தீபாவளியில் காவேரி ஸ்நானம்
ஆகையால் தீபாவளிக்கு கங்கையோடு காவேரி ஸம்பந்தமும் இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும் அருணோதயதிலிருந்து ஸுர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாளென்றால், துலா மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.
அதனால் தீபாவளியன்று முதலில் நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸுர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரியை ஸ்மரித்துக்கொண்டு பண்ணவேண்டும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேச்வரன் நினைவும் வந்துவிடும்.
இந்தப் புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உன் அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!