உண்மைக் கதை
அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வந்தவன் தான் நம்முடைய கதைப் பிரம்மச்சாரி. ’ பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி என்கிறேனே தவிர, அவன் பெயர் என்னவோ தெரியவில்லை. இத்தனைக்கும் நான் சொல்கிறதென்னமோ அத்தைப் பாட்டிக் கதையில்லை. இது வெறும் ஸ்டோரி இல்லை. இதற்குப் பலமான ஹிஸ்டரி ஆதாரம் இருக்கிறது. ‘ப்ராசீன லேக மாலா’ என்று பழைய சிலாசாசனம், தாம்ர சாசனம் முதலானவைகளைத் தொகுத்து பம்பாயிலிருக்கிற நிர்ணய ஸாகர் அச்சுக் கூடத்தார் தங்களுடைய ‘காவ்ய மாலா’ ஸீரிஸில் பிரசுரித்திருக்கிறார்கள். அதிலே மூன்றாம் பாகத்தில் உள்ள ஒரு சாஸனத்தில் இந்தக் கதை வாஸ்தவத்தில் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லை. இங்கே வெள்ளைக்கார ராஜ்யம் நடந்தபோது நம்முடைய மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸியில் அரசாங்கத்தாரின் ஆர்க்கியலாஜிகல் டிபார்ட்மெண்டார் 1903-04ல் பிரசரித்துள்ள வருஷாந்தர ரிப்போர்ட்டின் 84வது பக்கத்திலும் இந்தக் கதை ஸம்பந்தப் பட்ட சாஸனத்தைக் கொடுத்திருக்கிறது. சேர்மாதேவியில் உள்ள ஒரு சாஸனம் தான் அது. இன்னம் கொஞ்ச நேரத்தில் தெரியும். சேர்மாதேவிக்கும் நம் கதைக்கும் என்ன ஸம்பந்தமென்று.
இட்டுக்கட்டிச் சொன்ன கதை இல்லை என்பதற்காகச் சொல்ல வந்தேன். இட்டுக் கட்டினதாயிருந்தால் அந்த பிரம்மச்சாரிக்கு ஏதாவது பேர் நாமே வைத்து விடலாம். நிஜமாயிருப்பதால்தான் வைக்க முடியவில்லை. இதிலிருந்து எத்தனையோ உத்தமமான காரியங்களை லோகோபகாரமாக சாதித்த நம் பூர்விகர்கள் தங்கள் கார்யத்தை மட்டும் காட்டி, தாங்கள் அநாமதேயமாகப் பின்னுக்கு ஒதுங்கிக் கொண்ட பரமோத்தமமான குணப்பான்மையைத் தெரிந்து கொள்கிறோம். நாமானால் கார்யமே செய்யாமல் பேருக்குப் பறக்கிறோம்!
அகஸ்த்யர் சிரஞ்சீவியாக மலயாசலத்திலே தபஸ் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்பதால் பிரம்மச்சாரி மலய பர்வதத்திற்கு யாத்திரை தொடங்கினான். ‘மலய மாருதம்’ என்று சொல்கிறோமே அந்தத் தென்றல் காற்று, சந்தன மரம் நிறைந்த இந்த மலய பர்வதத்திலிருந்து அடிப்பதுதான். தெற்கிலிருந்து வருவதால் ‘தென்றல்’ என்று பெயர். வடக்கேயிருந்து வருகிற காற்றுக்கு ‘வாடை’ என்று பெயர். தெற்காகக் காற்றடிக்கும் வஸந்த காலத்தில் அது நமக்கு எவ்வளவு ஹிதமாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை குளிர்காலமான சிசிர ருதுவில் வீசும் வாடைக் காற்று நம் எலும்பையெல்லாம் குடைகிறாற் போல ஹிம்சை செய்யும். அதோடு மழையில் மட்கின வஸ்துக்களின் துர்கந்தமும் வரும். அதனால்தான் நாற்றமடிக்கிற எதையும் துர்வாடை என்கிறோம்.
மலய பர்வதம் என்பதுதான் தமிழிலக்கியங்களில் நிரம்பவும் சிறப்பித்துச் சொல்லப்படும் பொதிகை மலை. மலையாள பாஷை ஏற்பட்ட காலத்திற்குப் பின் இதன் மேற்குப் பக்கத்துக்குக் கொஞ்சம் தாண்டிவிட்டாலே மலையாள ராஜ்யமாகிவிட்டது. ஆதியில் தமிழ் நாட்டின் சேர ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததாகத்தான் இன்றைய மலையாளமாகிய கேரளமும் இருந்தது. பிற்பாடோ, மலய பர்வதத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் கேரள ராஜாக்களின் கீழ் வந்து விட்டன. அப்புறம் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் போது சில பகுதிகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி ஜில்லாவுக்குள் வந்தன. ஸ்வதந்திரம் வந்த பிற்பாடு கன்யாகுமரி ஜில்லா என்று ஏற்பட்டதில் இன்னும் அநேக பகுதிகளும் தமிழ் நாட்டில் சேர்ந்திருக்கின்றன. கொடகு தேசத்தில் காவேரியை உண்டு பண்ணி கொடகு, கர்நாடகம், தமிழ்நாடு மூன்றுக்கும் ஜீவனத்தை அநுக்ரஹித்த அகஸ்தியர், தமிழ்நாட்டுக்கும் மலயாளத்துக்கும் பொதுவான ஆதி சேர ராஜ்யப் பகுதிகளுக்கு வாழ்வு தருவதற்காக மலய பர்வதத்திலிருந்து தாம்ரபரணியை உற்பத்தி பண்ணினார். அந்தப் புண்ணிய நதி ஆரம்பத்தில் கொஞ்ச தூரம் பழைய கேரள ராஜ்யத்தில் ஓடி அப்புறம் தென் பாண்டி நாடு எனப்படும் தமிழ் தேசத்துக்கு வந்து விடுகிறது.