கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்
அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.
முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.
எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.
(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)
அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.
‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’
என்று முதல் கேள்வி.
‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’
அதுதான் பல்லவி.
அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:
ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த
இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)
‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.
கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.
உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.
காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.
அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!
வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?
கோசிகன் சொல் குறித்ததற்கோ?
கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.
அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.
தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?
“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’
அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:
அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?
வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.
ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!
பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,
ஈசன் வில்லை முறித்ததற்கோ?
என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.
அதுவும் இல்லையென்றால்,
பரசுராமன் உரம் பறித்ததற்கோ?
அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.
அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.
‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.
இன்னும் ஒரு காரணம் – கேள்வி:
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ?
’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’
‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.
இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.
தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்
துறை கடந்த இளைப்போ?
‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?
மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’
காசினி மேல் மாரீசன் ஓடிய
கதி தொடர்ந்த இளைப்போ?
’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’
அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!
‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,
ஓடிக் களைத்தோ?
என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.
தேவியைத் தேடி இளைத்தோ?
’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’
மரங்கள் ஏழும் தொளைத்தோ?
’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’
கடலைக் கட்டி வளைத்தோ?
”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”
அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.
இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?
லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….
லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.
அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:
ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?
முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.
பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.