நல்லதும் அவனே, கெட்டதும் அவனே
ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது என்ற உத்தமமான தத்வத்தைக் கொண்டது நம்முடைய மதம். வாஸ்தவத்தில் அது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. என்னவென்றே வரையறுக்க முடியாத – நாம ரூபமில்லாத – பரம ஸத்யந்தான் பரமாத்மா. அந்த ஏக வஸ்துதான் மாயையினால் நல்லதாகவும் கெட்டதாகவும் உள்ள ஸகல ஜீவ ஜட ப்ரபஞ்ச வஸ்துக்களாகவும் தெரிகிறது. இதுதான் நம் மதம் சொல்வது. நல்லதை மட்டும் பண்ண ஒரு ஸ்வாமி, அவனுக்கு விரோதமாக்க் கெட்டதைச் செய்ய ஸைத்தான் என்று நாம் சொல்லவில்லை. ‘நாம் சொல்லவில்லை’ என்றால் என்ன அர்த்தம்? அநுபவிகளான, ஸத்ய ஸாக்ஷாத்காரம் பெற்றவர்களான நம் பூர்விகர்கள், நல்லதற்கு மட்டும் ஈச்வர சக்தி, கெட்டதற்கு ஈச்வர சக்தி இல்லாத ஒன்று என்று தங்கள் பிரத்யக்ஷ அநுபவத்தில் காணவில்லை. ஒரே சாந்தந்தான் அடிப்படையான ஸத்வஸ்து – மெய்ப்பொருள்; பிரம்மம், பரமாத்மா என்பது. அது மாயையால் சக்தி விலாஸம் செய்கிற போது ஒரே ஈச்வரனாகத்தான் இருந்து கொண்டு நல்லது, கெட்டது இரண்டும் பண்ணுகிறது என்றே அவர்கள் கண்டுகொண்டு, நமக்குச் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாமும் நல்லது-கெட்டதைக் கடந்து அதற்கு அப்பாற்பட்ட பிரம்மத்தில் ஐக்கியம் பெறுவதற்கு வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.