எப்போதும் உக்ரனே எப்போதும் ஸெளம்யனும்
இந்த தேசத்தில் இரண்டு ரேஸ் இல்லை என்கிற மாதிரியேதான் இந்த தேசத்தை வடக்கே ஹிமாசல கேதார்நாத், அமர்நாத்திலிருந்து தெற்கே ராம்நாத் (ராமேச்வரம்) வரை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஈச்வரனும் இரண்டு இல்லை. இரண்டு ரேஸ்கள் காலக்ரமத்தில் கலந்து, குழம்பி ஒன்று மாதிரி ஆகிவிட்டன என்று இண்டாலஜிஸ்ட் சொல்கிற மாதிரியே – அது எப்படித் தப்பானதோ, அதே மாதிரியே – இரண்டு ஸ்வாமிகளைக் குழப்பி ஒருத்தனாக்கியிருக்கிறது என்பதும் தப்பு.
(யஜுர்வேத) ருத்ரத்தில் இரண்டு இடங்களில். உக்ரபாவத்திலுள்ள ருத்ரனைக் கூப்பிட்டு, “அப்பா, ருத்ரா! உனக்கு எந்த சிவமான மங்களரூபம் உண்டோ – தே சிவாதநூ:” என்று ஸ்பஷ்டமாக வருகிறது.* ஸாக்ஷாத் ருத்ரனுக்கேதான் ஸெளம்ய ரூபமும் உண்டு என்பது இங்கே நிஸ்ஸந்தேஹமாக (ஐயமற)த் தெரிகிறது.
ஒரு ஸமயத்தில் உக்ரம், இன்னொரு ஸமயத்தில் ஸெளம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே ஸெளம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் ஸதாசிவ நாமா..
மஹாவீரன் ரணபூமியில் உக்ரனாயிருக்கிறான், க்ருஹத்தில் ஸெளம்யமாயிருக்கிறான் என்றேன். ஸ்வாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; க்ருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் ஸம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்! ஒரே ஸமயத்தில் இந்த இரண்டு கார்யமும் நடக்கிறது. ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி ஸம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது! ஒரே ஸமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக் கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் ஸமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! நாம் இத்தனை கோடி பேர் இருக்கிறோம். நம் அத்தனை பேருக்குள்ளும் அந்த ஒருத்தனேதான் அந்தராத்மாவாக, அந்தர்யாமியாக இருந்து கொண்டு நடத்தி, ஆட்டி வைக்கிறான். நம்மில் பலர் நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து கொண்டு சாந்தமாயிருக்கிறோம்; வேறே பல பேர் கெட்டதை நினைத்து, கெட்டதைச் செய்கிறோம்; இந்த இரண்டு தினுஸான கார்யமும் ஒரே ஸமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த ஸர்வாந்தர்யாமி ஒரே ஸமயத்தில் ஸெளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
முன்னேயே சொன்னாற்போல அவன் அவனாக் மட்டுமே நிஜ ஸ்வரூபத்திலிருக்கிறபோது இந்த இரண்டாகவுமில்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். அவனை மாயையினால் நாமாகப் பிரதிபலிப்பதற்கு மூலச் சரக்கான ஈச்வரனாயிருக்கும் போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான். மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிற போது ஒவ்வொரு ஸமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு ஸமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!