ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம்
கவிராயர் ராமநாடகம் பண்ணி முடித்தவுடன், பூர்வத்தில் கம்பர் ஸ்ரீரங்கத்தில்தான் அவருடைய ராமாயணத்தை அரங்கேற்றியிருந்ததால், தாமும் அதே மாதிரிச் செய்யலாமென்று உத்தேசித்தார். திருவரங்கத்திலேயே அரங்கேற்றுப்படி! ஸ்ரீரங்கத்தின் வித்வத் ஸமூஹப் பெரியவர்களின் அங்கீகாரம் நூலுக்கு நல்ல பெயரை, புகழைக் கொடுக்கும் என்றும் ரொம்பக் காலமாக இருந்து வந்தது. அப்படியே அங்கே போய், கம்பராமாயணம் அரங்கேற்றம் நடந்த பங்குனி ஹஸ்த தினத்தன்றே தம் நூலை அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்; கம்பர் அரங்கேற்றிய அதே ஸந்நிதியில்!
ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றுவதில் ரொம்பப் பொருத்தமுண்டு. என்னவென்றால்: ஸ்ரீரங்கநாத விக்ரஹந்தான் ராமர் அவதரித்த இக்ஷ்வாகு வம்ச ராஜாக்களின் குலதெய்வம். ராமரும் வனவாஸம் முடித்துத் திரும்பியவுடன் அதற்குத்தான் பூஜை பண்ணினார். தொடர்ந்தும் பண்ணியிருப்பார். ஆனால் அவருடைய தயாள குணத்தினால், ஸ்நேஹ பாவத்திலே பிறந்த தியாகத்தினால், பட்டாபிஷேகம் பார்த்துவிட்டு விபீஷணர் லங்கைக்குத் திரும்பினபோது, அவருக்கு ரொம்பப் பெரிய gift-ஆக ஒன்று கொடுக்க வேண்டுமென்று நினைத்து, இக்ஷ்வாகு குல தெய்வமும், குலதனமுமான ரங்கவிக்ரஹத்தையே கொடுத்து விட்டார்! விக்நேச்வரர்தான் புண்யம் கட்டிக்கொண்டு ‘ட்ரிக்’குகள் பண்ணி, அது இந்தியாவை விட்டுப் போகாமல் ஸ்ரீரங்கத்திலே இருக்கும்படியாகப் பண்ணினார்.
காவ்ய நாயகனான ராமனுடைய குலதெய்வத்தின் க்ஷேத்ரத்திலேயே அவனைப் பற்றிய காவ்யத்துக்கு அரங்கேற்றும்படி செய்வது பொருத்தம்தானே?
ஸ்ரீரங்கம் வந்து அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்த கவிராயரிடம் அந்த ஸ்தலத்துப் பெரியவர்கள், “ரங்கநாதராலயத்தில் அரங்கேற்றுகிறீர். ஆனபடியால் முதலில் அவர் மேலே ஒரு பாட்டுப் போடும்!” என்று சொன்னார்கள்.
கவிராயர் அப்படியே பண்ணினார்.