அகஸ்தியர் அளித்த தீர்வு
திருவனந்தபுரத்திலிருந்து அகஸ்த்ய தரிசனம் ஒன்றே குறியாகப் பொதிகைக்குப் புறப்பட்ட பிரம்மச்சாரி தானம் பெற்ற அவ்வளவு ஸ்வர்ணத்தோடு காட்டு வழியில் போவது ஆபத்து என்று கண்டான். அம்பாஸமுத்திரத்தில் அவனுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமாயிருந்த ஒரு கோயில் குருக்கள் இருந்தார். ‘அவரிடம் ஸ்வர்ணத்தை ஒப்புவித்துவிட்டு அப்புறம் மலயம் போகலாம்; அகஸ்த்ய பகவான் தரிசனம் கிடைத்து, ஸ்வர்ணத்தை எப்படி லோகோபகாரமாகச் செலவழிப்பது என்று அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பின் குருக்களிடமிருந்து திரும்ப வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்தான். அப்படியே அம்பாஸமுத்ரம் போனான். துவரம்பருப்பு மாதிரிச் செய்திருந்த ஸ்வர்ண மணிகள் அடங்கிய மூட்டையை குருக்களிடம் ஒப்படைத்தான். சில்லறைக்குப் பதில் இம்மாதிரிப் பொன்மணிகளை அந்நாளில் ராஜாங்கத்தார் உபயோகப்படுத்தினார்கள். பவுன் அத்தனை மலிவாயிருந்த காலம்!
அகஸ்த்ய தர்சனம் தாமஸமாகிறதே என்று ஒரே தாபத்துடனும் ஆவலுடனும் பசி தூக்கம் கால் வலி எதுவும் பார்க்காமல் நடந்தான் பிரம்மச்சாரி. இப்படிக் காடும் மலையும் கடந்து வந்ததில் ஒரு நாள் அப்படியே களைத்துப்போய் விழுந்து விட்டான். கண்ணை இருட்டிக்கொண்டு மயக்கமாய் வந்தது.
அந்த ஸமயத்தில் அங்கே திடீரென்று ஒரு விருத்தப் பிராமணர் தோன்றினார். பிரம்மசாரியைக் களைப்பாற்றினார்.
அவர் வேறு யாருமில்லை. அகஸ்த்யரேதான் அப்படி ரூபம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். தனக்காக அந்தக் குழந்தை ரொம்பவும் ச்ரமப்பட்டுக் கொண்டு வருவது மலய பர்வதத்திலிருந்த அவருடைய தீர்க்க த்ருஷ்டியில் தெரிந்தது. உடனே, அந்தக் குழந்தையைத் தானே எதிர் கொண்டு போய் ஸந்தித்துவிட வேண்டுமென்றே, இப்படி முக்கால் வழியில் தோன்றிவிட்டார். ஆனாலும் இன்னம் கொஞ்சம் விளையாட்டுப் பார்க்க வேண்டும், சோதித்து அவன் பெருமையை இன்னம் பிரகாசப்படுத்த வேண்டுமென்றே வேறே வேஷத்தில் தோன்றினார்.
கொஞ்சம் சிரமபரிஹாரம் செய்து கொண்ட உடனேயே மலயாசலத்துக்குப் போகப் பறந்தான் பிரம்மச்சாரி. அவன் எங்கே அவ்வளவு அவசரமாகப் போகிறானென்று, தெரியாத மாதிரி கேட்டறிந்த கிழப் பிராமணர், ‘வேறே வேலை இல்லை. அகஸ்தியருமாச்சு தர்சனமுமாச்சு. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று அவர் எங்கே இருப்பாரோ, என்ன சொல்வாரோ? அவருக்காக ஏன் காட்டிலும் மலையிலும் அலைந்து கொண்டு இந்த வீண் பிரயாஸை?” என்றெல்லாம் சொல்லி அவனைத் தடுக்கப் பார்த்தார்.
பிரம்மச்சாரியோ முன் வைத்த காலைப் பின் வைக்கவில்லை. அகஸ்த்யரிடம் அவனுடைய பக்தி விச்வாஸங்கள் கொஞ்சம் கூடக் குறையாமல் “பரம கருணையுள்ள எங்கள் அகஸ்த்யர் நிச்சயம் கைகொடுப்பார். நீர் இடைமறிக்காதீர்!” என்று சொல்லிவிட்டு மறுபடி புறப்பட்டான்.
உடனே அகஸ்த்யர் ஸ்வய ரூபத்தில் அவனுக்கு தர்சனம் தந்து அசீர்வதித்தார். “அப்பா குழந்தை! இப்போது இங்கே ஒரு பசு வரும். பக்கத்தில் தெரிகிற இந்தத் தாம்ரபர்ணி கரையில் அது நிற்கும். அது நிற்கிற இடத்தில் ஆற்றுக்கு அணை கட்டி, அதிலிருந்து ஒரு கால்வாய் வெட்டு. கால்வாய் எப்படிப் போக வேண்டுமென்றால் – நிற்கிற பசுவின் வாலை நீ பிடித்துக்கொள். அது ஓட ஆரம்பிக்கும். ஓடுகிற வழியை அடையாளம் பண்ணிக் கொள். அந்த வழியாகவே கால்வாயை வெட்டிக்கொண்டு போக வேண்டும். பசு நடுவில் எங்கெங்கே சாணம் போடுகிறதோ அங்கங்கே ஒரு மடை – sluice என்பது – அமைக்க வேண்டும். அது சிறுநீர் பெய்கிற இடங்களில் சிறிய வடிகால்கள் வெட்ட வேண்டும். பசு படுத்துக் கொள்ளுமிடங்களில் ஏரி தோண்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பசு உன் பார்வையிலிருந்து மறைந்துவிடும். அங்கே கால்வாயை முடித்துவிடு. இப்படி மனுஷ்யர், மிருகம் எல்லாவற்றுக்கும் தாகம் தீரவும், அவை அழுக்கும் ஆயாசமும் ஸ்நானம் பண்ணவும், பயிர் பச்சை விளைந்து பல பேர் பசி தீரவும் உபகாரம் செய்வதால் உன்னுடைய ப்ரதிக்ரஹ தோஷம் ஓடியே போய்ப் புண்ய லோகம் சேருவாய். இந்த லோகத்திலும் அசந்த்ரார்க்கம் (ஸூர்ய சந்திரன் உள்ளளவும்) உன் கீர்த்தி நிற்கும்” என்று சொல்லிவிட்டு அந்தர்தானமாகிவிட்டார்.
காவேரியையும் தாம்ரபர்ணியையும் கொடுத்தவர் லோகோபகாரமாக நீர்வளம் பெருக்கித் தருவது தவிர வேறு என்ன பரிஹாரம் சொல்வார்?
அகஸ்த்யர் மறைந்தாரோ இல்லையோ, அதே மாதிரி மாயமாக அங்கே ஒரு பசு திடீரென்று தோன்றி, தாம்ரபர்ணிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டது.
அந்த இடம் தான் சேர்மாதேவி.
தற்போது திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள அந்த ஊர் முன்பு கேரள தேசத்தில் இருந்தது. ஊரின் பேரிலிருந்தே இது தெரிகிறது. ‘சேரமாதேவி’ என்பதைத்தான் ‘சேர்மாதேவி’ என்கிறோம். சேர ராஜ்யம்தானே கேரளம்? அங்கே தென்னை ரொம்பவும் விசேஷம். நாலு பக்கமும் மலையும், தாம்ரபர்ணி நதியுமாக ரொம்பவும் ரமணீயமாக இருக்கப்பட்ட சேரமாதேவியிலும் ஒரே தென்னஞ்சோலையாக இருக்கும். தென்னைக்கு ஸம்ஸ்க்ருதத்தில் நாரிகேளம் என்று பெயர். அந்த ‘நாரிகேளம்’ தான் எப்படியெப்படியோ திரிந்து ‘கேரளம்’ என்றாகிவிட்டது. இதில் முதல் இரண்டெழுத்துக்களான ‘கேர’ என்பது தமிழில் ‘சேர’ ஆயிற்று. ‘க’வும் ‘ச’வும் ஒன்றுக்குப் பதில் மற்றது வருவதுண்டு. கவுரிமான் – சவுரிமான்; கீர்த்தி – சீர்த்தி; மூக்கு – மூச்சு – இப்படி ‘கை’ என்று நாம் சொல்லும் அவயவயத்தைத் தெலுங்கில் ‘சை’ (செயி) என்கிறார்கள். ‘கை’ என்கிற நாமும் கையின் கார்யத்தைச் ‘செய்’வது என்றுதான் சொல்கிறோம். ஸம்ஸ்கிருதத்தில் ’கர’ என்றால் கை; ‘கரோமி’ என்றால் செய்கிறேன் என்றே இருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் ‘சோள ராஜா’ என்பது தமிழில் ‘கோழி வேந்தன்’ – ‘ச’வுக்குப் பதில் ‘க’.
இப்படி தமிழில் ‘சேர’வாகவும் ஸம்ஸ்கிருதத்தில் ‘கேரள’வாகவும் இருந்த ராஜ்யத்தின் ஆதிகால முக்ய பட்டணங்களில் ஒன்றாயிருந்தது சேரமாதேவி. பட்டமஹிஷி, அவள் பேரில் ஏற்பட்ட பட்டணம் இரண்டுக்கும் ‘மாதேவி’ அடைமொழி கொடுப்பதுண்டு. ‘பாண்டி மாதேவி’ என்று ஞானஸம்பந்தரே மங்கையர்கரசியைத் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சிபியின் வம்சத்தில் வந்ததால் செம்பியர் என்று பேர் பெற்ற சோழர்களிலும் செம்பியன்மாதேவி என்று ஏராளமாக சிவதர்மம் செய்த ஒரு ராணி இருந்திருக்கிறாள். சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டிருக்கிற திருவிசைப் பாக்களைப் பாடியவர்களில் ஒருவரான கண்டராதித்த சோழ ராஜாவின் பத்தினிதான் இந்தச் செம்பியன் மாதேவி. அவள் பேரிலும் ஒரு ஊர் இருக்கிறது.
சேரமாசேவியில் நின்ற பசுவின் வாலை பிரம்மச்சாரி பிடித்துக்கொண்டான். உடனே அது ஒட ஆரம்பித்தது. .அந்த வழியை அவன் நன்றாக அடையாளம் பண்ணிக்கொண்டான். அது சாணம், சிறுநீர் கழித்த இடங்களையும் குறித்துக்கொண்டான். மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் கழிவுப் பொருளாக உள்ள இவையும் பசுவிடமிருந்து வரும்போது மட்டும் க்ருமி நாசினியாகவும், தோஷ நாசினியாகவும் ஆகிவிடுகின்றன. கோமயம், கோமூத்ரம் ஆகியவை எப்படி ரோகங்களைப் போக்குகின்றன, disinfectant-ஆக இருக்கின்றன என்பதைப் பற்றி வைத்யப் புஸ்தகங்கள் பக்கம் பக்கமாகச் சொல்கின்றனவென்றால், இவை எப்படி தோஷங்களை, தீட்டு துடக்குகளை நிவிருத்தி செய்கின்றன என்பதைப் பற்றி தர்ம சாஸ்திரங்கள் அதைவிட ஜாஸ்திப் பக்கம் சொல்கின்றன. சாணம், சிறுநீர் என்று சொல்லியிருக்கிறதே என்று பரிஹாஸம் செய்யலாகாது என்பதற்காகச் சொல்கிறேன். மாடு எங்கெங்கே படுத்துக்கொண்ட்து என்பதற்கும் அடையாளம் செய்து கொண்டான்.