கன்னடியன் கால்வாய் கர்ம வியாதியும் காயத்ரி சக்தியும் சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு ஆ

கன்னடியன் கால்வாய்
கர்ம வியாதியும் காயத்ரி சக்தியும்

சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்திலிருந்து கொண்டு ஆட்சி செய்த ஒரு கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்யம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. “ராஜ வைத்யம்” என்றே சொல்கிறோமல்லவா, அப்படி எவ்வளவோ சிகிச்சை செய்தும் குணமாகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டான்.
ஒரு நாள் ராத்திரி பகவானையே ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டு அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டான். அப்போது ஒரு ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக ஒரு பெரிய ரூபம் தோன்றி அவனிடம், “ராஜாவே! உனக்கு ஏற்பட்டிருப்பது கர்ம வியாதி. அதாவது, ஜன்மாந்தரத்தில் நீ பண்ணின பாபத்தில் தீராமல் மிச்சமாயிருந்த சேஷமே ரோகமாகியிருக்கிறது. இதை நீ அனுபவித்துத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமேயோழிய ஒளஷதத்தால் குணப்படுத்த முடியாது. ஒன்று வேண்டுமானால் நீ செய்யலாம். உன் ஆக்ருதிக்கு எள்ளினால் ஒரு ப்ரதிமை பண்ணி அதற்குள்ளே பூராவும் தங்கத்தினால் நிரப்பி, அதிலே உன் கர்மாவை, பாபத்தை, ரோகத்தை ஆவாஹனம் செய்து சத்தான ஒரு ப்ராமிணனுக்கு தானம் கொடுத்துவிடு. அப்போது கர்மா உன்னைவிட்டு அவனிடம் போய்விடும். அவன் நல்ல மந்த்ர சக்தியுள்ளவனாயிருந்தால் ரோகத்தை ஜெரித்துக்கொண்டு விடுவான். அது எப்படியானாலும் அவனுக்கு இப்படி ரோகத்தை உண்டாக்குவதற்கு பரிஹாரமாகத்தான் இவ்வளவு ஸ்வர்ணம் கொடுக்கச் சொன்னது” என்று சொல்லிற்று.
விடிந்ததும் ராஜா அப்படியே எள்ளிலே பிம்பம் பண்ணி அதற்குள் துவரம்பருப்பு மாதிரியான ஸ்வர்ண மணிகளைக் கொட்டி நிரப்பி வைக்கச் செய்தான். தான ஸமாச்சாரத்தை பிராமண மஹா ஜனங்களுக்கு ஒளிவு மறைவில்லாமல் தெரியப்படுத்தினான்.
தானம் வாங்கிக் கொள்ள எவரும் முன்வரவில்லை. ”ராஜா தன் கர்மாவை அனுபவித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்வர்ணத்துக்காக நம்முடைய மந்த்ரசக்தியைப் பணயம் வைப்பதா? மந்த்ரசக்தி போதாமலிருந்து விட்டாலோ நம் உயிரையே பணயம் வைப்பதாக ஆகிவிடுமே” என்று எல்லோரும் ஒதுங்கிப் போய் விட்டார்கள்.
ராஜாவுக்கானால் ரோக பாதை தாங்க முடியவில்லை. வெளியூர், வெளி ராஜ்யங்களிலிருந்தாவது எவராவது வரமாட்டார்களா என்று நாலா திக்கிலும் தண்டோரா போட ஆள் அனுப்பினான்.
இதனால் கேரள ராஜா விஷயம் கர்நாடக ராஜ்யத்திற்கும் எட்டிற்று.
நல்ல மந்த்ர சக்தியும் தைர்யமும் உள்ள ஒரு கன்னட பிரம்மசாரி தானம் வாங்கிக் கொள்ளுவதற்காகத் திருவனந்தபுரம் வந்தான்.
ராஜாவுக்கு ஸந்தோஷம் தாங்க முடியவில்லை. விதிவத்தாக தாரை வார்த்து எள்ளுப் பொம்மையை பிரம்மசாரிக்குத் தானம் பண்ணினான்.
அப்போது ஓர் ஆச்சரியம் நடந்தது. பிரம்மச்சாரி ப்ரதிமையையே உற்றுப் பார்க்க, அது தன்னுடைய வலது கையை உயரத் தூக்கிக் கொண்டு சுண்டு விரலையும் கட்டை விரலையும் மடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நீட்டிக் காட்டிற்று.
ராஜாவின் பூர்வகால கர்ம சேஷம் கால புருஷன் என்ற மூர்த்தியாக ப்ரதிமையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதனால், அசேதனமான பிம்பம் நிஜமாகவே பிராணன் உள்ள ஸசேதன ஜீவனாக ஆகி விட்டது.
அது இப்படி மூன்று விரலை உயர நீட்டிக் காட்டியதும் பிரம்மச்சாரி தலையை ஆட்டி “அதெல்லாம் முடியாது” என்றான்.
உடனே பிம்பம் மோதிர விரலை மடக்கி விட்டு மற்ற இரண்டு விரல்களை மட்டும் நீட்டியபடி வைத்திருந்தது.
“அதுவும்கூட முடியாது” என்று கர்னாடக பிரம்மச்சாரி தலையாட்டினான்.
பிம்பம் நடு விரலையும் மடக்கி, ஆள்காட்டி விரல் ஒன்றை மாத்திரம் காட்டிக் கொண்டிருந்தது.
”போனால் போகிறது. உன்னிஷ்டப்படியே ஆகட்டும்” என்றான் பிரம்மச்சாரி.
அப்படி அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் பிம்பம் பரம ஸந்தோஷத்தோடு அவன் காலிலே விழுந்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்தது.
அப்புறம் பிம்பம் வெறும் பிம்பமாக மட்டும் நின்றது. காலபுருஷன் அதை விட்டுச் சென்று விட்டான்.
இதொன்றும் புரியாமல், பிரமித்துப் போயிருந்த ராஜாவையும், மற்ற பரிவாரன்களையும் பார்த்து பிரம்மச்சாரி விளக்கினான்.
பிரம்மச்சாரி பிம்பத்தை உற்றுப் பார்த்தபோது, “உனக்கு என்னுடைய மந்த்ர ஜபத்தில் எவ்வளவு பலனைக் கொடுத்தால் நீ என்னைப் பாதிக்காமல் போவாய்?” என்று மானஸிகமாகக் கேட்டானாம். அவன் ஒரு நாளில் மூன்று வேளையும் செய்கிற த்ரிகால ஸ்ந்தியாவந்தனங்களின் பலனைக் கொடுத்தால் போய் விடுவதாக பிம்பம் மூன்று விரலைக் காட்டியதாம். அவ்வளவு பெரிய பலனைக் கொடுக்க முடியாது என்று அவன் சொன்னதன் மீது, அப்படியானால் மூன்று வேளைகளில் இரண்டின் பலனையாவது கொடுக்குமாறு யாசித்துத்தான் பிம்பம் இரண்டு விரலைக் காட்டியதாம். அதுவும் அதிகம் என்று அவன் பேரம் பேசினான். அதனாலேயே பிம்பம் ஒரே ஒரு வேளை ஸந்தியாவந்தன பலனைக் கேட்டதாம். அதைத்தான் போனால் போகிறதென்று இவன் தத்தம் செய்ய பயங்கரமான கர்மசேஷமும், ‘போயே போய்விடுகிறேன்’ என்று இவனுக்குக் கும்பிடு போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது.
முறைப்படி காயத்ரி செய்தால் அதற்கு எத்தனை வீர்யமிருக்கிறதென்று இதிலிருந்து தெரிந்து கொண்ட ஜனங்கள் அந்த சுத்த பிரம்மச்சாரியை ரொம்பவும் கொண்டாடினார்கள். ராஜாவுக்கோ, ஆதியில் மஹா பலியிடம் தானம் வாங்க வந்த வாமன பிரம்மச்சாரியே தான் இன்றைக்கு இப்படி வந்து தன் உபாதையைத் தீர்த்து வைப்பவனோ என்று தோன்றியது. வாமனர் - மஹாபலிக்காக விசேஷமாக ஓணம் கொண்டாடுவது கேரளாவில்தானே?
வாஸ்தவத்திலேயே, பிரம்மச்சாரி பிரதிமையை தானம் வாங்கிக் கொண்டவுடனேயே ராஜாவுக்கு நோய் குணமாகி விட்டது.