பன்னிரண்டு அடியார்களுடன் நம்பியாண்டார் நம்பி முடித்தாரென்றால், அவர் வகுத்த திருமுறைகளும் பிற்பாடு பதினொன்றோடு இன்னொன்று கூட்டிக் கொண்டு பன்னிரண்டாகப் பூர்த்தியாயிற்று. ராஜராஜசோழனுக்குப் பின்ஸந்ததியான அநபாய சோழனின் காலத்தில் அறுபத்து மூவர் சரித்திரத்தை, hagiography literature -ல் (மஹான்கள் சரித இலக்கியத்தில்) 'லோகத்திலேயே இதற்கு ஸமானமில்லை' என்று எல்லோரும் கொண்டாடும் படியாகத் 'திருத்தொண்டர் புராணம்' என்று சேக்கிழார் - அநபாயே சோழ மஹாராஜாவின் பிரதம மந்திரியா யிருந்தவர் - பாடிக் கொடுத்தார். 'பெரிய புராணம்' என்று அதைத்தான் சொல்கிறோம். அதுவே பன்னிரண்டாம் திருமுறை. அந்த அநபாயன்தான் இரண்டாவது குலோத்துங்கன் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு பொருத்தம் என்னவென்றால் பதினோரு திருமுறைகளை வகுக்கச் செய்த ராஜராஜ சோழனுக்கு அப்பா அம்மா வைத்த பேர் - இயற்பெயர் - அருண்மொழி என்பது, பன்னிரண்டாம் திருமுறை பாடின சேக்கிழாரின் இயற்பெயரும் அருண்மொழிதான். தமிழ் மக்களை வாழ வைக்கும் அருள் மொழிகளையெல்லாம் ஒரு அருண்மொழி கண்டுபிடித்துக் கொடுத்தான். இன்னொரு அருண்மொழி அந்த அருள் மொழி அருளியவர்களின் சரித்ரங்களைப் படைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதற்கெல்லாம் அருளியவர் விக்நேச்வரர். தமிழ் மக்களுக்கு இஹம் - பரம் இரண்டும் கிடைப்பதற்கு அவர் செய்திருக்கிற உபகாரம் வேறு யாரும் செய்யவில்லை.