முருகன் பெயர்கள்
ஸதாசிவத்தோடேயே சேர்த்துச் சொல்ல வேண்டிய இன்னும் இரண்டு பெயர்கள் – இரண்டும் ஸுப்ரம்மண்ய ஸ்வாமியின் பெயர்களே! ஒன்று, ஸுப்ரம்மண்யம் என்கிறதே! ‘ஸுப்ரம்மண்யன்’ என்றும் பேர் வைத்துக் கொள்கிறோமானாலும், ஸுப்ரம்மண்யம் தான் ஜாஸ்தி இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஸ்வாமியின் ஒரு பெயராக ‘ஷண்முகம்’ என்றும் வைத்துக் கொள்கிறோம். ’ஷண்முகன்’ என்று வைத்துக் கொள்வதேயில்லை! அதையே தமிழில் ‘ஆறுமுகம்’ என்றும் ‘ஆறுமுகன்’ என்று இல்லவேயில்லை! எதனாலோ ஸம்ஸ்க்ருதமாக இருக்கிற ‘ஷண்முக’ப் பெயர்கூட பிராம்மணர்கள் வைத்துக் கொள்ளக் காணோம்! ‘குமரேச’, ‘குமாரஸ்வாமி’ப் பேர்களும் பிராம்மணர்களில் குறைச்சலாகவே வைத்துக் கொள்வதாகப் பார்க்கிறோம். ‘குமார்’ மட்டும் ஃபாஷனாகத் தொனிப்பதால் வீட்டுக்கு வீடு இருக்கிறது – அநேகமாக அது ஸுப்ரம்மண்ய நாமா என்பது தெரியாமலே! குமாரஸ்வாமியின் மஹாமந்த்ரமாக ‘ஷடக்ஷரீ’ என்ற ஆறெழுத்துக் கொண்ட ‘சரவணபவ’ நாமமிருக்கிறது. அப்படியிருந்தும், எதனாலோ அந்தப் பெயரும் ப்ராம்மணர்கள் ரொம்பவும் அபூர்வமாகவே வைத்துக் கொள்கிறார்கள்…
ஷண்முகன், சரவணன் முதலிய பேர்கள் எதனாலோ ப்ராம்மணர்கள் வைத்துக்கொள்ளாத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். குமாரஸ்வாமியின் பெயர்களில் ‘ஸுப்ரம்மண்ய’த்துக்கு அடுத்தபடியாக ‘ஸ்வாமிநாத’ப் பெயர்தான் ப்ராம்மணர்களிடம் நிறையப் பார்க்கிறோம். கார்த்திகேயன் ‘கார்த்திக்’ ஆகி, ஸமீப காலமாக அந்தப் பெயரும் நிறையப் பார்க்கிறோம். ‘குகன்’ என்று கொஞ்சம் கொஞ்சம். தக்ஷிணாமூர்த்தியான அப்பாவுக்கும் உபதேசித்தவர் என்பதால் ‘குருஸ்வாமி’, ‘குருமூர்த்தி’ என்ற பெயர்களும் ஸுப்ரம்மண்ய நாம்மாகவே (ப்ராம்மணர்கள்) வைக்கிறார்கள். ‘சிவகுரு’ என்றும் கொஞ்சம் கொஞ்சம். ’தேவஸேனாபதி’ – நல்ல ஸம்ஸ்கிருதப் பெயராக இருந்தாலும் ப்ராம்மணர்களில் எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். ஸ்கந்த நாமம் ஸுப்ரம்மண்ய பேர்களில் முக்யமான ஒன்று. அவரைப் பற்றிய புராணத்துக்கே ‘ஸ்காந்தம்’, ‘ஸ்கந்த புராணம்’ என்று தானே பெயர்? ஆனால் கந்தஸ்வாமி என்ற பெயர் அப்ராம்மணர்கள் வைத்துக் கொள்கிற மாதிரி ப்ராம்மணர்களில் காணோம்; எங்கேயோ சிலபேர்தான் அப்படி இருக்கிறார்கள்… ’ஸதாசிவம்’ (என்பதில் வரும்) ‘ம்’ சமாசாரம் எங்கேயோ இழுத்துக் கொண்டு போய்விட்டது. விஷயத்துக்கு வருகிறேன்.
‘ம்’மில் முடியும் ஸுப்ரம்மண்யம், ஷண்முகம், ஆறுமுகம் எல்லாம் ’ஸதாசிவம்’ ஸம்பந்தப்பட்ட தத்வ விசேஷமுள்ள பெயர்கள். இவை வேத மந்த்ரம் ஸதாசிவமாகச் சொல்லி ஸ்துதிக்கும் ஈச்வரனின் ஐந்தாவது முகத்தோடு ஆறாவது முகமாக இன்னொன்றையும் கூட்டிக்காட்டுகிற பெயர்கள்!