ஸாக்ஷி கணபதி
ஸாக்ஷி கணபதி இருப்பது ஸ்ரீசைலத்தில். அந்த மஹா க்ஷேத்ரத்தில் ஜ்யோதிர்லிங்கமான மல்லிகார்ஜுன மஹாலிங்கம் உள்ள பிரதானமான ஆலயத்திலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில், ஊர் எல்லையில், சாலை ஓரத்திலேயே அவர் இருக்கிறார்.
இப்போது ஸ்ரீசைலம் கோபுர வாசல் வரை ஸெளகர்யமாக பஸ், கார் போக வசதி ஏற்பட்டு விட்டது. இந்த நூற்றாண்டின் முதல் பாதி வரையில் ஸரியான பாதை இல்லாமல் காடு, மலைகள் தாண்டி ரொம்பவும் ச்ரம ஸாத்தியமாகத்தான் ஸ்ரீசைல யாத்திரை பண்ண வேண்டியிருந்தது. ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரத்திலேயே “செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலையை” என்று அந்த ஸ்தலம் ஸுலபமாகப் போய்ச் சேர முடியாததென்பதைச் சொல்லியிருக்கிறார். ”சீ பர்ப்பதம்” என்றால் ஸ்ரீசைலம். ஸ்ரீமான் சீமானாகிற மாதிரி ஸம்ஸ்க்ருத ’ஸ்ரீ’ தமிழ் ’சீ’ ஆகும். ‘பர்ப்பதம்’ ‘பருப்பதம்’ என்றெல்லாம் சொல்வது பர்வதம்தான். பர்வதம் என்றால் மலை. சைலம் என்றாலும் மலை தான். ஆகையால் ஸ்ரீசைலம் என்பதையே தமிழ் பாஷை பண்புக்கேற்ப ‘சீ பர்ப்பதம்’ என்பார்கள். ‘திருப்பருப்பதம்’ என்றும் சொல்வதுண்டு.
த்வாதச ஜ்யோதிர்லிங்க க்ஷேத்ரங்கள் என்னும் பன்னிரண்டு விசேஷமான சிவ ஸ்தலங்களில் ஸ்ரீசைலம் ஒன்று. பிரதானமான சக்தி பீடங்களில் ஒன்றாகவும் அது இருக்கிறது.
எத்தனை சிரமமிருந்தாலும் பக்த ஜனங்கள் பொருட்படுத்தாமல் தரிசனம் பண்ண வருவார்கள் என்று காட்டுவதற்குப் போலவே ஸ்வாமி இப்படிப்பட்ட மஹா க்ஷேத்ரங்களில் பலதை காடு, மலைகளுக்கு நடுவில் வைத்திருக்கிறார். திருப்பதி, பத்ரி முதலியவைகூட அப்படி இருந்தவைதான். இன்னமும் சபரிமலையில் கடைசி மைல்களைக் காட்டு வழியில் காலால் நடந்துதான் கடக்க வேண்டியிருக்கிறது.
நன்றாகப் பசித்துச் சாப்பிட்டால்தான் உடம்பில் பூர்ணமாக ஒட்டும் என்பது மாதிரி, கஷ்டப்பட்டு யாத்திரை பண்ணினால்தான் தர்சன பலன், தர்சனாநந்தம் பூர்ணமாகக் கிடைக்கும். திருப்பதி போன்ற க்ஷேத்ரங்களில் நாளுக்கு நாள் செளகர்யங்கள் ஜாஸ்தி பண்ணித் தருகிறார்களென்று கேட்டால் ஒரு பக்கம் ஸந்தோஷமாகத் தானிருக்கிறதென்றாலும் இன்னொரு பக்கம் இப்போது ஜனங்களுக்கு ஜெனரலாக ஒரு நேம நிஷ்டை வியவஸ்தைகள் இல்லாமல் போயிருப்பதில் க்ஷேத்ரங்களையும் பிக்னிக் ஸென்டர்களாக்கிக் கொண்டு விடுகிறார்களே என்று துக்கமாகவும் இருக்கிறது. காட்டேஜ்களில் நடக்கிற தகாத கார்யங்களைக் கேட்கிறபோது, நன்றாக எட்டடி, பத்தடி உயரமாக ‘நின்ற’ திருக்கோலத்திலிருக்கிற வேங்கடரமண ஸ்வாமியே ‘கிடந்த’ திருக்கோலத்தில் நித்திரை போய் விட்டாரா என்றுகூடத் தோன்றுகிறது.
அவர் தூங்கவேயில்லை. நாம் பண்ணுவதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற ஸர்வ ஸாக்ஷி அவர் என்றுதானே ஸப்ஜெக்டே எடுத்துக் கொண்டிருக்கிறோம்? ஸாக்ஷியே ஜட்ஜுமாகித் தண்டனையும் தருவார் என்றும் பார்த்தோமே! ஆனாலும் ‘அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்’ என்ற வசனப்படி அவர் விளையாடுவதாலேயே நாம் அவசரப்பட்டு ‘ஸ்வாமி தூங்கிப்போய் விட்டாரா? ஸ்வாமிக்குக் கண் இல்லையா?’ என்றெல்லாம் கேட்கிறோம்…
ஆதி காலத்திலிருந்து எத்தனையோ சிரமம் இருந்த போதிலும் ஸ்ரீசைலத்துக்குப் போகிற பேர் போய்க்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். தேவாரம் பாடிய மூவரும் அந்த ஊரைப் பாடியிருக்கிறார்கள். தேவாரமுள்ள ஊர்களுக்குப் பாடல் பெற்ற ஸ்தலம் என்று பெயர். அப்படி மொத்தம் 274 இருக்கின்றன. அதில் வடநாட்டு ஸ்தலங்கள் என்பவை ஐந்தே ஐந்து தான். அந்த ஐந்தில் ஒன்று திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீசைலம். அந்த ஐந்தில் அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர் ஆகிய மூவரும் பாடியவை இரண்டுதான். ஒன்று கைலாஸம் என்றும் நொடித்தான்மலை என்றும் சொல்லப்படும் ஹிமாலய க்ஷேத்ரம்; பரமசிவனின் ஸாக்ஷாத் வாஸ ஸ்தலம். விக்ரஹமாயில்லாமல் அவனே ஸாக்ஷாத்தாக இருக்கிற இடம். மற்றது ஸ்ரீசைலம்தான்.
போக ரொம்பக் கஷ்டமான அந்த க்ஷேத்ரத்துக்கு நம் ஆசார்யாளும் போயிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த க்ஷேத்ரம் அதுவே என்று காட்டுகிற ரீதியில் ‘சிவாநந்த லஹரி’யின் நடுநாயகமான ஐம்பதாவது ஸ்லோகத்தில் ‘ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம்’ என்கிறார். ’ஸ்ரீகிரி’ என்றால் ‘ஸ்ரீசைலம்’ தான். ஸுலபத்தில் போக முடியாமல் அந்த இடம் இருந்ததாலேயே ஏகாந்த நிஷ்டைக்கு ஆசார்யாள் இஷ்டம் கொண்ட போது அதைத்தான் ’சூஸ்’ பண்ணினார். “என் உடம்பு பூரா கொடி படர்ந்து கொண்டு காதுகளிலிருந்து பக்ஷிகள் கூடு கட்டித் தொங்கிக் கொண்டு இருக்கும்படியாக வெளி லோக ப்ரக்ஞையே இல்லாமல் ஸ்ரீசைல சிகர குகையிலே (ஸ்ரீசைல ச்ருங்க குஹரேஷு) நான் எப்போது ஸமாதியிலிருப்பேன்” என்றே ஒரு இடத்தில் அவர் கேட்டிருக்கிறார். அதிலிருந்து அந்த இடம் எத்தனை எட்டாக்கை, அங்கே போவது எத்தனை சிரமமாயிருந்திருக்கணும் என்று புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ச்ரம ஸாத்தியமாகவே அடையக்கூடிய இடமாயிருப்பதால் அங்கே யாத்திரை செய்கிற பக்தர்களுக்கு மற்ற எந்த க்ஷேத்ரத்தையும்விட அதிகமான இகபர ஸெளக்யங்களைத் தர வேண்டுமென்று பரமேச்வரன் உத்தேசம் பண்ணினார்.
ஆனாலும் அவருடைய குணம் என்னவென்றால்… அவரை ‘ஆசுதோஷி’ என்பார்கள். அதாவது, எளிசாக ஒரு பக்தி பண்ணியே, அது கபட பக்தியாகக் கூட இருக்கலாம். அப்படிப் பண்ணியே ரொம்ப சீக்கிரத்திலே அவரை ப்ரீதி பண்ணுவித்து எந்த வரத்தை வேண்டுமானாலும் வாங்கிக் கொண்டு விடலாம். அம்ருத மதனம் பண்ணின போது க்ஷீர ஸாகரத்திலிருந்து ஐராவதமும், கல்பக வ்ருக்ஷமும் வந்தவுடன் இந்திரன் அதுகளைத் தட்டிக்கொண்டு போய் விட்டான். காமதேநு வந்தவுடன் ப்ரம்ம ரிஷிகள் எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் வந்த கெளஸ்துபமும் மஹாலக்ஷ்மியும் மஹாவிஷ்ணுவிடம் போய்ச் சேர்ந்தது எல்லாருக்கும் தெரியும். அம்ருதத்தை அத்தனை தேவர்களும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் முதலில் பயங்கரமான ஹாலாஹல விஷம் வந்ததே, அதை? அதை மட்டும், “அப்பா பரமேச்வரா, நீதாண்டாப்பா ரொம்ப நல்லவன், பரம உபகாரி. ஆனதினாலே இந்த விஷத்தை வெளியிலே விடாமல் நீயே உள்ளுக்குள்ளே வெச்சுக்கோ!” என்று அந்த ஆசுதோஷியிடம் போய்த்தான் அத்தனை தேவர்களும் குல்லாய் போட்டார்கள். அவரும் பரம ப்ரீதியுடன் அதைச் சாப்பிட்டார். ஒன்று கவனிக்கணும்: அதாவது முதல் முதலில் விஷ உத்பவம்; அப்புறம்தான் நல்ல நல்ல வஸ்துக்களாகக் காமதேநுவில் ஆரம்பித்து அம்ருதம் முடிய அநேகம் வந்தது. விஷம் வந்தபோது எவனிடம் தஞ்சமென்று போய் அவனும் ரக்ஷித்தானோ அவனை அப்புறம் உத்தம வஸ்துக்கள் வந்தபோது யாராவது நினைத்தார்களோ? அப்படியும் அந்தப் பரமேச்வரன் பொருட்படுத்தாமல் அநுக்ரஹம் பண்ணிக் கொண்டுதான் இருந்தான்!
அகத்தில் அப்பாக்காரர் ரொம்ப தாக்ஷிண்யமாகவோ அப்பாவியாகவோ இருந்தால் பிள்ளைதான் ‘முழித்துக் கொண்டு’ கறார் கண்டிப்புக் காட்ட வேண்டிய இடத்தில் அவரை ஞாபகப்படுத்தித் தட்டியெழுப்புவான். இப்போது பிள்ளையார் அப்படி ‘முழித்து’க் கொண்டார். ‘மஹா ச்ரமப் பட்டே வரக்கூடிய ஸ்ரீசைல யாத்ரிகர்களுக்கு விசேஷ பலன் தருவது என்று தகப்பனார் இப்போது விதி பண்ணியிருந்தாலும் மற்ற ஸ்தலங்களுக்கு யாத்ரை போகிறவர்களும் கொஞ்சம் கொஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டு விட்டால் மனஸ் இறங்கி அவர்களுக்கும் எக்ஸ்ட்ரா பலன் கொடுத்து விடுவார். காசிதான் தன்னுடைய ராஜதானி, அங்கே மரணமடைகிறவர்களுக்கெல்லாம் முக்தி என்று விதி பண்ணினவர் அப்புறம் காசிக்கு ஸமானம் என்று அநேக க்ஷேத்ரங்களையும், ‘காசிக்கும் வீச்ம் அதிகம் என்று கும்பகோணத்தையும் ஒப்புக் கொண்டவர்தானே? இந்த ஸ்ரீசைல விஷயத்திலும் அந்த மாதிரி ஆக விடப்படாது’ என்று பிள்ளையார் தீர்மானம் பண்ணிக் கொண்டார்.
பிதாவிடம் போனார். “ஸ்ரீசைலம் போகிறவர்களுக்கு மட்டுமே நீங்கள் தருவதாக இருக்கும் பலன்களை வேறே யாருக்கும் தரக் கூடாது. அங்கே யார் யார் வருகிறார்களென்று நான் பார்த்து ஸாக்ஷி சொல்கிறேனோ அவர்களுக்குத்தான் அந்த எக்ஸ்ட்ரா நன்மைகளைக் கொடுக்கணும். உங்களுக்குக் கருணை ஸ்வபாவம். (”நீங்கள் ஈஸியாக ஏமாந்து போய் விடுவீர்கள்” என்று எப்படி ஒரு பிள்ளை அப்பாவிடம் சொல்ல முடியும்? அதனால் ‘கருணை ஸ்வபாவம்’ என்றது!) “அதனால் பொய்யாகக் கூட யாராவது ஸ்ரீசைல யாத்ரை பண்ணினதாகச் சொல்லி வரத்தைத் தட்டிக் கொள்ள முடியும். அப்படியாகாமல் ஊரெல்லையிலேயே நான் ஸாக்ஷி கணபதியாக உட்கார்ந்து கொண்டு நிஜமாகவே யார் வருகிறார்களோ அவர்கள் ஊர், பேர், அங்கே வந்த தேதி எல்லாவற்றையும் எழுதி வைத்துக் கொண்டு உங்களுக்குக் காட்டுகிறேன். அவர்களுக்கே ஸ்பெஷல் அநுக்ரஹத்தைப் பண்ணுங்கள்” என்று சொன்னார்.
”அப்படியே!” என்று ஸ்வாமியும் ஒப்புக் கொண்டார்.
ஸ்ரீசைல எல்லையில் அந்த ஸாக்ஷி கணபதி, ‘ஸாக்ஷி கணபதி’ என்றே பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறார். இன்றைக்கும் சிலா மூர்த்தமாக இருக்கிறார். நல்ல கம்பீரமான மூர்த்தம். பாங்காக ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் ஒரு காலை மடித்துக்கொண்டும் உட்கார்ந்திருப்பார். மேல் இரண்டு ஹஸ்தங்களில் எல்லாப் பிள்ளையார்களையும் போலப் பாசாங்குசம் வைத்துக் கொண்டிருப்பார். கீழ் ஹஸ்தம் இரண்டிலும்தான் அபூர்வமான மாறுபாடு: “இவர் ஸாக்ஷி கணபதி” என்று ஸாக்ஷி சொல்கிற மாதிரி, வேறெங்கேயுமில்லாத புதுமையாகச் சுவடியும் எழுத்தாணியும் அந்த இரண்டு கைகளில் வைத்துக் கொண்டிருப்பார். நிஜமான ஸ்ரீசைல யாத்ரிகர்களின் பேர், ஊர், அவர்கள் யாத்ரை பண்ணின காலம் முதலியவற்றைக் குறித்துக் கொள்வதற்குத்தான் ஏடும் எழுத்தாணியும்.
யாத்ரையை யதோக்தமாக முடித்துவிட்டு நாம் புறப்படும்போது கடைசியில் எல்லையில் அவரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வழிபடும் ஸ்வாமியை இங்கே முடிவில் வழிபட வேண்டும்! நாம் இன்னார் முதலிய ‘டீடெய்ல்’களை அவரிடம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவர் தாம் வைத்திருக்கும் பேரேட்டில் அதைப் பதிவு பண்ணிக் கொண்டு, அப்புறம் பிதாவிடம் சொல்லி, “நான் ஸாக்ஷி! அவர்கள் வந்தது வாஸ்தவந்தான்” என்று நமக்காகப் பரம க்ருபையோடு ‘காரண்டி’ கொடுத்து யதேஷ்டமாக ஈச்வர ப்ரஸாதத்தை வாங்கிக் கொடுப்பார். “பூணலைப் பிடிச்சுண்டு ஸத்ய ஸாக்ஷி சொல்றேன்” என்பது வழக்கம். இந்த ஸாக்ஷி கணபதி மூர்த்தத்தில் அந்தப் பூணூல் வரி வரியாக எடுப்பாகத் தெரியும். கணபதியின் ஆனந்த நிறைவைக் காட்டும் தொந்தியைக் கட்டியிருக்கிற ஸர்ப்ப உதர பந்தமும் ஸ்பஷ்டமாக இருக்கும்.
இவர் தனிப்பட்ட எந்த இரண்டு மநுஷ்யர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு வியவஹாரம் உண்டானதைத் தீர்த்து வைத்த ஸாக்ஷி இல்லை. கஷ்டப்பட்டு ஸ்ரீசைல யாத்ரை செய்பவர்கள் அதே பலனை மற்றவர்களுக்கும் ஸ்வாமி கொடுத்து விடுவதால் மனஸ்தாபப்படாமல் காப்பாற்ற ஸாக்ஷி சொல்பவர். அப்படிச் சொல்வதுகூட ஸரியில்லை. யாத்ரா பலன், அதைப் பிறத்தியாருடன் ‘கம்பேர்’ பண்ணி தாபப்படுவது என்றெல்லாம் நிஜ பக்தர்கள் நினைக்கவே மாட்டார்கள். ஆனாலும் வேலைக்கேற்ற கூலி பெற்றுத் தரணும், ச்ரமத்துக்கேற்ற புண்ய பலனை பக்தர்களுக்கு வாங்கித் தரணும் என்ற நியாயத்துக்காகவும், யாரும் பொய் பண்ணி அதில் பங்கு வாங்கிக் கொண்டு விடக்கூடாது என்ற ஸத்யத்துக்காகவும் தாமாகவே ஸாக்ஷிக்காரரானவர் இந்த கணபதி. கணபதிப் பிள்ளையார் கணக்குப் பிள்ளை மாதிரி ஸ்ரீசைல யாத்ரிகர்களுடைய ‘ஸ்டாடிஸ்டிக்’ஸை ஏடும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு குறித்துக் கொள்கிறார்!
லோகத்திலுள்ள எல்லா ஜனங்களுடைய எல்லாக் காரியங்களையும் இப்படிக் குறித்து வைத்துக் கொள்கிற ஒரு குட்டி ஸ்வாமி உண்டு; சித்ரகுப்தன் தான்! ஏக பர வஸ்துவாயுள்ள பெரிய ஸ்வாமிதான் ஸர்வ ஸாக்ஷி, ஸர்வத்துக்கும் ஜட்ஜ் என்றாலும் ஒரு ராஜா ஒவ்வொரு டிபார்ட்மெண்டாகப் பிரித்து அதிகாரிகளைப் போட்டு அவர்கள் மூலம் ஆட்சி நடத்துகிற மாதிரி அந்த த்ரிலோக சக்ரவர்த்தியும் முத்தொழிலுக்கு மும்மூர்த்தி, படிப்புக்கு ஸரஸ்வதி, பணத்துக்கு லக்ஷ்மி, மழைக்கு இந்திரன் என்றிப்படி அதிகாரிகள் வைத்து நடத்துவதில் நம் காரியங்கள் எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப் பார்த்து எழுதிக் கொள்பவன் சித்ரகுப்தன்; ஜட்ஜ் பண்ணி தண்டனை தருகிறவர் தர்மராஜன் என்கிற ”தெற்கத்தியான்”. யம தர்பாரில் கணக்குப் பிள்ளையாக இருக்கிற சித்ரகுப்தனுக்குத் தான் ரூப வர்ணனையில் ஏடும் எழுத்தாணியும் கொடுத்திருக்கிறது. அபூர்வமாக அவனுக்குக் காஞ்சீபுரத்தில் தென்னண்டை ராஜவீதியில் கோவிலிருக்கிறது. இவனுடைய கணக்கைப் பார்த்துத்தான் ஒருவர் கைலாஸத்துக்கோ வைகுண்டத்துக்கோ அனுப்பப்படுகிறார் என்பதைக் காட்டுவது போலக் கைலாஸ நாதர் கோவிலுக்கும் வைகுண்டப் பெருமாள் கோவிலுக்கும் நடுவில் இந்தக் கோவில் இருக்கிறது! கர்ணாம்பாள் என்ற பத்னி ஸமேதனாக சித்ரகுப்தன் உத்ஸவ மூர்த்தத்தில் இருக்கிறான். கணக்குப் பிள்ளையைக் கர்ணம் என்று சொல்வது, ஈச்வர் ஸாம்ராஜ்யத்துக் கர்ணத்தின் பத்னி கர்ணாம்பாளாயிருக்கிறாள்!