நல்லதைச் சொல்லி ஆபத்து

நல்லதைச் சொல்லி ஆபத்து !

பக்கத்திலேயிலிருந்து இருந்து இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த ஒருவர் அப்போது ஒரு ஸ்லோகம் சொன்னதாக இருக்கிறது:

ஹிதம் ந வாச்யம் அஹிதம் ந வாச்யம்

ஹிதாஹிதே நைவ வதேத் கதாசித்

ஹிதஸ்ய வக்தாபி விபத்திமேதி

ஏரண்டகோ நாம பிலம் ப்ரவிஷ்ட :

''யாருக்கும் நல்லதையும் சொல்ல வேண்டாம்;கெட்டதையும் சொல்ல வேண்டாம். ஒருபோதும் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லவே வேண்டாம். நல்லதைச் சொன்னவனும்கூட ஆபத்தை அடைகிறான். உதாரணமாக, ஏரண்டகர் என்று பெயர் படைத்தவர் பிலத்தில் பிரவேசித்து விட்டார்''என்பது ஸ்லோகத்தின் அர்த்தம்.

இதிலும் கொஞ்சம் நியாயமில்லாமல் போகவில்லை. லோகத்தில் எத்தனையோ நடக்கும். ஈச்வர லீலை, ஜனங்களின் கர்ம கதி எப்படி எப்படியோ இருக்கும். ஆனதால் உலகத்தில் இருக்கிற தப்பு, ஸரிகளையே ஒருத்தன் எப்போது பார்த்தாலும் நினைத்துக் கொண்டு அட்வைஸ் பண்ணிக் கொண்டே இருப்பது என்றால் தான் ஆத்மாவைக் கவனித்து உயர்த்திக் கொள்ள முடியாமலே போகும். அதனால் தன் லிமிடேஷனைப் புரிந்து கொண்டு, நம்முடைய அட்வைஸ் எங்கே எடுபடுமோ அங்கே மட்டும் நல்லது பொல்லாதுகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதுதான் நம் மாதிரி ஸாமான்ய நிலையில் இருக்கப்பட்டவருக்கு யுக்தமாயிருக்கும். அது தான் இந்த ச்லோகத்தின் படிப்பினை. நல்லதைச் சொல்லிவிட்டு அது நடைமுறை ஆவதற்கு நாமே தியாகம் செய்ய நேரிடலாமென்னும்போது, அப்படிப்பட்ட தியாகத்துக்கு பரிபக்குவப்படாதவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே ச்லாக்யம் என்ற நீதியை இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் தியாகத்துக்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற லக்ஷ்யத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹான்கள் விஷயம் வேறே. அவர்கள் ஆத்ம பரிபாகம் அடைந்து விட்டார்கள். ஈச்வரனுடைய லோக நாடகம் என்ன, ஜனங்களின் கர்ம கதி என்ன என்றெல்லாம் தெரிந்து கொண்ட அவர்கள் எத்தனை விபரீதம் நடந்தாலும் ''அவன் இஷ்டப்படி''என்று சரணாகதி பண்ணிக் கிடந்தாலும் கிடப்பார்கள்;அல்லது பக்தி வேகத்தால் அவனையே நாடகத்தை மாற்றும்படிப் பண்ணினாலும் பண்ணுவார்கள்.

அவனை ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மாதிரி கெடுபடி பண்ணி வேலைகூட வாங்குவார்கள்;அல்லது தங்கள் தபஸையெல்லாம் த்யாகம் பண்ணி தத்-த்வாரா [அதன் மூலம்]ஜன ஸமூஹத்தின் பாப கர்மாவை 'ந்யூட்ரலைஸ்'பண்ணி ஒரு பெரிய மங்களம் ஏற்படும்படியாகவும் பண்ணுவார்கள்.

உத்கிருஷ்டரான ஏரண்டக KS லோக ஹிதம் சொன்னதற்காக இப்படி அநியாயமாக ஜீவனைப் பலி தர வேண்டியிருக்கிறதே என்பதைப் பார்த்து எவரோ ஒருத்தர் மனஸ் தெரிந்து, யாரும் எவருக்கும் நல்லதையும் சொல்ல வேண்டாம், கேட்டதையும் சொல்ல வேண்டாம் என்று ச்லோகம் பண்ணிவிட்டார். ஏரண்டகரேதான் இந்த ச்லோகத்தைச் சொல்லிக் கொண்டு பிலத்துக்குள் இறங்கினார் என்றும் சிலர் சொல்கிறார்கள். அவருக்கும் அந்த ஸமயத்தில் கொஞ்சம் மனஸ் கலங்கிக் கண்ணிலிருந்து ஜலம் வந்து, இப்படிச சொன்னார் என்கிறார்கள். இப்படிச் சொல்வது ஸரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மஹான்கள் ஒரு மஹாத் த்யாகம் செய்யும் போது நல்ல மன நிறைவோடு லோகத்தையெல்லாம் வாழ்த்திக் கொண்டுதான் போவார்களே தவிர, தன் ஒருத்தனுக்கு சிரமம் உண்டாயிற்றே என்று நினைத்துத் தியாகத்துக்காகப் பச்சாதாபப் பட்டார்கள் என்பது அந்த தியாகத்தையும் வியர்த்தமாக்கி, மஹானையும் வெற்று ஆளாக ஆக்கி விடுவதாகும்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், அவர் கண்களில் ஜலம் வந்திருந்தால் அது ஆனந்த பாஷ்பமாகத் தான் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ''என்றைக்கோ ஒரு நாள் இந்த சரீரம் போக வேண்டியதுதான்; அது ஏதோ வியாதி, வக்கையில் போகாமல் லோகோபகாரமாக நம்முடைய மனப் பூர்வமாகக் காணிக்கை தரப்பட்டுப் போகிறதே''என்று அவர் ஸந்துஷ்டிதான் அடைந்திருப்பார். விளக்கெண்ணெய்ச் சாமியாராகையால் ஆமணக்குக் கொட்டை தன்னைப் பிழிந்து கொண்டு ஜனங்களுக்கு உபகரிப்பது போலவேதான் அவரும் இருந்திருப்பார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மஹரிஷி கண்ட உபயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  கீதை, பைபிள், குறள் போதனை; ஏரண்டகரின் உத்தம உதாரணம்
Next