சிவனும் சிவமும்
சிவம்; சிவன் இல்லை. சிவன்- அநுக்ரஹம் என்கிற கார்யம் செய்கிறவன். சிவம் – ஸகல கார்யமும் நின்று போய் அந்த அநுக்ரஹம் அநுபவ மாத்திரமாகப் பிரகாசிக்கிற பரப்ரம்ம நிலை!
அநுக்ரஹ மூர்த்தி ஸதாசிவன். அநுபவத்தில் அமூர்த்தியாயிருக்கும் ப்ரம்மம் ஸதாசிவம்.
அந்த அமூர்த்த ஸதாசிவம் தான் அநுக்ரஹத்துக்கே மூர்த்தியான ஸதாசிவனில் முடிகிற பஞ்ச க்ருத்ய மூர்த்திகளாகவும் மாயையில் கூத்தடிப்பது!
‘ஸத்’தோடு ஸம்பந்தப்பட்டதாக ‘ஸதா’ என்பதைச் சொல்லலாம். எப்போதும் மாறாமல், சாகாமல் இருக்கிறதே ஸத். ‘ஸத்யம்’ என்று நீட்டிச் சொல்கிற அடி ஆதாரமான மெய்ப்பொருள். ‘எப்போதும்’ என்றேனே, அதைக் காட்டுவதுதான் ‘ஸதா’. ஸத் – Eternity; ஸதா - Eternal.
சாந்தமாக என்றும் உள்ள ஸத்ய வஸ்து ஸதாசிவம். அந்த சாந்தம் மாயையில் சலித்து (சலனமுற்று)த்தான் ஸ்ருஷ்டி – ஸ்திதி – லய (ஸம்ஹார) – திரோதான – அநுக்ரஹங்கள் நடப்பது. வெளியிலே இப்படி சலிக்கிற அப்போதும், எப்போதும் – ஸதா – உள்ளே சாந்தம் சாந்தமாகவே இருக்கிறது. ஸ்ருஷ்டிக்கு முந்தி, லயத்துக்குப் பிந்தி ஸதாவும் சாந்த சிவம் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் மாயா ஸ்ருஷ்டியின் Base மாறிக்கொண்டேயிருந்து அப்புறம் அழிந்தே போகிற மாயா ஸ்ருஷ்டியின் மாறாத Base; அழிவேயில்லாத base. மரத்துக்கு base ஆன மண் மாதிரி அது. மண்ணில் விதை முளைக்கிறது. மரமாகிறது; அப்புறம் கடைசியில் அந்த மரம் மட்கிப் போகிறது. இதில் எத்தனையோ மாறுதல்கள்; முடிவாக அழிவு. விதையைத் தாங்கி உயிர் கொடுத்த மண்ணோ மாறாமலே இருக்கிறது. மாறாத அதன் மேலேயே விதை செடியானது; மரமானது; மரம் முற்றி, அப்புறம் மட்கியும் போனது! மட்கின மரமும் அந்த மண்ணோடேயேதான் மண்ணாக ஆகி விடுகிறது! அப்படி, மாயை நடக்கும் பிரபஞ்சத்துக்கும், அந்த மாயையையே நடத்தும் மஹேச்வரனுக்கும் ஸதாசிவமே base. அது மட்டுமில்லை; மாயையிலிருந்து விடுவிப்பதான அநுக்ரஹத்தைச் செய்யும் மூர்த்தியாக ஸதாசிவன் என்று இருக்கிறானே, அவனுக்கும் ஸதாசிவம் base. ஸதாசிவம் அமூர்த்தி, தத்வமயம்.
மாயா ப்ரபஞ்சம் எத்தனையோ கோடி கோடி வருஷம் நடந்து விட்டு – இத்தனை கோடி என்று கணக்கே இருக்கிறது – அப்புறம் ப்ரம்மத்தோடு ஐக்கியமாகிவிடும். அந்தக் கோடி கோடி காலத்தை ‘ஸதா’ என்று உபசாரமாகச் சொல்லி, அந்த ’ஸதா’வும் உள்ள ஈச்வரனை ஸதாசிவன் என்பது. ஆனால் அது உபசாரந்தான். நிஜமான ‘ஸதா’ மாயைக்கு அப்பாற்பட்ட ப்ரம்மந்தான். அதுவே ஸதாசிவம்.
மாய ப்ரபஞ்சம் உள்ளவரை அதை ஸதாவும் நடத்துபவன், அதிலிருந்து கடத்துபவன் ஸதாசிவன். கடந்தபின், மாயமும் ப்ரபஞ்சமும் அடிபட்டுப் போனபின் ஏக ஆத்மாவாக நிற்கிற சாந்த அத்வைதமே ஸதாசிவம்.