களும், அவருடைய திவ்ய சித்தமுமேகூட அடங்கிப் போய், வெளியிலே தெரிகிற சிவனும் உள்ளுக்குள் உள்ளே இருக்கும் சிவமாக இருக்கிற பரப்ரஹ்மமான ஞான ஆகாசமே இத்தனைக்கும் அடி ஆதாரம். அது ஒன்றே பரம ஸத்யம். அது ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டே இத்தனை ஆட்டத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. ‘சிதம்பரம்’ என்றால் அந்த ‘ஞானாகாசம்’ தான். ‘சித்’ – ஞானம்; ‘அம்பரம்’ – ஆகாசம். அதையே தம் ஆட்டத்துக்கான ஸபைமேடை – dias – ஆகக் காட்டுகிறார்.
அதே மௌன அகண்டத்தையே நித்திரை என்ற ரூபத்தில் அரங்கத்தின் தூக்கக்காரர் காட்டுகிறார்.
- ‘பொய்ம்மாயப் பெருங்கடலில்’ என்ற அப்பரடிகளின் திருவாக்கு ஸ்ரீசரணர் மிகவும் உகந்த ஒன்று. எனவே போலும், இவ்வுரையில் ‘பொய்ம்மாயை’ என்று புணர்ச்சி ‘ம்’மை அழுத்தியே ஒவ்வொரு முறையும் கூறினார்.
- ’ஸபாபதிக்கு’ என்ற பாடல்.
ஆகக்கூடி மொத்தத்தில், மறக்கக் கூடாத பெரிய தத்வமாக, ஸத்யமாக நாம் தெரிந்து கொள்வது, ‘அந்த இரண்டு ஆஸாமிகளும் வெளிப்பார்வைக்கு அடியோடு வித்யாஸமான வெவ்வேறே கார்யங்களைப் பண்ணினாலும் உள்ளே ஒருத்தரே தான்! ஒரே தத்வத்தைத்தான் அவர்கள் இரண்டு விதமாக ரூபகம் செய்து காட்டுகிறார்கள்’ என்பதுதான்.