புத்தரின் சிற்றன்னையும் புத்தரும்
பெளத்த மதப் பேச்சு வந்ததில், இத்தனை நாழி நான் சொன்னதற்கு ’கான்வர்’ஸாக – எதிர்வெட்டாக – ஒன்றும் நினைவு வருகிறது. திலகவதி, மங்கையர்க்கரசி முதலானவர்கள் ஸரியான வழியில் சென்றபோது அவர்களாலேயே மதரக்ஷணை நடந்ததென்று பார்த்தோமல்லவா? மாறாக பெண்கள் தப்பு வழியில் போனால் அவர்களால் மதமே சேதமுற்றுப் போய்விடுமென்று காட்டுவதாகவும் ஒன்று பெளத்தமத விஷயமாக நடந்திருக்கிறது. புத்தர் ‘ஸங்கம்’ என்று வைத்து, கூட்டங்கூட்டமாகப் புருஷர்களை பிக்ஷுவாக்கினாரல்லவா? அப்போது அவருடைய மாற்றாந்தாயாயும், அதோடு அம்மாவின் தங்கை என்பதாலேயும் இரண்டு விதத்திலும் சித்தி ஆனவளான மஹாப்ரஜாவதி என்பவள் தனக்கும் அவர் ப்ரவ்ரஜ்யை (துறவறம்) தந்து பிக்ஷுணியாக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “பெண்களுக்கு இந்த மாதிரி பிக்ஷு ஜீவனம் ஸரிப்பட்டு வராது. அதோடு, ஏராளமான புருஷ பிக்ஷுக்கள் இருக்கும் போது பிக்ஷுணிகளும் அதே மாதிரி சேர ஆரம்பித்து விட்டால் ஆச்ரம தர்மத்துக்கே விரோதமாக ரொம்ப அஸம்பாவிதங்கள், விபரீதங்கள் நடக்க நேரிடும். அதனால் உன் எண்ணத்தை விட்டுவிடு” என்றார். அந்த அம்மாள் கேட்காமல் பிடிவாதம் பிடித்தாள். தாயின் ஸ்தானத்திலிருந்த அவளை மறுத்துப் பேச புத்தரால் முடியவில்லை. அதனால் அவள் கேட்டபடியே அவளுக்குப் ப்ரவ்ரஜ்யைக் கொடுத்து, அந்த மதத்தில் பெண்களும் பிக்ஷுணியாவதற்கு அனுமதித்தார். அப்படி அவர் பண்ணுகிறதற்கு முன் ஒன்று சொன்னாராம். என்ன சொன்னாரென்றால், “நான் நன்றாக யோசித்துப் பார்த்து ‘கூடாது’ என்று வைத்துவிட்ட ஒன்றை நீ மாற்றும்படி பண்ணிவிட்டாய். இதனால் என்ன ஆகப்போகிறதென்றால், இந்த மதத்திற்கு ஆயுஸே பாதி போய்விடப் போகிறது” என்றாராம். அவர் சொன்னது போலவேதான் பிற்பாடு பிக்ஷு பிக்ஷுணி ஸங்கத்தில் ரொம்பவும் கோளாறாக நிறைய நடந்து, ஊருலகத்திலெல்லாம் பரிஹாசம், அவப்பெயர் ஏற்பட்டது. மஹேந்திர வர்ம பல்லவனுடைய ‘மத்தவிலாஸ ப்ரஹஸனம்’ என்ற ஹாஸ்ய நாடகத்தைப் பார்த்தாலே தெரியும், எத்தனை கீழ்த்தரத்துக்கு ஸந்நியாஸ்ரமம் போய்விட்டது என்று.
பெளத்தம் இந்த நாட்டைவிட்டுப் போனதற்கு அறிவாளிகள் லெவலில் நம்முடைய ஆசார்யாள் வேதாந்த வழியிலும், குமாரில பட்டர் கர்ம மீமாம்ஸ வழியிலும் உதயணசார்யார் ந்யாய (தர்க்க) சாஸ்த்ர வழியிலும் அம்மதக் கொள்கைகளைக் கண்டித்தது காரணமென்றால், பொது ஜனங்களின் லெவலில் அதன் பிக்ஷுஸங்கம் வீணாய்ப் போனதில் ஸமுதாயம் முழுதற்குமே அதனிடம் மதிப்பு மரியாதைகள் குன்றிப் போனதே அதற்கு ஆதரவு குன்றிப் போனதற்குக் காரணமாகும். இப்படியொரு பெரிய ஹானி ஒரு ப்ரஸித்தமான மதத்திற்கு ஏற்பட்டது ஒரு ஸ்திரீயின் பிடிவாதத்தால்தான் என்று பார்க்கிறோம். இதிலிருந்து ஆக்க சக்தி மாதிரியே அழிவு சக்தியும் ஸ்திரீகளுக்கு எவ்வளவு இருக்கிறது என்று தெரிகிறது.
ஆனால் பொதுவாக நம்முடைய பெண்குலம் ஆக்கசக்தியாகவேதான் இருந்து வந்திருக்கிறது. அபூர்வமாகத் தான் அழிவு சக்தியாக ஆனது. இப்படி, நம் மதத்துக்கு ’அழிவு’ ஏற்படவிருந்த ஸமயங்களில் அதைப் புத்துருவாக ‘ஆக்கு’வதற்குப் பெரிய உபகாரம் செய்த உத்தமிகள் சில பேரைச் சொன்னேன்.