ஸாக்ஷி கோபால் தெலுங்கு நாட்டு கணபதியில் ஆரம்பித்துக் காஞ்சிபுரத்துக் கணக்குப் பிள்ளைக்கு வந்தேன் ரொம்பவும் வடக

ஸாக்ஷி கோபால்

தெலுங்கு நாட்டு கணபதியில் ஆரம்பித்துக் காஞ்சிபுரத்துக் கணக்குப் பிள்ளைக்கு வந்தேன். ரொம்பவும் வடக்கே மட்ராவிலிருந்து (வட மதுரையிலிருந்து) காஞ்சிபுரத்துக்கே வந்து அப்புறம் ஒரிஸ்ஸாவுக்குப் போய் அங்கேயே நித்யவாஸம் பண்ணுகிற ஒரு ஸாக்ஷிக்கார ஸ்வாமியின் கதை பார்க்கலாம்.

அவர் க்ருஷ்ண பரமாத்மா. ’ஸாக்ஷி கோபால்’ என்றே அவரைச் சொல்வார்கள். ஒரிஸாவில் அவர் ஸ்திரவாஸம் வைத்துக்கொண்ட ஊருக்கும் ’ஸாக்ஷி கோபால்’ என்றே பேர்.
நாம் ப்ருஹதீச்வரர் உள்ள ஸ்தலத்தை ப்ருஹதீச்வரம் என்று சொல்வோம். கபாலீச்வரர் இருப்பது கபாலீச்வரம். வடக்கத்திக்காரர்கள் வார்த்தையின் கடைசி சப்தத்தை ஒடித்து, ’ஒற்று’ என்கிற மெய்யெழுத்தோடு, வார்த்தைதை முடித்து விடுவார்கள். ஸம்ஸ்கிருதத்தில் ’ராம:’ என்றும் தமிழில் ‘ராமர்’ என்றும் இருப்பது வடக்கத்தி பாஷைகளில் ‘ராம்’ ஆகி விடுகிறதல்லவா? இதனால் என்னவாகிறதென்றால் ப்ருஹதீச்வரர் - ப்ருஹதீச்வரம் என்ற இரண்டுமே ‘ப்ரஹதீச்வர்’ ஆகிறது! ‘வைத்யநாதர்’ இருக்குமிடம் ‘வைத்யநாதம்’ என்று நாம் சொன்னால், அவர்கள் ஸ்வாமி பேர். ஸ்தலத்துப் பேர் இரண்டையுமே ‘வைத்யநாத்’ என்கிறார்கள்! இதே மாதிரி ராம்நாத், ஸோம்நாத், த்ரயம்பகேச்வர் என்றெல்லாம் இரண்டையும் ஒன்றாகச் சொல்கிறார்கள். ’ஸாக்ஷி கோபாலன்’ அவர் இருக்கிற ’ஸாக்ஷி கோபாலம்’ இரண்டுமே ’ஸாக்ஷி கோபால்’ ஆகிறது.

அவர் என்ன ஸாக்ஷி சொன்னார்? யாருக்குச் சொன்னார்?

காஞ்சீபுரத்திலிருந்து அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வ்ருத்த ப்ராமணரும் ஒரு வாலிபமான ப்ராமண ப்ரம்மசாரியும் காசி யாத்ரை போனார்கள். போகிற வழியில் வ்ருத்தர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டார். அப்போது அந்தப் பிள்ளை அவருக்குக் கண்ணும் கருத்துமாக சுச்ருஷை பண்ணினான். அசிங்கம் பார்க்காமல் விஸர்ஜனாதிகளைச் சுத்தம் செய்வது உள்பட, மருந்து கொடுப்பது, கஞ்சி கொடுப்பது எல்லாம், ராப்பகல் பார்க்காமல், அபிமானத்தோடு பண்ணினான்.   உடம்பு குணமாயிற்று. அப்புறமுங்கூட, ’வயசானவர், நடந்தால் நெகிழ்ந்து கொள்ளும்’  என்று அவனே அவரைத் தூக்கிக்கொண்டு மேலே யாத்ரையைத் தொடர்ந்தான். இப்படியே காசிக்குப் போய்விட்டு அப்புறம் இரண்டு பேருக்குமே க்ருஷ்ண பரமாத்மாதான் இஷ்ட தெய்வமானதால் ப்ருந்தாவன், மட்ராவுக்குப் போனார்கள்.

மட்ராவில் அப்போது இருந்த க்ருஷ்ண மூர்த்தம், கோவில் எதுவும் இப்போது இல்லை. அங்கே அநேகம் கோவில்கள், மூர்த்திகள் இருந்ததெல்லாம், இந்தக் கதை நடந்த காலத்துக்கு அப்புறம், விக்ரஹ ஆராதனை பிடிக்காத மதஸ்தர்களால் – தங்களுக்குப் பிடிக்காததோடு பிடித்த மதஸ்தர்கள் அப்படி ஆராதிப்பதும் பிடிக்காதவர்களின் – தாக்குதலில் இடித்து நொறுக்கப்பட்டதால் நம்முடைய வ்ருத்தரும் யுவாவும் குறிப்பாக எந்தக் கோவிலுக்குப் போனார்கள் என்று அடையாளம் காட்ட முடியவில்லை. ஆகக் கூடி, தங்கள் இஷ்ட மூர்த்தியின் ஆலயத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.  
இஷ்ட மூர்த்தியை இஷ்டம் கொண்ட வரையில் வ்ருத்தர் தர்சனம் செய்து கொண்டார். அவருக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை. உடனே அந்த ஸந்தோஷம் அப்படியே அந்த ப்ரம்மசாரியிடம் நன்றியாக மாறி விட்டது.

அவர் நல்ல ஸொத்துக்காரர். அவருக்கு ஒரே பெண்தான். ப்ரம்மசாரிப் பிள்ளையோ ஏழை. அநாதை. ப்ராமணன்தான் என்றாலும் அதிலும் அவரை விடத் தாழ்வாக நினைக்கப்பட்ட பிரிவை, ஸப்-ஸெக்டைச் சேர்ந்தவன். இருந்தாலும் அவன் அத்தனை பணிவிடை பண்ணி, தன்னுடைய போன உயிரை மீட்டு, தன் உடம்பைத் தூக்கியும் கொண்டு வந்ததால்தானே இஷ்டமூர்த்தி தர்சனம், யமுனா ஸ்நானம் எல்லாம் கிடைத்தது என்று வ்ருத்தருக்கு நன்றி பெருக்கெடுத்து, “அப்பா, உன்னால்தான் எனக்கு ஜன்மா ஸாபல்யமாயிற்று. என் பெண்ணை உனக்கே கொடுத்து, ஸொத்தையும் எழுதி விடுகிறேன்” என்று சொன்னார்.
அவனால் நம்ப முடியவில்லை. ”எனக்கா? உங்கள் பெண்ணையா? நான் பாட்டுக்கு எதையும் எதிர்பார்க்காமல் ஏதோ என்னால் முடிந்த ஸஹாயம் பண்ணினேன். கிடைக்கத் தகாத ஆசையை எனக்குக் கிளப்பி விட்டு அப்புறம் ஏமாத்திவிடாதேள்!” என்று கேட்டுக் கொண்டான். 

அவன் அப்படிச் சொன்னதாலேயே அவருக்குத் தீர்மானம் நன்றாகக் கெட்டி ஆயிற்று. “ஒருநாளும் உன்னை ஏமாத்தமாட்டேன். தெய்வ ஸந்நிதானத்துல ஸத்யமா சொல்றேன். இந்த கோபாலன் ஸாக்ஷி” என்று ஆவேசமாகச் சொன்னார்.

ப்ரம்மசாரிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை.

அப்புறம் இரண்டு பேரும் காஞ்சிபுரத்துக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.

திரும்பி வந்தவர் நல்ல ரூபவதியாக தன்னுடையப் பெண்ணைப் பார்த்து, தம் வீடு வாசல், ஸொத்து ஸ்வதந்திரங்களையும் பார்த்து, அதோடு அந்தப் பிள்ளையாண்டான், அவனுடைய பொருளாதார் ’ஸ்டேடஸ்’, ஜாதி ரீதி ‘ஸ்டேடஸ்’ முதலானவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாரோ இல்லையோ, மட்ராஸாவில் அவர் பண்ணின தீர்மானம், கொடுத்த வாக்குறுதி எல்லாம் ஓட்டம் பிடித்து விட்டன!
கன்யாதானம் செய்து கொடுக்காமல் அவர் காலம் கடத்திக் கொண்டே போனதைப் பார்த்து விட்டு ப்ரம்மசாரிப்பிள்ளை துணிந்து அவரை ஞாபகப் படுத்தினான்.

அவ்வளவுதான்! அவர் ஸ்வரத்தை அப்படியே மாற்றிக் கொண்டு விட்டார். “உனக்கா? என் பெண்ணையா? கேட்கிறவாகூடச் சிரிப்பா! மூளை கீளை பிசகி விட்டதா?” என்று ஹேளனமாகப் பேசினார்.
தெய்வ ஸாக்ஷியாகக் கொடுத்த வாக்கை மீறிய பாபம் அவருக்குச் சேரக் கூடாதே என்று ப்ரம்மசாரிக்கு இருந்தது. அநாதையும் தரித்ரனுமான தான் அவரோடு வாதம் செய்து எடுபடாது என்பதால் காஞ்சிபுரத்தில் ராஜாவிடமே பிராது கொடுத்தான்.

”கேட்கிறவா சிரிப்பா” என்று வ்ருத்தர் சொன்னாற்போலவே ராஜா சிரித்தான். அவருடைய குலப்பெருமை, பணப்பெருமை அவனுக்குத் தெரியும். பிராது கொடுத்த பிள்ளையைப் பார்த்தாலோ மலைக்கும் மடுவுக்குமாயிருந்தது. இருந்தாலும் தர்ம ந்யாயப்படி ராஜா அவரைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அப்போது வ்ருத்த ப்ராமணர் ஒரு யுக்தியால் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். “யாத்ரா மார்க்கத்தில் நமக்கு ரொம்பவும் தேஹ உபாதி ஏற்பட்டு அந்தப் பையன் சுசுருஷை பண்ணினான் என்பதையும் அதற்கு ப்ரதியாக நாம் பெண்ணைத் தருவதாகச் சொன்னதையும் நம்பக்கூடிய விஷயங்கள் என்றே ராஜா நினைத்துத் தீர்ப்புப் பண்ணினாலும் பண்ணி விடக்கூடும். அவன் ஏழை என்பதால் நாம் வாக்கை மீறுகிறோம் என்பது நமக்கு அவப்பெயரையே உண்டாக்கும். அதனால் ஜாதி வித்யாஸத்தைக் காரணம் காட்டுவோம். அப்படிச் செய்தால் ராஜா, “வயசான ஒரு ஆசாரக்கார ப்ராமணர் ஜாதியின் உட்பிரிவுகளுக்கிடையே உள்ள வித்தியாஸத்தைப் பொருட்படுத்தாமல், அதை மீறித் தம்முடைய ஒரே பெண்ணை எவனோ ஒரு ஏழைப் பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக ஒருகாலும் வாக்குதத்தம் செய்திருக்க மாட்டார். இப்படி அவர் செய்தாரென்பதற்குத் தக்க ஸாக்ஷியம் இருந்தாலொழிய ப்ரம்மசாரிக்கு ஸாதகமாக நாம் தீர்ப்புப் பண்ணுவதற்கில்லை” என்று விட்டுவிடுவான்’ என்று வ்ருத்தர் ஸாமர்த்தியமாக நினைத்தார்.

ஜாதி, உபஜாதிக் கட்டுப்பாடுகளையும், நாட்டாண்மையையும் ராஜாங்கம் ரொம்பவும் மதித்து ரக்ஷித்த காலம்!

அவருடைய ஸாமர்த்தியம் பலித்தது.

“ஸாக்ஷியம் எதுவுமில்லை. வழக்கைத் தள்ளுபடி பண்ணுகிறேன்” என்று ராஜா தீர்ப்புக் கொடுத்தான்.

பார்த்தான் ப்ரம்மசாரி. “ஸாக்ஷியம் இல்லாமலா? யாருக்குமில்லாத தெய்வ ஸாக்ஷியே இருக்கிறதே! அவ்வளவு உசந்த விஷயத்தைக் கோர்ட்டுக்கு இழுக்க வேண்டாமென்று இதுவரை மூடி வைத்திருந்தோம். இனியும் மூடி வைத்தால் கிழவனார் நிச்சயம் தெய்வக் குற்றத்துக்கு ஆளாகி விடுவாரே!” என்று ப்ரம்மசாரிக்கு வேகம் வந்தது.

” ஸாக்ஷி இல்லாமலில்லை. மதுரா நகரத்துக் கோயில் ஸ்வாமியே ஸாக்ஷி. உங்களுக்கெல்லாம் நான் ஒரு பொருட்டாயில்லாத அநாதனானாலும், இடைப் பசங்களுக்கும் அத்யந்தமாயிருந்த அந்த மதுராநாதன் என்னையும் பொருட்படுத்தி ஸாக்ஷி சொல்ல வருவான்” என்று உறுதியான நம்பிக்கையோடு சொன்னான்.

“நல்லது. அப்படியானால் அவரைப் போய் அழைச்சுண்டு வா. இந்த நீதி ஸ்தலத்துக்கு பகவானே வருவானானால் எங்களுக்கும் பரம பாக்யம் தான்” என்று ராஜா சொன்னான்.

கோபாலனாவது, வருவதாவது என்று வ்ருத்தர் – நிறைய சாஸ்திர, புராணங்கள் படித்தவர் – நினைத்தார். அவ்வள்வு படிக்காதவன், அவரை விட ரொம்பச் சின்ன வயஸுக்காரன் த்ருட நம்பிக்கையோடு காடு மலை தாண்டி ஆயிரம் மைல் போய் மட்ராவை அடைந்தான். கோவிலுக்குப் போனான்.

“கோபாலா! ஸாக்ஷி சொல்ல வா!” என்று ஸ்வாதீனமாகக் கூப்பிட்டான்.
“காத்துக் கொண்டிருக்கேன்!” என்று ஸ்வாமியும் புறப்பட்டார்!

ஸர்வ வ்யாபியான அவர் அவனை அத்தனை அலைக்கழிக்காமல் காஞ்சீபுரம் நீதி ஸ்தலத்திலேயே ஆவிர்பவித்திருக்கலாமே, ஏனப்படிச் செய்யவில்லை என்றால், ‘பக்தி விச்வாஸத்தின் சக்தி ஒரு எளிய ஜீவனைக் காட்டு வழியில் போக வர இரண்டாயிரம் மைல் நடத்துவிக்கும்; பக்த பராதீனனும் தீனதயாளனுமான தன்னையும் அப்படிப்பட்ட எளியவர்களுக்காக ஆயிரம் மைல் காலால் நடந்து போகும்படிப் பண்ணும்’ என்று லோகத்துக்குக் காட்டத்தான்!

பக்த பராதீனன் தான், தீனதயாளன் தான் என்றாலும் அவன் ஏதாவது கொஞ்சமாவது மாயாவித்தனமும் பண்ணாமலிருக்க மாட்டான். அதன்படி இப்போது, “நான் உன் பின்னாடியே வரேன். ஆனா நான் வரேனான்னு ஸந்தேஹப்பட்டுண்டு நீ திரும்பிப் பார்க்கப்படாது. பார்த்தியானா அந்த எடத்திலேயே நான் விக்ரஹமா நின்னுடுவேன்!” என்று சொன்னான்.

இதே மாதிரி கண்டிஷன் போட்டு ஆசார்யாளுக்குப் பின்னாடியே போன ஸரஸ்வதி அவதாரமான ஸரஸவாணிதான் அவர் திரும்பிப் பார்த்து விட்ட ச்ருங்கேரியில் சாரதாம்பாளாக ஆனது!
கோபாலன் சொன்னதை ப்ரம்மசாரி ஒப்புக் கொண்டான். திருப்பி நடையைக் கட்டினான். சிலம்பு ஜல் ஜல்லென்று சப்தம் செய்ய, கோபாலனும் அவனுக்குப் பின்னேயே போனான். அந்த சப்தமே அவன் வருவதை ப்ரம்மசாரிக்குத் தெரிவித்ததால் அவன் திரும்பிப் பார்க்க அவச்யமில்லாமலிருந்தது.

”அப்புறம்  ஏதோ இடத்தில் ஏதோ காரணத்தால் பகவான் நின்றிருப்பான். அவன் வரக் காணுமே என்று ப்ரம்மசாரி திரும்பிப் பார்க்க, அந்த இடத்திலேயே விக்ரஹமாயிருப்பான். அந்த ஊர்தான் ஸாக்ஷி கோபால் என்று கதையை முடிக்கப் போகிறார்” என்று நினைப்பீர்கள். நீங்கள் இப்படி எதிர்பார்ப்பதாலேயே, எதிர்பார்ப்பதற்கு வித்யாஸமாகவே பண்ணும் அந்த மாயா விநோதன், வழியிலே எங்கேயும் நின்று விடாமல், அதாவது ப்ரம்மசாரியைத் திரும்பிப் பார்க்கும்படிப் பண்ணாமல், காஞ்சி எல்லை வரை ஒழுங்காக வந்து சேர்ந்தான்! இன்னும் ஒன்று இரண்டு மைலில் ராஜாவின் நீதிஸ்தலம்.
ஆனாலும் நீதிஸ்தலம் வரை கோபாலஸ்வாமி போகவில்லை. ஏழை ப்ரம்மசாரிக்குக் கட்டுப்பட்டு ஆயிரம் மைல் வந்தவன், ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் கோர்ட்டில் ஸாக்ஷிக் கூண்டில் நிற்க இஷ்டப்படவில்லை.

அதனால் என்ன ஆச்சென்றால்: ஊரெல்லைக்கு வந்த ப்ரம்மசாரிக்கு, “க்ருஷ்ணனையாக்கும் இத்தனாம் தூரம் வரப் பண்ணி நமக்கு ஸாக்ஷி சொல்ல வைக்கப் போகிறோம்!” என்ற ஆச்சர்யமும் பெருமிதமும் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்காக இப்பேர்ப்பட்ட அநுக்ரஹம் பண்ணும் மூர்த்தியைப் பார்க்கிற ஆசை அதை விடப் பொங்கிக் கொண்டு வந்தது! கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிப் பார்த்து விட்டான்!
பகவானும் அந்த எல்லையிலேயே சிலா ரூபமாக நின்று விட்டான்!

அதற்காக ப்ரம்மசாரி இடிந்து போய்விடவில்லை. “ஊர் ஜனங்கள் இங்கே வந்து திடீர் விக்ரஹம் முளைத்திருப்பதைப் பார்த்து நிஜத்தைத் தெரிந்து கொள்வார்கள். ஸ்வாமியே ஆயிரம் மைல் நடந்திருக்க, அந்த வ்ருத்தரும் ராஜாவும் தான் இரண்டு மைல் அவரை எதிர்கொண்டழைப்பது போல வந்து, பார்த்து, விஷயம் தெரிந்து கொள்ளட்டுமே!” என்றே நினைத்தான்.

அவர்களும் வந்தார்கள்.

கோபாலனும் ஸாக்ஷி சொன்னான்.

அதன்படி ராஜா நீதி வழங்கினான்.

வ்ருத்தருக்கும் கண் திறந்தது. பகவானையே பணி கொண்ட இப்பேர்ப்பட்ட பிள்ளை தனக்கு மாப்பிள்ளையாவது பெரிய பாக்யமென்று, ராஜ ஆக்ஞைக்காக இல்லாமல், மனப்பூர்வமாகவே கன்யாதானம் பண்ணிக் கொடுத்தார்.

எல்லாம் சுலபமாக முடிந்தது.

ஸ்வாமி முடிவாக ஒரிஸ்ஸாவில் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்டதாக முதலில் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? காஞ்சி எல்லைக்கு வந்த ஸாக்ஷி கோபாலர் ஏன் எப்படி ஒரிஸ்ஸாவுக்குப் போனார் என்றால்:

மேலே சொன்ன கதை நடந்த பிறகு மட்ரா கோபாலன் காஞ்சி கோபாலனாகிவிட்டானென்பது வட தேசம், உத்கலம் என்கிற ஒரிஸ்ஸா முதலிய எல்லா இடங்களிலும் பரவிற்று.
ஒரிஸ்ஸாவில் புரி ஜகந்நாத்தில் ஸ்வாமி ஜகந்நாதர், க்ஷேத்ரம் ஜகந்நாதம்; இரண்டுமே ‘ஜகந்நாத்’ ஆகிவிட்டது. புரி என்பது ஊர். அதைத்தான் நாம் ‘பூரி’ என்று கோதுமைத் தின்பண்டமாக்கிச் சொல்கிறோம்! அந்தப் புரி ஜகந்நாத்தில் புருஷோத்தமன் என்று ஒரு ராஜா இருந்தார். ஜகந்நாத ஸ்வாமிக்கும் புருஷோத்தமன் என்ற பெயருண்டு. ராஜாக்கள் ராஜ்யம் விட்டு ராஜ்யம் விவாஹ ஸம்பந்தம் பண்ணிக் கொள்வதுண்டல்லவா? அப்படி இந்த ராஜா அப்போது காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்திய தொண்டை மண்டலாதிபதியின் பெண் பத்மாவதியைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஏற்பாடாயிற்று…
பக்தி, ஸங்கீர்த்தனம் என்று இருப்பவர்களுக்கு ஜகந்நாத க்ஷேத்ரம் என்றவுடன் இரண்டு மஹான்களின் நினைவே வரும். ஒருவர் ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர். மற்றவர் எட்வின் ஆர்னால்ட்  - இங்கிலீஷ் பொயட்ரியாக மொழி பெயர்த்திருக்கும் “கீத கோவிந்த மஹா காவ்ய”த்தைச் செய்த ஜயதேவ ஸ்வாமி. அவர் பாட, அதற்கு நர்த்தனமாடிய அவருடைய பத்னியின் பெயரும் பத்மாவதிதான்.

காஞ்சீபுர ராஜகுமாரி பத்மாவதியை புரி ராஜா புருஷோத்தமன் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஸம்மதித்ததற்கு ஒரு முக்ய காரணம், அங்கே போனால் ஸாக்ஷி கோபாலனைத் தரிசனம் பண்ணிவிட்டு வரலாமென்பதுதான். அப்படியே அவர் கல்யாண்மாகி ஸ்வாமி தரிசனம் செய்தாரோ இல்லையோ, இளம் பத்னியைக் கூட மறந்து அந்த ஸ்வாமியிடமே அவருக்கு மஹா ப்ரேமை உண்டாகிவிட்டது. விக்ரஹத்தைத் தமக்குக் கொடுக்கும்படி மாமனாரைக் கேட்டுக் கொண்டார்.

புது மாப்பிள்ளை கேட்பதை மாமனார் மறுக்க முடியுமா? ‘பெண்ணைக் கொடுத்தாயோ, கண்ணைக் கொடுத்தாயோ?” என்று வசனம். பெண்ணைக் கொடுத்த காஞ்சீபுர ராஜர் கண்ணனையும் கொடுத்தார்!
மாப்பிள்ளை தன்னுடைய ராஜ்யத்துக்குப் பத்னியோடும் பகவானோடும் திரும்பினார். புரியில் ஏற்கெனவே பிரஸித்தமான ஜகந்நாத ஸ்வாமி இருந்ததால் அவருக்குப் போட்டியாக ஸாக்ஷி கோபால் அங்கே இருக்க வேண்டாம், தனி ராஜாவாக அவர் வேறே ஊரில் கோவில் கொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். க்ருஷ்ணன் பெயரில் முகுந்தபுர் என்று ஒரு க்ஷேத்ரம் அவருடைய ராஜ்யத்திலிருந்தது. அதை அடுத்துள்ள ஊரில் முக்யமான ஆலயம் எதுவுமில்லாததால் அங்கே ஸாக்ஷி கோபாலுக்குக் கோவில் கட்டி ப்ரதிஷ்டை பண்ணினார்.

அதுவே இப்போது ஸாக்ஷி கோபால் என்று வழங்கும் க்ஷேத்ரம்.

யு,பி.மட்ராவிலிருந்து தமிழ்நாட்டுக் காஞ்சிக்கு வந்து அப்புறம் ஒரிஸ்ஸாவில் தன் பெயரிலேயே ஊரை உண்டாக்கிக் கொண்டு தங்கி விட்ட ஸாக்ஷி கோபால், ‘தேசிய ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு’ என்று கோஷம் போடுவதெல்லாம் அவரது குழந்தைகளாக அனைவரும் பக்தியில் ஒன்று சேர்ந்தால்தான் முடியும் என்பதற்கும் ஸாக்ஷியாக இருக்கிறார்!