ஆர்ய-திராவிட ’ஆராய்ச்சி’! ஒரு வேடிக்கை எ

ஆர்ய-திராவிட ’ஆராய்ச்சி’!

ஒரு வேடிக்கை என்னவென்றால், மஹாவிஷ்ணுவைத் தமிழ்நாட்டிலே விஷ்ணு சப்தமாகச் சொல்லாமல் ‘பெருமாள்’ என்று சொல்வதாகவே வைஷ்ணவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால்: நம்முடைய ‘ரிஸர்ச்’கார மேதாவிகள் சிவனை திராவிட ஸ்வாமி என்றும், விஷ்ணுவை ஆர்யஸ்வாமி என்றும் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையைப் பார்த்தால் ‘திராவிட ஸ்வாமி’யை ஈச்வரன் என்ற ஸம்ஸ்கிருதப் பெயரிலும், ‘ஆர்ய ஸ்வாமி’யைப் பெருமாள் என்ற தமிழ்ப் பெயரிலும் சொல்வதாக இருக்கிறது! ரொம்பவும் பாமரமான ஜனங்கள் கூட ‘ஈச்வரன் கோவிலு’, ’பெருமா கோவிலு’ என்றுதான் சொல்லக் கேட்கிறோம். இதைவிடக்கூட ரிஸர்ச்சின் ‘மேதாவித்தன’த்தைக் காட்டுவதாக இன்னொன்று இருக்கிறது.

’ஆர்யர்கள் சிவப்பு நிறக்காரர்கள்; சிவப்புப் பிரியர்கள்; செக்கச் செவேல் என்ற அக்னியை உபாஸிக்கிறவர்கள். திராவிடர்கள் கறுப்புக் கலர்க்காரர்கள்; கறுப்புப் பிரியர்கள்; கரு நீலமாக திராவிட தேசத்தை சுற்றிச் சூழ்ந்திருந்த ஜலத்தில் பிரியம் வைத்திருப்பவர்கள்’ என்றெல்லாம் ரிஸர்ச் பண்ணிச் சொல்கிறார்கள். இந்த நியாயப்படி பார்த்தால் திராவிட ஸ்வாமிதான் கறுப்பாக இருக்கணும்; ஆர்யஸ்வாமி சிவப்பாக இருக்கணும். ஆனால் வாஸ்தவத்தில் எப்படி இருக்கிறது? சிவன் தான் செக்கச் செவேல் என்று இருக்கிறார். ‘பவளம் போல் மேனி’, ‘சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி யெம்மான்’ என்றெல்லாமே தேவாரத்தில் பார்க்கிறோம். ’செந்தழல் உருவர் போலும்’ என்று அந்த ’திராவிட ஸ்வாமி’யையே ஜ்யோதிஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது. ‘ஆர்ய ஸ்வாமி’யானால் ஜலாசலத்திலேயே படுத்துக் கொண்டிருக்கிறார்! நீருண்ட மேகம் போல் இருக்கிறார். ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து’ என்று ஆண்டாள் சொல்கிறபடி இருக்கிறார். க்ருஷ்ணாவதாரம் பண்ணியிருக்கிறாரே, அந்த கிருஷ்ணன் என்ற பேருக்கே ‘கறுப்பன்’ என்றுதான் அர்த்தம். இந்தக் கறுப்பர்தான் பூர்வாவதாரத்தில் ராமராக இருந்தபோது ‘கறுப்பண்ணா சாமி’! கறுப்பாகவும் அண்ணாவாகவும் இருந்த ஸ்வாமி! அவர் மூத்த பிள்ளை. அப்புறம் மூன்று பிள்ளைகள். அந்தத் தம்பிகளுக்கு இவர் அண்ணா – அண்ணா ஸ்வாமி. க்ருஷ்ணாவதாரத்தில் அவரே தம்பிஸ்வாமி. பூர்வாவதாரத்தில் அவரோடு இணை பிரியாமலிருந்த தம்பி லக்ஷ்மணரே இப்போது அண்ணா பலராமராக வந்தார்.  லக்ஷ்மணர், பலராமர் இரண்டு பேரும் சேஷாவதாரம். இரண்டு பேரும் நல்ல வெளுப்பு. கறுப்பு ராம-க்ருஷ்ணர்கள், வெளுப்பு லக்ஷ்மண-பலராமர்கள்.

ரிஸர்ச் என்று தடால் புடால் பண்ணி, அதுவரை ஒரு குடும்பமாக ஒட்டிக் கொண்டிருந்த ஜன ஸமூஹத்தில் பேத சிந்தனையை நன்றாக வேரோட விட்டிருக்கிறார்கள்!

சிவநாமா பற்றியும் இதே மாதிரி மேதாவித்தன ரிஸ்ர்ச்சும், அதையே அதாரிடியாக ரொம்பப் பேச எடுத்துக் கொண்டிருக்கிற ஹீன நிலைமையையும் பார்க்கிறோம். தமிழ் சிவப்பிலிருந்துதான் சிவநாமா வந்தது என்பது தான் அந்த ரிஸர்ச். ஆனால் ரொம்பப் பழைய தமிழ் நூல்களிலிருந்து ஆரம்பித்து இன்றைக்கு வரை ‘சிவ’ என்கிறது அந்தப் பேருடைய ஸ்வாமி ஒருத்தரை மட்டுமே குறிக்கிற proper noun-ஆக, ஒரு தனி ஆஸாமியின் பெயராகத்தான் தமிழில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறதே தவிர, common noun என்கிற பொதுப் பெயராக வரவேயில்லை. ஆனால் லோகத்திலேயே ஆதி முதல் புஸ்தகம் என்று இந்த ரிஸர்ச்காரர்களே சொல்கிற ரிக்வேதத்திலிருந்து ஆரம்பித்து ஸம்ஸ்கிருத பாஷையிலே ;சிவம்’ என்றால் மங்களம், ஸெளக்யம், நல்லது என்ற அர்த்தத்தில் common noun- ஆக நிறைய வழங்கப்பட்டு வந்திருக்கிறது. குணம், தன்மை என்று எதுவுமே சொல்ல முடியாத சாந்தமான அத்வைத ஸத்தியத்தையே ‘சிவம்’ என்று சொல்கிற அளவுக்கு அந்த வார்த்தைக்கு உள்ள உத்கர்ஷத்தை (ஏற்றத்தை) மாண்டூக்ய உபநிஷத்தில் பார்க்கிறோம்.

ஸம்ஸ்கிருதத்திலுள்ள புகழ் பெற்ற அகராதியான ‘அமர (கோச)த்தில் ‘சிவ’ என்கிற வார்த்தைக்கே synonymகளாக, அதாவது அதே அர்த்தமுள்ள இதர வார்த்தைகளாக, “பத்ரம் (bhadram), கல்யாணம், மங்களம், சுபம்” என்கிறவைகளைக் கொடுத்திருக்கிறது. ‘ச்வச்ரேயஸம்-சிவம்-பத்ரம்-கல்யாணம்-மங்களம்-சுபம் இந்த எல்லா வார்த்தைக்குமே அர்த்தம் மங்களமானது என்பதுதான். நல்லதாக, ஸந்தோஷம் தருவதாக, லக்ஷ்மீகரம் வாய்ந்ததாக இருக்கிற ஒன்றுதான் இந்த மங்களமான சிவம்.

ஆலோசித்துப் பார்த்தால் இத்தனை வார்த்தைகளுக்கும் நல்லது – ஸந்தோஷம் – ஸெளக்யம் -  லக்ஷ்மீகரம் என்கிற எல்லாவற்றுக்கும் தாத்பர்யம் அன்புதான் என்று தெரியும். அன்புதான் நல்லதைச் செய்வது, ஸெளக்யமும் ஸந்தோஷமும் தருவது, லக்ஷ்மீகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது. ‘புனிதத்தன்மை’ என்பதோடு இணை பிரியாமல் சேர்ந்தது அன்பு. ஆசையும் காமமும் புனிதமில்லை. அன்பு புனிதம்.

அதனால்தான் ‘அன்பே சிவம்’ என்று சொல்வது.

ஆனாலும் மஹா அநுபவியான திருமூலர்தான் அப்படிச் சொன்னாரே தவிர, மற்றபடி தமிழில் அன்பாயிருப்பதை சிவமாயிருப்பது என்றோ – அதே மாதிரி, மங்களமாகவோ நல்லதாகவோ இன்பம் கொடுப்பதாகவோ இருப்பதை சிவத்தைக் கொடுப்பது என்றோ – சொல்கிற வழக்கமில்லை. எந்தத் தமிழ் நூலிலும் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. ஸம்ஸ்கிருதத்தில்தான் அப்படி அந்த வார்த்தையை ஆதிக்கும் ஆதிப் புஸ்தகம் என்று லோகம் பூராவும் ஒப்புக் கொள்ளும் வேதத்திலிருந்து ஆரம்பித்து ஸஹஜமாகவே சொல்கிறதாக இருக்கிறது. இருந்த போதிலும் திராவிட சிவனையே ஆர்யர்கள் கடன் வாங்கிக் கொண்டார்கள் என்று ரிஸர்ச் ‘மேதை’கள் ஸாதிக்கிறார்கள்!

இது ஸம்பந்தமாக இன்னும் கொஞ்சம் சொல்லணும். ‘உக்ரமாக, க்ரூரமான கார்யம் பண்ணிக் கொண்டு ருத்ரன் என்று ஒரு தெய்வம். அவனைத் தான் வேத மதத்தில் முதலில் ஸ்தோத்திரித்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் ஸெளம்ய மூர்த்தியாக ஸெளக்யத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிற சிவன் என்ற தெய்வத்தைத் தெரிந்து கொண்டார்கள். அப்படியே காலக்ரமத்தில் இவனையும் அவனையும் ஒன்று சேர்த்து ஒருத்தனாகப் பண்ணி விட்டார்கள்’ என்பது ரிஸர்ச்காரர்களின் தீர்ப்பு. எதற்காக உக்ர தெய்வத்தையும் ஸெளம்ய தெய்வத்தையும் ஒன்றாக்கணுமோ, தெரியவில்லை!

சரி, பிரத்யக்ஷ proof – வேத வசனத்திலேயே பஹு (வெகு) ஸ்பஷ்டமாகக் கிடைக்கிற proof – என்ன காட்டுகிறது?

ருத்ரத்தில் ஸ்வாமியிடம், “உன் கோபத்துக்கு நம்ஸ்காரம்” என்றே அடி ஆரம்பத்தில் வேண்டிக் கொண்டு, “ஆனாலும் சிவமாக அதாவது, ஸெளக்யம் தருகிற மங்கள மூலமாக ஒரு ரூபம் இருக்கே, அந்த ரூபத்திலேயே எங்களை அநுக்ரஹி. உன் கை வில்லு, அம்பு, அம்பறாத்தூணி முதலானதுகளையும் சாந்தம் பண்ணி, ஜகத்தை ஹிம்ஸிக்காமல் காப்பாற்று. அஸுர – ராக்ஷஸர்கள், துஷ்ட ப்ராணிகள் முதலானதுகள் மேலேயே பாண ப்ரயோகம் பண்ணி உன் உக்ர ரூபத்தைக் காட்டு” என்று இந்த மாதிரி அந்த ஸ்தோத்ரம் சொல்லிக் கொண்டே போகிறதை வைத்துத்தான், ‘இரண்டு ஸ்வாமி, ஒன்று உக்ரம், இன்னொன்று ஸெளக்யம்; ஒன்று வைதிகம் – ஆர்யர்கள் பூஜித்தது, இன்னொன்று அவைதிகம் – திராவிடர்கள் பூஜித்தது; அப்புறம் இரண்டையும் கூட்டிக் கலந்து ஒன்றான syncretic deity-யாகச் செய்து விட்டார்கள்’ என்று ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பாகச் சொல்கிறார்கள்.

இப்போது நான் சொன்ன ‘ருத்ரம்’ யஜுர் வேதத்தில் வருவது. இந்த ருத்ரத்தில் இப்படி ஒரே ஸ்வாமிக்கு உக்ரமாகவும், ஸெளக்யமாகவும் இரண்டு aspect சொல்லியிருந்தாலும், ஆராய்ச்சிக்காரர்களின் அபிப்ராயப்படி அதற்குப் பூர்வமான ரிக்வேத காலத்தில் உக்ரமாக மட்டுமுள்ள ஒரு ருத்ரனைத்தான் ஆர்யர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சொல்லி, அதுவே முடிந்த முடிவு என்று வைத்திருக்கிறார்கள். அதையே நாமும் அலசி, ஆராய்ந்து, ஆலோசித்துப் பார்க்காமல் வேத வாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நிஜமான வேதவாக்கில் நமக்கு நம்பிக்கை, அபிமானம் இல்லை! ‘கொஸ்ச்சின்’ பண்ணுகிறோம்! ஆனால் இண்டாலஜிஸ்ட் என்ன சொன்னாலும் அதைக் கொஸ்ச்சின் பண்ணாமல், ‘இதுதான் நமக்கு வேதவாக்கு’ என்று எடுத்துக் கொள்கிறோம்!

அவர்கள் ரிக்வேத காலத்தில் உக்ர ருத்ரன் மட்டுமே தெரியும் என்கிறார்களே, அது அடியோடு தப்பபிப்ராயம். ரிக்வேதத்திலும் ருத்ரனைப் பற்றி ஐந்து ஸுக்தங்கள் உண்டு. அவற்றைப் ’பஞ்ச ருத்ரம்’ என்று தொகுத்திருக்கிறது. அதற்கு நாம் கொஞ்சம் அர்த்தம் பார்த்து விட்டாலே தெரிந்து விடும். ஜாஸ்தி சிரமப்படக் கூட வேண்டாம்; ஸுலபமாக அந்தத் ‘தியரி’யை நிராகரணம் பண்ணி விடலாம் (நிராகரித்து விடலாம்). அதில் முதல் ஸுக்தத்தின்* அர்த்தம் பார்த்தாலே போதும். அதன் ஆரம்ப ரிக்கே (ச்லோக மந்திரமே) கூடப் போதும்! அந்த ஆரம்பத்திலேயே ருத்ரனை ஹ்ருதயவாஸியாகச் சொல்லியிருக்கிறது. ருத்ர ஸ்வரூபமும் சிவ ஸ்வரூபம் மாதிரியே அன்புதான். அதாவது பரம் ஸெளக்யந்தான் என்பதற்கு எடுத்த எடுப்பில் அவனை ஹ்ருதயவாஸியாக ‘ஹ்ருதே’ என்று சொல்லியிருப்பதே நிரூபணம். அந்த ஆரம்ப மந்திரத்திலே அவனை ’ப்ரசேதஸ்’ என்றும் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், ‘உசந்த ஞானமுள்ளவன்’ என்று அர்த்தம். ‘ருத்ரன்’ என்று முதலில் பேரைச் சொல்லி, உடனேயே அவனுக்கு முதல் லக்ஷணமாக இந்த ஞானத்தை, ஞானமுடைமையைத்தான் சொல்லியிருக்கிறது. அடுத்த லக்ஷணமாக, ‘வாரி வழங்குகிறவர்களில் அவன் தான் தலைமை ஸ்தானம்’; ’ஸுபர்லேடிவ்’ என்கிறார்களே, அப்படி வள்ளல்களில் எல்லாரையும் மிஞ்சிய ’ஸுப்பர்லேடிவ்’ வள்ளல் – ‘மீடுஷ்டமன்’ – அவன் என்று இருக்கிறது. அதுதான் இங்கே ருத்ரனுக்குக் கொடுத்திருக்கிற பெயர். அதற்கப்புறம் தான் அவனை பலிஷ்டன் (வலிமை பொருந்தியவன்) என்று மூன்றாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ‘தவ்யஸே’ என்று இருப்பதற்கு அதுதான் அர்த்தம். இங்கே கூட ’பலம்’ என்பதால் உக்ர பாவத்தைச் சொன்னதாக எடுத்துக் கொள்வதற்கில்லை. ‘நல்ல பலசாலி’ என்று ஒருத்தனைச் சொன்னால் ‘முரட்டுச் சண்டைக்காரன்’ என்றா அர்த்தம் பண்ணிக் கொள்வது?  இப்படி முதலில் ஞானியாக, அப்புறம் கருணை நிறைந்த வள்ளலாக, அதற்கப்புறம் பலிஷ்டனாக வர்ணிக்கப்பட்டவனை உக்ரதேவதை என்றால் கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா?

இப்படியேதான் அந்த ஸுக்தம் நெடுகப் பரம க்ருபாளுவாக ருத்ரன் பல தினுஸான அநுக்ரஹங்களைச் செய்வதை, வைத்யநாதனாக வியாதி தீர்ப்பதை, யஜ்ஞ ரக்ஷணை செய்வதை (வேள்வியைக் காத்துக் கொடுப்பதை)யெல்லாம் சொல்லியிருக்கிறதே தவிர, அவனை ஹிம்ஸிப்பவனாகச் சொல்லவில்லை.