வேதம் சொல்லும் ‘ஸதாசிவோம்’
வேதத்திலேயே கொடுத்திருக்கிற பேர் அந்த ஸதாசிவ நாமா என்ற பெருமை படைத்தது. அதைவிடப் பெருமை அந்தப் பேரோடு ப்ரணவத்தைக் கூட்டி அதையே ஆதியோடந்தம் ஸகலத்துக்கும் ஆதாரமான பிரம்ம ஸ்வரூபமாக வேதம் கொடுத்திருப்பது.
முதலில் வேதம் ருத்ரனிடம், “உனக்கு ஒரு சிவமான ரூபம் இருக்கே!” என்றது. அப்புறம், ‘இப்படிச் சொன்னால் ரெளத்ரமாக ஒரு ரூபம், சிவமாக ஒரு ரூபம், ஒவ்வொண்ணும் எப்போதும் அப்படி இருப்பது’ என்று தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு விடப் போகிறார்களே என்று பார்த்தது. அதனாலே முதலில் சொன்னதற்குக் கொஞ்சம் ;அமென்ட்மென்ட்’ பண்ணி, தெளிவாக்கி விடுவோம் என்று, ருத்ரனாயிருக்கிறபோது உள்பட எப்போதும் - ஸதா – அவன் சிவன் தான் என்று இன்னொரு மந்த்ரம் கொடுத்து விட்டது! எங்கே கொடுத்திருக்கிறது என்றால்:
சிவனுக்கு ஐந்து முகங்கள். நாலு திசைகளைப் பார்த்து நாலு முகம், மேலே ஆகாசம் பார்க்க ஐந்தாவது முகம். ஸத்யோஜாதம் என்பது மேற்குப் பார்த்த முகம். வாமதேவம் – வடக்குப் பார்த்தது. அகோரம் – தெற்கு. தத்புருஷம் – கிழக்கு. முடிவாக ஊர்தவ முகம் என்று ஆகாசம் பார்க்க உள்ள முகத்துக்கு ஈசானம் என்று பெயர். இந்த ஐந்து முகங்களுக்கும் வேத மந்திரங்கள் இருக்கின்றன; ‘நாராயணவல்லி’யில்* அவற்றைக் கொடுத்திருக்கிறது.
அதில் ஈசான முகத்துக்கான மந்த்ரந்தான் ஸதாசிவ நாமாவைச் சொல்லி, அதோடு ப்ரணவத்தைக் கூட்டி முடிகிறது. “அவன் ஸகல வித்யைகளுக்கும் ஈச்வரன். ‘ப்ரம்ம’ எனப்படுகிற வேதத்தின் நாயகன். நாலு முகத்தால் நாலு வேதம் சொல்லியே உயிர்களை ஸ்ருஷ்டிக்கும் ப்ரம்மாவுக்கும் அதிபதி. பரப்ரம்ம்மேயான அவன் எனக்கு மங்களம் செய்யும் சிவனாக இருக்கட்டும்!” என்று அந்த மந்த்ரம் சொல்லி, முத்தாரம் வைக்கிறாற்போல, ஸதாசிவ நாமத்தைச் சொல்லி, ப்ரணவாக்ஷரம் கூட்டி, ‘ஸதாசிவோம்’ என்று முடிக்கிறது.
ப்ரணவம் அதன் முடிகிற சப்தமான ‘ம்’ என்பதாகக் குறுகி ‘ஸதாசிவ’ என்பதோடு ஒட்டிக் கொண்டே ‘ஸதாசிவம்’ பிறந்திருக்கிறது.
இங்கே முதலில் மாயா லோக வியாபாரத்தில் கஷ்ட ஸுகங்கள் தரும் திரோதான மூர்த்தியான ஈச்வரனைச் சொல்லி, அப்புறம் அதிலிருந்து விடுவித்து மோக்ஷம் தரும் அநுக்ரஹ மூர்த்தியான ஸதாசிவனைச் சொல்லி, முடிவாக அந்த மோக்ஷ ஸ்வரூபமேயான ப்ரணவமும் அவன் தான் என்று காட்டியிருக்கிறது. மாண்டூக்ய உபநிஷதத்தில் ‘சாந்தம், அத்வைதம்’ என்று சொன்ன சிவம்தான் அது. அந்த உபநிஷத்தே ப்ரணவ விளக்கந்தான்.