ருத்ரனும் உள்ளுக்குள்ளே சிவன் தான்!
அப்படியிருப்பதில் எப்போதுமே நல்லதாக இருக்கிறவனைத்தான் ஸதாசிவனாகச் சொல்லி ஸ்தோத்ரம், தியானம் பண்ணுவது.
“ஏன் எப்போதுமே கோபமாக இருக்கிறவனை ‘ஸதாருத்ரன்’ என்றும் சொல்லி, அப்படி அவனைப் பூஜை பண்ணப்படாது?” என்றால் –
நமக்கு அவனிடமிருந்து வேண்டியது ஸெளம்ய பாவம் தானே? நமக்குள் புகுந்து நம்மையும் அவன் மாதிரி அன்புமயமாக்குவதற்கு அதுதானே ஸஹாயம் செய்யும்? அன்பாக இருந்தால்தான் நமக்கு ஆனந்தம். நமக்கு வேண்டியது ஆனந்தம்; ஆனபடியால் அன்பு. ஆகையினாலே அதைத் தருகிறவனை, அதுவே ஸ்வரூபம் என்று ஸதாசிவனாகத்தானே நாம் வழிபட வேண்டும்?
நெருப்பு கொளுத்தி பஸ்மீகரம் பண்ணி ரெளத்ரம் காட்டுகிறது; அதுவே சமைத்துப் பக்குவம் பண்ணி உடம்பை வளர்த்துக் கொள்ளவும், படித்து, பாராயணம் பண்ண வெளிச்சம் கொடுத்து நம் உயிரை வளர்த்துக் கொள்ளவும் சிவமாக ஸஹாயம் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம்? நம்மைக் கொளுத்தியா கொள்கிறோம்? அடுப்பும், தீபமுந்தானே ஏற்றிக் கொள்கிறோம்?
இன்னம் ஒரு படி மேலே போனால் ஸதாசிவ நாமத்திற்கு இன்னொரு இன்டர்ப்ரடேஷன் (விளக்கம்) ஸதாருத்ரன் என்று சொல்லாமல் ஸதாசிவன் என்றே சொல்வதுதான் ஸரி என்று நியாயம் காட்டும் இன்டர்ப்ரடேஷன்; அதாவது, கெட்டது, உக்ரமானது, ரெளத்ரமானது என்பதுங்கூட அடிப்படையில் நல்லது தான், சிவத்தில் ஜனித்ததுதான் என்று புரிந்து கொள்வது.
அதெப்படி?
எப்படியென்றால், கெட்டது என்று எதைச் சொல்கிறோம்? எது நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ அதைத்தான். ஆனால் கஷ்டப்பட்டாலொழிய நம் கர்மா எப்படித் தீரும்? பூர்வத்தில் பண்ணின தப்பு, பாபம் போய் நாம் கர்ம பாசத்திலிருந்து விடுபட்டு, free ஆகணுமென்றால், பண்ணினதற்கெல்லாம் தண்டனையாகக் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். ஆகவே, ஸ்வாமி ருத்ரனாக்க் கெடுதி பண்ணி நமக்குக் கஷ்டம் கொடுக்கிறாரென்றால் அது நம்மைக் கர்மாவிலிருந்து விடுவிக்கத்தான்! அந்த அன்பான நோக்கத்தில்தான் அன்பே உருவான சிவன் ருத்ரனும் ஆயிருப்பது! ருத்ரனாயிருக்கும் போதும் மூல பாவம் அந்த சிவமான அன்புதான். அதாவது, ஸெளம்பமாக வெளிப்பட்த் தெரிகிற போதில் மாத்திரமில்லாமல் ருத்ரனாக இருக்கிறபோதும், அந்த இரண்டு போதும் என்பதால் எப்போதும், அதாவது ஸதாவும் அவன் உள்ளுக்குள்ளே சிவனாகத்தான் இருக்கிறான். அதனால் தான் “ஸதாசிவன்” என்றே சொல்வது. ஸதாருத்ரன் இல்லை – ச்மசான ருத்ரனாகத் தெரிகிற போதில்கூட உள்ளுக்குள் அப்படியில்லாமல் ’சிவ’னாக இருக்கிறவன் எப்படி ஸதா’ருத்ர’னாக முடியும்?
இன்னமுங்கூடக் கொஞ்சம் நீட்டிக் கொண்டு போகலாம். கஷ்டம், கெடுதல் என்பது இல்லாவிட்டால் ஸம்ஸார வாழ்க்கை அலுத்தே போகாது. இது வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படவே ஏற்படாது. லோக வாழ்க்கை முழுக்க ஸெளக்யமாகவே இருந்துவிட்டால் இதை விட்டு விடுபட எப்படி நினைப்போம்? இந்திரிய ஸெளக்யங்களிலேயே திருப்தர்களாக இருந்து கொண்டு இதற்கு அனந்தம் பங்கு (மடங்கு) பெரிசான ஆத்மானந்தத்தைப் பற்றிச் சிந்தையே இல்லாமல், அதற்கு ப்ரயத்தனமே படாமல்தான் சிற்றின்ப ஜீவிகளாகவே குறுகிக் கொண்டு முடிந்து போவோம். கஷ்டம் இருக்கிறதோ, கொஞ்சத்தில் கொஞ்சமாவது வைராக்யம், லவலேசமாவது மோக்ஷாபிலாஷை நமக்கும் எப்போதாவது வாய்க்கிறது!
அவ்வளவு தூரத்துக்கு ‘ஸம்ஸார நிவ்ருத்தி’ என்று போகாவிட்டால் கூட, கஷ்டம் வந்தால் தான் அந்தக் கஷ்டம் நிவ்ருத்தியாகி, இந்த லோகத்தில் ஸெளக்யம் உண்டாவதற்கேயாவது பகவானை நினைத்து ப்ரார்த்தனை பண்ணுகிறோம். குந்தி கூட க்ருஷ்ண பரமாத்வாவிடம் வரம் கேட்டாள்: “எங்களுக்கு விபத்துகள் வந்து கொண்டே இருக்கட்டும். அப்போதான் ரக்ஷிப்பதற்காக உன்னைக் கூப்பிடுவோம். நீயும் வருவாய். உன்னைத் தரிசித்த அப்புறம் விபத்து நிவாரணத்துக்காக இல்லாமல், ஜன்மா நீக்கம்-ஸம்ஸார நிவ்ருத்திக்காகவே வேண்டிக் கொள்கிற புத்தியும் வரும்” என்று!
ஆகக்கூடி ருத்ரனாயிருக்கும் போதும் ஸாரபூதத்தில் அவன் அன்புமயமான சிவன் தான்.
இந்தப் பரம ஸத்யத்தை நாம் புரிந்து கொண்டு, எப்போதும் மறக்காமலிருக்க வேண்டுமென்றுதான் அவனுக்கு ‘ஸதாசிவ’ நாமா கொடுத்து வைத்திருப்பது.