நரகாஸுரனும் அவன் ஊரும் நம்முடைய தேசத்தில் இருக்கிற அநேக ராஜ்யங்களில் ஒரே மலைகளும், பிரம்மபுத்ரா மாதிரியான காட்டா

நரகாஸுரனும் அவன் ஊரும்

நம்முடைய தேசத்தில் இருக்கிற அநேக ராஜ்யங்களில் ஒரே மலைகளும், பிரம்மபுத்ரா மாதிரியான காட்டாறுகளும் மலை ஜனங்களுமே ஜாஸ்தி இருக்கிற அஸ்ஸாமுக்கு அவ்வளவு பெருமை இருப்பதாக நாம் நினைப்பதில்லை. ஆனால் லோகத்திலேயே ‘மாக்ஸிமம்’ மழை பெய்கிற சிரப்புஞ்ஜி அங்கேதான் இருக்கிறது. ஆதி காலத்தில் அதற்கு நிரம்பப் பெருமை இருந்திருக்கிறது. அப்போது அதற்குக் ‘காமரூபம்’ என்று பேர். ஏன் அப்படிப் பேர் என்றால், தக்ஷிணத்தில் பராசக்தி காமாக்ஷியாக இருக்கிற மாதிரி அங்கேயும் ‘காமா’ என்ற பெயரில் பிரசித்தமான சக்தி பீடத்தில் இருக்கிறாள். ‘காமாக்யா’ என்று சொல்வார்கள். ‘ஆக்யா’ என்றால் பெயர். சிவ நாம மகிமையைச் சொல்வதாக ஸ்ரீதர ஐயாவாள் செய்திருக்கிற ஸ்துதிக்கு ‘ஆக்யா ஷஷ்டி’ என்றே பெயர். ‘காமாக்யா’ என்றால் ‘காமா’ என்று நாமமுடையவள். அவளுடைய வாஸஸ்தலமானதால் அஸ்ஸாமுக்கே காமரூபம் என்று பெயர். அதற்கு இன்னொரு பெருமை என்னவென்றால் பகவான் வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் பண்ணி, ஜலத்துக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம் இந்தக் காமரூபம்தான். மலையும் குன்றுமாகக் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பிரதேசம்தான் வழுக்கி விழாமல் ‘பாலன்ஸ்’ பண்ணிக் கொள்ள ஏற்றதாக இருந்தது போலிருக்கிறது.

இப்படி பூமாதேவியோடு வராஹ மூர்த்திக்கு ஸ்பரிசம் ஏற்பட்டதிலிருந்து ஒரு புத்திரன் ஸம்பவித்தான். பகவத் லீலை நமக்குப் புரியாது. ஸாக்‌ஷாத் பகவானே ஓர் அஸுரனைக் கொன்று, நம்மெல்லோரையும் தாயாகத் தாங்குகிற பூமாதேவிக்கு அநுக்ரஹித்த இந்தப் புத்திரன் எதனாலோ அஸுரனாக இருந்தான். நல்லதற்கு மட்டும் God, கெட்டதற்கு       Satan (சாத்தான்) என்றில்லாமல், நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ஒரே பரமாத்மாதான் மூலம் என்றுதானே நம் சாஸ்திரம் சொல்லுகிறது? அதனால் இப்படி பகவானுக்கும் பூமாதேவிக்குமே அஸுரப் பிள்ளை பிறந்தது போலிருக்கிறது.

அந்தப் பிள்ளைதான் நரகாஸுரன்.

அவன் ப்ரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி மஹா பலத்தைப் பெற்றான். லோகங்களையெல்லாம் ஹிம்ஸித்து நரக பாதைக்கு ஆளாக்கினான். அதனால்தான் அவனுக்கு நரகாஸுரன் என்றே பேர் வந்ததோ என்னவோ? ‘பெளமன்’ என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். ‘பூமியின் பிள்ளை’ என்பதால் இப்படிப் பேர் வந்தது. அங்காரகனும் (செவ்வாயும்) பூமி குமாரனானதால் அவனுக்கும் ‘பெளமன்’ என்ற பெயருண்டு. ஸங்கல்பத்தில் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்றோ, அங்காரக வாரம் என்றோ சொல்லாமல், ‘பெளம வாஸர யுக்தாயாம்’ என்றுதான் சொல்கிறோம். ‘அஸ்ட்ரனாமிப்படி’யும் மார்ஸ் (செவ்வாய்) கிரஹத்தில்தான் நம்முடைய உலகம் மாதிரியே நம்மைப் போன்ற உயிரினம் இருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். கிரேக்க-ரோம ‘மைதாலஜி’களில், செக்கச் செவேலென்றிருக்கிற அந்தக் கிரஹத்தை யுத்த தேவதையாகச் சொல்கிறார்கள். ‘செவ்வாய்’ என்றே தமிழில் சிவப்பை வைத்துப் பெயர் இருக்கிறது. செக்கச் செவேலென்ற சிவ நேத்ராக்னியில் தோன்றி தேவஸேநாதிபதியாக இருக்கும் முருகனை அங்காரகனோடு இணைத்து நினைக்கிறோம்.

இந்த பெளமனோ கன்னங் கரேலென்று, தான் போகிற இடத்தையெல்லாமும் நரக இருட்டாகப் பண்ணுகிறவனாக இருந்தான்! தேவலோகத்துக்குப் போய் தேவர்களை அடித்து நொறுக்கி ஹதாஹதம் பண்ணினான். இந்திரனுடைய குடையையும் – குடைதான் பெரிய ராஜச் சின்னம்; ’வெண்கொற்றக் குடை’ – என்கிறோம். ‘சத்ரபதி’, ‘சத்ரபதி சிவாஜி’ என்றெல்லாம் சொல்கிறபோது ‘சத்ரம்’ என்றால் குடைதான் – அப்படிப்பட்ட இந்திரனுடைய குடையையும், இந்திரனுடைய தாயார் அதிதியின் குண்டலங்களையும் நரகாஸுரன் பறித்துக் கொண்டு வந்தான். காம ரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்கிற ஊரைத் தலைநகராக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ராஜ்யம் நடத்தினான். ‘ஜ்யோதிஷபுரம்’ என்றால் ப்ரகாசமான பட்டணம்’ என்று புரிந்து கொள்வீர்கள். ‘ப்ராக்’ என்றால் முன்பக்கம், கிழக்குத் திசை என்று அர்த்தம். ஸூர்யோதயம் கிழக்கில் தானே? இந்தியாவுக்கே கீழ்க்கோடியில் காம்ரூபத்தில் இருந்ததால், தன்னுடைய இருட்டு ஊருக்கு ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான்.

பஹு காலம் இந்திரனும் பகவானிடம் முறையிடாமல் பொறுத்துக் கொண்டே இருந்தான். வேறே யாரோ அஸுரன் என்றால் பகவானிடம் ‘கம்ப்ளெயின்’ பண்ணலாம். இவனோ பகவானுக்கே அல்லவா பிள்ளையாக இருந்தான்? அதனால், ‘உன் பிள்ளையின் அழகைப் பார்’ என்று பிராது கொடுத்தால் அது பகவானையே குத்திக் காட்டுகிற மாதிரிதானே என்று நினைத்துப் பொறுத்துக் கொண்டேயிருந்தான்.