படிப்பினை : ஒருமைப்பாடு வயிற்றுக்கு அன்னம், ஆத்மாவுக்கு ஆலய தர்சனம், இரண்டுக்கும் வேண்டிய தீர்த்தம் – ஸ்நானமில்லாமல் ஆத்மாபிவிர
வயிற்றுக்கு அன்னம், ஆத்மாவுக்கு ஆலய தர்சனம், இரண்டுக்கும் வேண்டிய தீர்த்தம் – ஸ்நானமில்லாமல் ஆத்மாபிவிருத்திக்கான ஆசாரம் ஏது? அப்படிப்பட்ட தீர்த்தம் – எல்லாம் விசேஷமாக உபகரித்த பிரம்மசாரியைப் பற்றிச் சொல்லிவிட்டு நம் கதையைப் பார்த்தால் எப்படியிருக்கிறது? எத்தனையோ நூறு வருஷம் கழித்து அவன் கதையைச் சொல்லி ஸந்தோஷப்படுகிறோமே! நம்மைப்பற்றி அறுநூறு வருஷத்திற்கப்புறம் யாராவது நினைத்துப் பேசுவார்களா? ஒருவேளை இப்படிப் பேசினால் பேசக் கூடும்: “இன்டெக்ரேஷன், ஒருமைப்பாடு, ஹா ஹூ என்று ஓயாமல் வாய்ப் பந்தல் போட்டுக்கொண்டே, இந்தப் பேச்சு ஜோடனை எதுவும் தெரியாமல் அதற்கு முன் ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாக, எல்லாரும் ஒரே ஈச்வரனின் குழந்தைகள் என்ற பொதுவான மதாபிமானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த அத்தனை ஜனங்களுக்கும் அந்த அபிமானத்தைப் போக்கிக் கட்சியபிமானம், பாஷாபிமானம், ஜாதி அபிமானம் என்று உண்டாக்கி ஒரேயடியாகப் பிரித்துப் பிரித்து வைத்தவர்கள்; ’ஸயன்ஸும் டெக்னாலஜியும் ஸர்வ தேசங்களையும் ஒன்றுக்கொன்று கிட்டத்தில் கொண்டுவந்துவிட்டது’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே ராஜ்யத்துக்கு ராஜ்யம், ஏன் ஜில்லாவுக்கு ஜில்லா, கிராமத்துக்குக் கிராமம் கூட எல்லைச் சண்டை, ஜலப் பங்கீட்டுச் சண்டை என்று மண்டையை உடைத்துக் கொண்டவர்கள்” என்று வேண்டுமானால் நம்மைப் பற்றிப் பேசுவார்களோ என்னவோ? அப்படியாகாமலிருக்கத்தான், கன்னட வாஸனையே இல்லாத தெற்குக் கோடித் தமிழ் ஜனங்களுக்காக ஒரு கன்னடக்காரர் மலையாள ராஜாவின் பொருளைக் கொண்டு மஹத்தான உபகாரம் செய்த இம்மாதிரியான கதைகளைச் சொல்லிச் சொல்லி மனஸில் பதியும்படிச் செய்வது.