காவேரி துலா கட்டம்
காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!
இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.
யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.
உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.
ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.
பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.