தானம் பெற்றதற்குப் பச்சாதாபம் ஊர் உலகமெல்லாம் கொண்டாடிய போதிலும் பிரம்மச்சாரிக்கு மாத்திரம் ரொம்ப வியாகுலமும் பச்சாதாபமுந்

தானம் பெற்றதற்குப் பச்சாதாபம்
ஊர் உலகமெல்லாம் கொண்டாடிய போதிலும் பிரம்மச்சாரிக்கு மாத்திரம் ரொம்ப வியாகுலமும் பச்சாதாபமுந்தான் உண்டாயின. ‘இப்படிப் புத்தியில்லாமல் செய்து விட்டேனே! தர்ம சாஸ்திரத்தில் பிராமண லக்ஷணம் தாரித்ரயம்தான் (வறுமைதான்) என்றல்லவா விதித்திருக்கிறது? க்ருஹஸ்தனாக இருந்தாலாவது குடும்ப சம்ரக்‌ஷணை செய்ய வேண்டும். அதைவிட முக்யமாக “தேஹி” என்று வருகிற அதிதிகளுக்கு ஸத்காரம் செய்ய வேண்டும். அதையும் விட முக்கியமாக ஸர்வ லோகத்தின் சேமத்துக்காகவும் யாக யக்யாதிகள் செய்ய வேண்டுமென்பதற்காக ப்ரதிக்ரஹத்தை (தானம் வாங்குவதை) அனுமதித்திருக்கிறது. பிரம்மசாரியான எனக்குப் பெரிய ஐஸ்வர்யமாக காயத்ரி இருக்கும் போது நான் ஏன் இப்படி ஏகமாக ஸ்வர்ண தானத்தை வாங்கிக் கொண்டேன்? அந்த அளவுக்கு ப்ரதிக்ரஹ தோஷத்தையுமல்லவா ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்? ராஜாவின் கர்மாவுக்குப் பரிஹாரம் பண்ணி விட்டேன்; இப்போது என் தோஷத்துக்கு என்ன பரிஹாரம்? நான் ஒரு வேளை காயத்ரி ஜப பலனைத் தத்தம் செய்தது கூடத் தப்புத்தான். லோகமெல்லாம் நன்றாக இருப்பதற்கே பிராமணன் தர்மகர்த்தா மாதிரி போஷிக்க வேண்டிய காயத்ரி சக்தியை யாரோ ஒரு ஆளுக்காக மத்திரம் செலவிட்டது தப்புத்தான். இப்போது அப்படியெல்லாம் பண்ணாமல், லோகோபகாரமாக இத்தனை ஸ்வர்ணத்தையும் செலவழித்தே ப்ரதிக்ரஹ தோஷத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். என்ன காரியம் உலகுக்கு சாச்வதமாக ப்ரயோஜனப்படும்படி பண்ணலாம்?” என்று நிரம்ப யோஜித்தான்.
ராஜாவுக்குச் சரீர வியாதி போக்கின இவனுக்கே மனோ வியாதி வந்துவிடும் போலாயிற்று. யோஜித்து, யோஜித்து முடிவில், சிரஞ்சீவியாக லோகத்தில் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கிற அகஸ்திய மகரிஷியை எப்படியாவது தர்சனம் பண்ணி அவர் சொல்கிற மாதிரி பிராயச்சித்தம் செய்வதென்று தீர்மானம் பண்ணினான்.
அகஸ்தியரை ஏன் நினைத்தான் என்றால் இந்த பூமியில் நம் மாதிரி மனுஷ்யர் போல வாழ்ந்தவர்களில் அவரை போல திவ்ய சக்தியைக் காட்டியவர் எவருமில்லை. அங்குஷ்ட ப்ராமாணமே (கட்டை விரலளவே) இருந்து கொண்டு அவர் தபோ பலத்தினால் இரண்டு மஹா பர்வதங்களுக்கு ஸமமாகத் தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பார்வதீ பரமேஸ்வராள் திருக்கல்யாணத்தின் போது கூடின கூட்டத்தில் ஹிமாசலமே அமுங்கியபோது ஈச்வரன் இவரைத்தான் தென் கோடிக்கு அனுப்பி, தராசை ஸம எடை கட்டி நிறுத்துகிற மாதிரி அதன் லெவலுக்குக் கொண்டு வந்தார். இறங்கிய மலை ஏற இங்கே உபகாரம் பண்ணினவரே விந்திய பர்வதம் கர்வித்துக் கொண்டு மேலே மேலே வளர்ந்து கொண்டு போனபோது அதன் தலையில் ஒரு அமுக்கு அமுக்கி வளராமல் தடுத்து நிறுத்தினார். மஹா ஸமுத்திரத்தையே தம்முடைய உள்ளங் கைக்குள் அடக்கி ஆசமனீயம் செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு அவர் செய்துள்ள சாச்வதமான உபகாரம், தம்முடைய கமண்டல தீர்த்தத்திலிருந்து காவேரியை அநுக்ரஹித்திருப்பதுதான். தமிழ் நாட்டைத் தொடுவதற்கு முந்தி காவேரி கர்நாடக தேசத்தில் தானே பாய்கிறது? அங்கே பல குடும்பங்கள் அகஸ்தியரையே தங்களுடைய குலத்துக்கு ரக்‌ஷகராக, ஆசாரியராகப் பூஜித்து வந்தார்கள்.