‘ஸாக்ஷி நாயகேஸ்வரர்’
பரமசிவனும் தமிழ்நாட்டு ஸ்தலங்கள் இரண்டில் ஸாக்ஷி சொல்லி அவற்றிலொன்றில் ஸாக்ஷி நாயகேஸ்வரர் என்றும், மற்றதில் ஸாக்ஷி நாதேச்வரர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். இரண்டுமே தஞ்சாவூர் ஜில்லாவிலிருக்கும் ஊர்கள்தான்.
ஸாக்ஷி நாயகேஸ்வரர் இருப்பது அவளிவணல்லூர். ‘வள வள என்று இதென்ன பேர்?’ என்று வேடிக்கையாயிருக்கிறதா? ’அவள் இவள் நல்லூர்’ என்பது தான் ஸந்தியில் ‘அவளிவணல்லூர்’ என்றாயிருக்கிறது. ‘அவள் தான் இவள்’ என்று ஸ்வாமியே ஸாக்ஷி சொல்லி ஒரு பெரிய சர்ச்சையைத் தீர்த்து வைக்கும் பாக்யத்தைப் பெற்ற நல்ல ஊர் ‘அவளிவணல்லூர்.’
நீடாமங்கலத்திலிருந்து தஞ்சாவூர் போகிற வழியில் சாலியமங்கலம் என்ற ஊர் வரும். அதற்கு வட கிழக்கில் அந்த ஊர் இருக்கிறது. காவேரியின் தென் கரையிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களின் வரிசையில் அது ஸரியாக நூறாவதாகும். அப்பர் ஸம்பந்தர் இருவரும் பாடிய ஸ்தலம்.
அந்த ஊரில் ரொம்ப காலம் முந்தி ஒரு குருக்கள் இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். அந்த இரண்டு பேரும் ஏறத்தாழ ஒரே ஜாடையாக இருப்பார்கள். ஆதி சைவர், சிவாசாரியார், சிவப்ராமணர் என்றெல்லாம் சொல்கிற தங்களுடைய குருக்கள் ஜாதிப் பிள்ளைகள் இரண்டு பேருக்கு இரண்டு பெண்களையும் அப்பாக்காரர் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்.
பெரிய மாப்பிள்ளை காசி யாத்ரை போனார். கல்யாணத்தில் ஊஞ்சலுக்கு முன்னாடி போகிற ‘உளஉளாக்கட்டை’ காசி யாத்ரை இல்லை; நிஜமான காசி யாத்ரை.
அந்த நாளில் அந்த யாத்ரை முடித்துத் திரும்பப் பல வருஷங்கள் பிடிக்கும். அப்படி அவர் நாலைந்து வருஷத்துக்கப்புறம் திரும்பி வந்தார். வேட்டகத்துக்கு வந்தார்
இதற்கு நடுவில் என்ன ஆயிருந்ததென்றால் அவருடைய பத்னியான குருக்களின் மூத்த பெண்ணுக்குப் பெரியம்மை போட்டி, பிழைத்ததே புனர்ஜன்மமாக அவள் உயிர் தப்பினாள். ஆனால் உக்ரமான அம்மை அவளிடம் கைவரிசையைக் காட்டி விட்டது; முகமெல்லாம் பொளிந்து தள்ளி, கண்ணை நொள்ளையாக்கி, அவள் நிறமும் கறுத்து, தலை மயிர் கொட்டிக் குரூபமாகும்படிப் பண்ணி விட்டது.
காசி போய்த் திரும்பிய பதி நாம் கல்யாணம் பண்ணிக் கொண்ட அவள்தானா இவள் என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்தப் பெண் உருமாறியிருந்தாள்.
இந்த அனர்த்தம் போதாதென்று இந்த ஸமயத்தில் இளைய பெண்ணும் புக்ககத்திலிருந்து பிறந்தகம் வந்திருந்தாள். காலப் போக்கில் அவளுடைய ரூபத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்களால் அவள் அக்காக்காரி அழகாக இருந்தபோது எப்படியிருந்தாளோ அப்படியே அஸலாக ஆகிவிட்டாள். கல்பனையாக வின்யாஸம் பண்ணத் தெரிந்த கதாசிரியர்கள் இங்கே பொருத்தமாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆதியிலே அக்கா இவளை விடச் சிவப்பு, இப்போது அவள் கறுத்துப் போக இவள் சிவந்து விட்டாள்; ஆதியில் அவளுக்குத்தான் தலைமயிர் ஜாஸ்தி, அவளுக்குக் கொட்டிப் போன இப்போதானால் இவளுக்கு அடர்த்தியாக வளர்ந்திருந்தது, என்றெல்லாம்!
ஆக மொத்தத்தில், காசி யாத்ரை முடித்து வந்தவர் தன் பத்னியைப் பத்னியில்லை என்று நினைத்த அனர்த்தத்துக்கு மேல் மச்சினியைப் பத்னி என்று நினைக்கும்படி ஆயிற்று!
‘வைசூரியில் விரூபமானவள் மச்சினிதான். அவளைப் புக்ககத்தினர் தள்ளி வைத்து விட்டிருக்க வேண்டும். அவளையே இப்போது தன்னுடைய வேட்டகத்தினர் தன் பத்னி என்று சொல்லித் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்’ என்று அவர் நினைத்து விட்டார். வாஸ்தவமான பத்னியை ஏற்க மாட்டேன் என்று மறுத்து, பத்னியில்லாதவளிடம் பாத்யதை கேட்டார்.
ஊரார் எத்தனை சொல்லியும் அவர் கேட்கவில்லை. பரம்பரையாக அர்ச்சனை செய்யும் குடும்பத்தில் வந்து பஹூ காலமாக அர்ச்சகராக இருந்துவரும் மாமனார்க்காரர் பக்கம்தான் அந்த ஊரே பேசும் என்று முடிவு பண்ணிவிட்டார். அதனால் அவர்கள் ஸாக்ஷியத்துக்கு அவர் ஒரு மதிப்பும் தரவில்லை.
மாமனார்க்காரர், தான் எத்தனையோ வருஷங்களாக ஆறு காலமும் பூஜை பண்ணிவரும் கோவில் ஸ்வாமிதான் இப்போது ஸாக்ஷிக்கு வர வேண்டும் என்று நெஞ்சுருகி ப்ரார்த்தனை செய்து கொண்டார்.
‘ஸந்நிதிக்கு எல்லாரையும் அழைத்து வாரும். யாம் உண்மை உரைப்போம்’ என்று அசரீரி கேட்டது.
அப்படியே மாப்பிள்ளை, பெண்கள் எல்லாரையும் குருக்கள் அழைத்து வந்தார்.
ஸ்வாமியும் சொன்னபடியே, மாப்பிள்ளையிடம் அம்மை வார்த்துக் குரூபமாயிருந்த பெண்ணைக் காட்டி, “ஆதியில் நீ யாரை அக்னி ஸாக்ஷியாகக் கல்யாணம் செய்து கொண்டாயோ அவள் இவள் தான்” என்று சொன்னார்.
கருணாமூர்த்தியாகையால், அவர்கள் எதிர்பார்க்காத இன்னொரு விஷயம் அந்தப் பெண்ணிடம் சொன்னார் – வைசூரியால் கொடுமைப்பட்டதோடு, பதியிடமும் சிறுமைப்பட்டு மனஸ் ஒடிந்து போயிருந்தவளிடம் சொன்னார் “இந்தக் கோயில் திருக்குளத்தில் முழுகி எழுந்திரு. குரூபம் போய் முன்னைவிட ரூபவதியாவாய்” என்று வரம் கொடுத்தார்.
அப்படியே நடந்தது. மாப்பிள்ளை நிஜ பத்னியை ஏற்றுக் கொண்டார். அஸம்பாவிதம் நேராமல் அந்த அர்ச்சகக் குடும்பம் ஸ்வாமி ஸாக்ஷியால் க்ஷேமமடைந்தது. அந்த ஸ்வாமிக்கு ஸாக்ஷி நாயகேஸ்வரர் என்றே அதற்கப்புறம் பேராகிவிட்டது.
இந்த வரலாறு அந்த ஆலய கர்ப்பக்ருஹத்திலேயே ஸ்வாமிக்குப் பின்பக்கச் சுவரில் சில்பமாகச் செதுக்கப் பட்டிருக்கிறது.