மிளகுப் பிள்ளையார் இத்தனை செய்தவனுக்கு அஹம்பாவம் வந்துவிடப் போகிறதே, ஈச்வர க்ருபை இல்லாவிட்டால் மனிதன் ஸாதித்த எந்த ஸாதிப்பும
இத்தனை செய்தவனுக்கு அஹம்பாவம் வந்துவிடப் போகிறதே, ஈச்வர க்ருபை இல்லாவிட்டால் மனிதன் ஸாதித்த எந்த ஸாதிப்பும் பலன் தராது என்ற விநய பாவம் அவனுக்குப் போய்விடப் போகிறதே என்று ஸ்வாமி ஒரு சோதனை பண்ணினார். அணையும் கால்வாயும் கட்டி முடிந்ததோ இல்லையோ அப்புறம் இரண்டு மூன்று வருஷம் மழையே பெய்யவில்லை. தாமரபரணி ஆறே வற்றவிட்ட பிறகு அணையையும் கால்வாயையும் வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?
ஆசாரிய ஸ்வரூபமான அகஸ்த்யர் மூலமே ஈச்வரனை உபாசித்த பிரம்மசாரி, இப்போதும் அவரே தஞ்சமென்று அந்தச் சேர்மாதேவி தாம்ரபரணி மணலில் தலைகீழாக நின்றுகொண்டு பகீரதன் மாதிரி தபஸ் பண்ண ஆரம்பித்தான். தன்னுடைய ப்ரதிக்ரஹ தோஷம் போக வேண்டுமென்ற எண்ணம்கூடப் போய் உலகத்துக்கு உபகரிக்க வேண்டுமென்பதற்காகவே, வீடு, வாசல், பிள்ளை குட்டி எதுவுமில்லாத ஏகாங்கிக்கட்டை இப்படியெல்லாம் கஷ்டப்பட்டான்.
அகஸ்த்யர் பிரத்யக்ஷமானார். சோதனையில் தேறிய அவனை சிலாகித்தார். அங்கே ஒரு மஹா கணபதியைப் பிரதிஷ்டை பண்ணினார். “மிளகுப் பொடியில் ஜலம் விட்டு கெட்டியாகக் கலந்து இந்தக் கணபதியின் உடம்பு பூராவும் அப்பிவிடு. அப்புறம், இந்த ஜலக் கஷ்ட்த்தில் எப்பாடு பட்டாவது குடம் குடமாகத் தீர்த்தம் கொண்டு வந்து விக்ரஹத்தின் ரூபமே கண்ணுக்குத் தெரியாதபடி தடதடவென்று அதற்கு அபிஷேகம் பண்ணு. மழை கொட்டித் தீர்த்துவிடும். தாம்ரபர்ணியில் பூர்ணப் பிரவாஹம் ஏற்பட்டு, அணை, வாய்க்கால் எல்லாம் நிரம்பிவிடும்” என்றார்.
அப்படியே பண்ணினான். அப்படியே மழையும் கொட்டி அன்றிலிருந்து அவனுடைய சாச்வத தர்ம்மாகக் கால்வாய் ஐந்நூறு நூற்றாண்டுகளாக இன்னமும் பயன் தந்து கொண்டிருக்கிறது. அகஸ்த்யர் அநுக்ரஹித்தபடி ‘ஆசந்த்ரார்க்கம்’ அவன் கீர்த்தி இப்படியே நிலவுமென்பதில் ஸந்தேகமில்லை.
இப்போதும் எப்போதவது மழை தப்பினால் அந்த சேர்மாதேவிப் பிள்ளையாருக்கு மிளகுப்பொடி காப்பு சார்த்தி அபிஷேகம் பண்ண, உடனே மழை கொட்டி விடுகிறதாம். அங்கேயுள்ள வேத பாடசாலைக்குப் பக்கத்திலுள்ள கால்வாய் மடையின் முன்னால் வருஷா வருஷம், மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், ஒரு நாள் மஹா கணபதிக்குப் பிரார்த்தனை நடத்துகிறார்கள். ’மிளகுப் பிள்ளையார்’ என்றே அவருக்குப் பேர் சொல்கிறார்கள்.
அந்நாளில் விலைவாசி, கூலி எல்லாம் குறைவாயிருந்ததால், கால்வாய் கட்டின பிற்பாடும் பவுன் மணிகளில் பாக்கியிருந்தது. கால்வாய் புறப்படும் இடத்தில் நதியின் ஸ்நான கட்டத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டினான். அதற்கு சாச்வத பூஜைக்கான மான்யமும் வைத்தான். ‘அப்பன் கோயில்’ என்பதாக அது நித்ய பூஜையுடன் இருந்து வருகிறது.
அப்படியும் ஸ்வர்ணம் மிஞ்சியது. அதைக் கொண்டு அந்த ஆலயத்தின் அங்கமாகவே அன்ன சத்திரமும் வைத்தான். பிற்பாடு திருவாங்கூர் ராஜாங்கத்தாரும் திரவிய சகாயம் செய்து இந்த ஸந்தர்ப்பணை நின்று போகாமல் நன்றாக ரக்ஷித்து நல்ல ஸ்திதிக்கு கொண்டு விட்டிருக்கிறார்கள்.